Thursday, April 25, 2019


முத்த யுத்தம்
26
டப் பாவி மக்கா... எப்பிடியும் பத்தைந்நூறு ரூவ்வா இருக்கும். ஒரே நாள் வசூல். இனி எப்ப பண்ணையார் தண்ணியடிக்க. எப்ப நாம அதைக் கண்ணால பார்க்க.. அது வந்தாப்ல அப்டீ போக்கு காட்டிவிட்டு, ரயில்வே ஸ்டேஷன்ல நிக்காமப் போன ரயில் மாதிரி, எலெக்ஷன்ல ஓட்டுக் கேக்க வந்த கட்சித் தலைவர் மாதிரி போயே விட்டது.
அட எடுத்தவன் சரியான நப்பி போலுக்கு. சொந்தப் பணம் ஒரு பதினஞ்சி ரூவ்வா வெச்சிருந்தான் ஐயம். அதையும்ல நவட்டிட்டான் சண்டாளப் பாவி.
அன்டிராயர் மட்டும் விட்டுட்டான். ஏன்னு தெர்ல.
இரக்கமற்ற வேலுச்சாமி ஒழிக. இத்தனை நாள் அனுபவிச்சியேடா படுபாவி. ஒருநா ஒரேயொரு நாள் ஏதோ என்னாலானது ஒரு பிடி பிடிச்சேன்னு பாத்தா...
முகம் கழுவித் துடைத்துக் கொண்டபோது அந்த இருள், அந்த சோகத்தைத் துடைக்க முடியல்ல. கண்கள் சிவந்து கிடந்தன. சிறு தலைவலி. தண்ணியடிச்ச மறுநாளின் அடையாளங்கள்.
வேலுச்சாமியிடம் கேட்கலாமா வேண்டாமா என்கிற சிறு குழப்பம்.
நமக்கு துட்டு விசயத்தில் நல்ல நாளாட்டம் இருந்ததுன்னு பாத்தா. அவனுக்கு டபுள் மடங்கு சூப்பர் நாளாயிட்டதே அது. காரிய ஜித்தன். இந்த வளாகத்துள் கூண்டுச் சிங்கம் போல அவன் உலவுகிறான். அட நாந்தான் உள்ள தவறி விழுந்த மானாயிட்டேன்.
இனி உஷாரா யிருப்பம். என்ன பண்றது?
ஐயம் எந்திருச்சதுமே தன் துட்டை சரி பார்த்தான். இல்லைன்னதும் இறங்கும்போது கவனித்தான். முதலாளி உள்ளறையில் தூங்கிட்டிருந்தார். இருந்த ஆத்திரத்துக்கு போயி அவர் சட்டைப் பையில் இன்னும் ஏதாவது சிக்குமா என்று குடைய ஒரு வேகம்.. மவனே, பொன்முட்டையிடும் வாத்து. அறுத்துப்பிடாதே..
அது மட்டுமில்லை. பெல்ட் அடிக்கு அவன் தயாராயும் இல்லை.
நடந்த நிகழ்ச்சிகள் ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்தாப் போல மனசில் வந்தன. எல்லாம் முடிந்தது. படத்தில் கிளைமாக்ஸ் வரும்னு பாத்தா, படம் பாத்தவனின் வாழ்க்கையில் கிளைமாக்ஸ்!
ஸ்ரீவில்லிபுத்தூர் மணத்தது... சர்க்கரைப் பாகு போன்ற இனிப்புச் சிரிப்புடன் பாகி. காபி தந்தாள். காபி நினைத்தூட்டும் தாய் இவள். விடியல் அவளை... இன்று புதிதாய்ப் பிறந்தோம் என மலர்த்தியிருந்தது. வாழ்க்கை இரவென்றும் பகலென்றும் ரெண்டு துண்டாக அல்லவா காணக் கிடைக்கிறது.
முதலாளியின் இன்றைய நிகழ்ச்சிகள் என்ன தெர்ல. வீட்டுக்குப் போயி இன்னுங் கொஞ்சம் படுத்திருந்திட்டு, சாயந்தரப் போது வாக்கில் திரும்பினம்னா நல்லது. முதலாளியிடம் கேட்காமல் எப்பிடிப் போறது.
அவரு வனஜாவைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு மாடில கெட்க்காரு! அவரு மனக் கதவைத் தட்டி இன்னொரு கிளைமாக்ஸ் ஏற்படுத்த வேணான்னிருந்தது.
வைக்கோலை எடுத்து பிரித்து விரித்துக் கொண்டிருந்தான் அந்த ராஸ்கோல் வேலுச்சாமி.. உற்சாகமாய் ஒரு பாட்டு வேற வாயில். தாழையாம் பூ முடித்து... ஐயத்துக்கு தொண்டையில் தூக்கம் விக்கியது. மண்டையில் மொட்டையடித்துன்னு பாடறதா?
டி.வி.யில் படம் மாத்தி மாத்திப் பாத்தாப்ல. அவன் வாழ்வில் நேத்து இடைவேளை வரை எம்ஜியார் படம்போல உற்சாகம். இன்டர்வலுக்குப் பின்? சிவாஜி படம் போல ஒரே சோகம்.
"வணக்கம் மாப்ள. நல்ல் தூக்கம் போலுக்கு" என்றான் வேலுச்சாமி உற்சாகமாய்.
தூக்கமா. துக்கம்...
சட்டென்று கேட்டான். "வேலு, இப்டி- கீப்பாக்கெட துட்டு... பத்தைந்நூறு வெச்சிருந்தேன். பாத்தியா?
"எவ்வளவு?"
"ஐந்நூறு..."
"காணமா?" என்று வைக்கோலை எறிந்துவிட்டுக் கிட்ட வந்தான். வேலுச்சாமி. பிறவி நடிகனா யிருக்கான். பெரிய பெரிய நடிகனை யெல்லாம் பீட் அடிச்சிருவான் போலுக்கே.
"பைல வெச்ச இடத்துல துட்டு இருந்தா ஒங்கிட்ட ஏன்யா விசாரிக்கிறேன்?"
வேலுச்சாமி மனசில் அதை - இவனது சோகத்தை ரசிக்கிற பரவசம் முகத்தில் தெரியுது. "பாத்து வெச்சிக்கிறணும் பெருமாளு. இங்கத்த வேலைக்காரங்க ரொம்ப மோசம்.. நேத்து மொதலாளிய யாரு உள்ள கூட்டிட்டுப் போயி படுக்க வெச்சாங்கன்னு விசாரி.. விட்றாதே?"
"நீ இல்லியா?"
அவன் முகம் மாறியது. "நான் வேற வேலையா இருந்தேன்."
"என்ன வேலை?"
"அதைப் பத்தி உனக்கென்ன?" என்றான் விரைப்பாய்.
கிளைமாக்சில் இருந்தான், என்று நினைத்துக் கொண்டான் பெருமாள்.
"அது சரி பெருமாளு.. உனக்கேது அவ்ள பணம்?" என்று பதில்ப் பிடி போட்டான் வேலுச்சாமி.
ஐயம் அவனை ஒரு விநாடி அவனைப் பார்த்தான். பெருமூச்சு விட்டான். "அதைப் பத்தி உனக்கென்ன?" என்றான்.
"எடேய்.... மொதலாளி தண்ணி போட்டாரா?" என அவன் தொடர்ந்து விசாரித்தது பெருமாளுக்குப் பிடிக்கவில்லை "நீ போயி வாங்கிட்டு வந்தியா?" என்று தொடர்ந்து கேட்டான் வேலுச்சாமி.
"ஜாக்கி ஒண்ணும் சுகமில்லை" என்றான் பெருமாள் சுருக்கமாய். நான் போனதும் வைக்கோலில் புது ஜாக்கி பாட்டிலையைத் தேடுவான். தேடட்டும் நாயி.
ஒருவேளை மைக் டைசனைக் கண்டுக்கிட்டால் என்று கவலையும் வந்தது கூடவே.
சரி, நனைஞ்சது நனைச்சிட்டம். இனி முக்காடு அவசியம் இல்லை. ஆனபடி ஆவட்டும்.
"யாரது மாப்ளை வனஜா?"
"ஆரு?" என்று வேலுச்சாமி திரும்பிப் பார்த்தான். "அவரு சொன்னாரா?"
"இவரோட முத சம்சாரமா?"
அட ஆச்சரியம்.
"இல்ல" என்று தலையாட்டினான் வேலுச்சாமி.
"நம்ம எசமானியம்மா.. (உன் லவ்வு) ரெண்டாவது சம்சாரமா இவருக்கு?"
அதற்கும் இல்லை என்று தலையாட்டினான்.
"அட சொல்லித் தொலை வேலுச்சாமி.."
மூணாவது கிளைமாக்ஸா இது?
"வனஜா இவரோட லவ்வு" என்றான் வேலுச்சாமி. கதை சுவாரஸ்யம் கூடிப் போச்சி. பலமான முத்தயுத்தம் நடந்திருக்கும் போலுக்கப்போவ்.
முதலாம் பானிபட்போர். ரெண்டாம் பானிபட்போர்ம்பாங்களே அது மாதிரி.
·          
வனஜா என்றொரு வன தேவதை, பழம் பொறுக்க வந்து அவர் மனதில் புகுந்து கொண்டிருக்கிறாள்.
துப்பாக்கி ஏந்தித் திரிந்த அண்ணாச்சி பூ ஏந்தித் திரிகிற காட்சி.
ஒரு சினிமா பாடல் அங்க போட்டுக்கிடலாம். சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ... செந்தாமரை இரு கண்ணானதோ... எவன் பாட்டெழுதியது? இலக்கணம் தெரியாத ஆளு... இரு கண்ணானதோன்னா.. செந்தாமரைகள்னு பன்மை வராண்டாமா?
கிளைமாக்சில் இன்னொரு கிளைமாக்ஸ். விசயம் அப்பாவுக்குத் தெரிந்தது. அவரது, 'கீ' வசனம் பேசிட்டாரு. "எடு செருப்ப!"
ஏன் அவரே குனிஞ்சி எடுத்துக்கிறப்படாதோ?... தொப்பை இடிக்கும் போல.
எம்ஜியார் படம் சிவாஜி படமாயிட்டது. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? யார் படம்.. சிவாஜிதானே? அட பாடறது சரோஜதேவி. அது மாத்திரம் ஞாபகம் இருக்கு. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
பாரி மகளிர் ரேன்ஜில் பண்ணையார் எடுப்பு - அன்றொரு நாள் இதே இரவில் அவளிருந்தாள் என் அருகே.. நான் அடைக்கலம் தந்தேன் என்னுயிரை... நீ அறியாயோ நிலவே... உடனே பட்டணத்து ரயில்வே ஸ்டேஷன் பிச்சைக்காரன் ஆர்மோனியப் பிளிறல் பிளிறுகிறான்.
பாகீஸ்வரிக்கும் பண்ணையாருக்கும் கல்யாணம். பாகீ கல்யா..ஆ.....ஆ...ண வைபோகமே.... என்று சென்டிமென்டல் பாடல். பெருமாள் முதலில் நினைத்தது. கெட்டிமேளம் சொந்தக்காரனின் இரைச்சலை அடக்க அல்ல. பாகியின் மன இரைச்சலை அடக்க. என நினைத்திருந்தான். அது ஒரு கிளைமாக்ஸ். ஆனா கதையின் திடுக் திருப்பம்.
என்ன? மாப்ளை பக்கத்தில் பாத்தா.. கரடிக்குட்டி பாகிக்குட்டி.. பயந்துட்டாருன்றியா? அட அதில்லய்யா மாப்ளை மனசின் இரைச்சலை அடக்க கெட்டி மேளம்லா? டபுள் கிளைமாக்ஸ்... இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாகம்பானே சன் டிவியில் அதைப் போல.
கெட்டிமேளம் கெட்ட மேளம் ஆயிட்டது.
புதுமையிலும் புதுமை ஃபஸ்ட் நைட்டில் சோகப்பாட்டு. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் வேறொருத்தியுடன் ஃபஸ்ட் நைட் கொண்டாட வேண்டும்...
ரொம்ப ஆடாதே ஐயம். இப்டி ஆட்டமா ஆடி. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்றாப்ல. உள்ள துட்டும் போச்சு உனக்கு...
·          
குடி வெறியில் அவர் சொன்ன அரைக்குறைக் கதை. அதை இவன் புரிந்து கொண்டது அதற்கும் மேலே... என்று புரிந்தது. அண்ணாச்சியின் குழந்தைகள் வயசு அதிகம் இல்லை என்பதை அவன் கவனிச்சிருக்க வேண்டாமா? அட, பூபதி அந்த ரேவதி... பாகியின் சாயலில் இருப்பதை, ஆலோசிச்சிருக்கண்டாமா?
இன்னம் எத்தனை கிளைமாக்ஸ் வருதோ கதைல? தெர்ல!
பிடிக்காத மனசுஒட்டாத தாம்பத்யம். சும்மா வனஜா வனஜான்னா கல்யாணம் முடிச்சவளுக்கு சுர்ர்ர்ருனு மூக்குல மொளகாப்பழ நெடி ஏறாதா? இவரு கூட குடித்தனம் நடத்த எவ சம்மதிப்பா?
முதல் மரியாதை கதை போலப் போகுதேய்யா..
மனசு ஒட்டாம உடம்பு மாத்திரம் ஒட்டி... ரெண்டு குட்டி!
தனக்கும் தன் மனைவிக்குமான உறவின் நெகிழ்ந்த கணங்கள்.. அந்தரங்கப் பரிமாறல்கள். உடம்பு மற்றும் மனசின் சமிக்ஞைகள்.. அந்த ஓட்டுதல்... சரி. ஒட்ட்ட்டுதல்னே வெச்சிக்குவம். அவர்களிடையே இல்லை. பேச்சு வார்த்தை அதிகம் இல்லை.
மனைவியைக் கணவனே கற்பழிக்கிறாப் போல ஆயிட்டதேய்யா? என்ன வித்தியாசமான கிளைமாக்ஸ். வாழ்க்கைல நிறைய பேருக்கு அப்பிடி ஆகி விடுகிறது பாவம் முத்தமே யுத்தமுத்தமா அயிருது!
உறவுப் பகை, உடனே விவாகரத்து, பிரிந்து போதல்...னுல்லாம் சொல்லலாம். வாழ்க்கையில் அதெல்லாம் சகஜமா என்ன?
உள்ளூற காயம் சுமந்து வாழ்தல். காலமல்ல அது ஆலகாலம்.
பாகிஸ்வரிகளுக்கும் புருஷன் வேண்டாம். ஆனா இந்த சொத்து சுகம் அந்தஸ்து மரியாதை எல்லாம் வேண்டியிருக்கிறது! கொழுக்கட்டை ஒரு தன்மையான மாமியார். டிங் டாங் மணியடிக்கும் வித்தியாசமான யானைக்குட்டி. கழுத்துக் கழலை மகாராணி.. என வேறுவகையான.. வாழ்க்கையின் முடிச்சுகளில்.. பாண்டித்துரை போட்ட மூன்று முடிச்சு தவிர.. அவள் தாமரைக் கொடியில் சிக்கினாப் போல சிக்கிக் கொள்கிறாள். தாமரை இலைத் தண்ணீர் போல ஓட்டாத வாழ்க்கை. என்றாலும் பழகி விட்டது.
வாழ்க்கை கொஞ்சம் துவர்ப்பு, கொஞ்சூண்டு வாசனையும் கூடவே. ஸ்ரீவில்லிபுத்தூர் கூந்தல் தூள் போல.
அவசரப் படபடப்புக்கு வைக்கப் படப்பு. வேலுச்சாமி.
வெயிட்டிங் விஸ்ட்னு. ஆர்.ஏ.சி.னு எதும் உண்டா பாகீ? டாய்!
பாகிக்கு ஜாக்கி பிடிக்குமா?
கற்பனை ஓவராப் போயிட்டிருக்கு. 'ஜாக்கி' அடிக்கிற ஜாக்கி.. அந்த வேலுச்சாமி... அவனே அவளது ஜாக்கி ஆயிட்டாப்ல.. ரெட்டைப் புலவர் பாடல் ஞாபகம் வருது. இக்கலிங்கம் போனால் என், ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை. சாரி. சொக்கலிங்கம் அல்ல. வேலுச்சாமி. டாய் மகனே. காபி வாங்கிக் குடிச்சிட்டு கற்பனையை ரொம்ப நீள விடறே. சுருக்கு.
புதிய நாள் அதுபாட்டுக்கு ஆரம்பிக்கிறது... பூபதியின் அவசர எழுச்சியுடன். போய் டமாலென்று லெட்ரின் கதவை முட்டிக் கொண்டிருக்கிறான் அவன். கன்னுக்குட்டி கயிற்றை அறுத்துக்கிட்டு ஓட முயன்று மரத்தை முட்டிட்டிருக்கும். அதைப் போல.
காலை அவனுக்கு வயித்துக்குள்ள கன்னுக்குட்டி முட்டிதான் அவனே எழுந்து கொள்வான் போல.
நெல்லடுக்கிய உள்ளறையில் வெளிச்சம் தாராளமாய்ப் பழங்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு லாரியளவு முதலாளி விற்றிருக்கலாம். அதான் பைல துட்டு சரளமாப் புரண்டதோ என்னமோ? தெர்ல.
என் காசு போச்சேய்யா.. அதைச் சொல்லு. என மனம் அழுதது..
அந்த வனஜா எப்பிடி இருப்பா? - என மனசைத் தட்டி யெழுப்பினான். நம்ம பாண்டித்துரை வேட்டையாடப் போனார் துப்பாக்கியோட காற்று வாங்கப் போனேன். கவிதை வாங்கி வந்தேன்றாப்ல.. வேட்டையாடப் போனார். லவ்வு வாங்கி வந்தார்.
அவரு கைல இருந்த துப்பாக்கிய அவங்கப்பா பிடுங்கி நெஞ்சுக்குக் குறி வெச்சிட்டாரு. அப்பாவுக்கு பயந்த மனுசன். இவரு கதை பாகீஸ்வரி கல்யாணத்துல முடிஞ்சது. அந்த வனஜா கதை என்னாச்சி?
இருக்கிற மாமரத்தில் ஒரு மரத்தில் அவ துக்கில் தொங்கிட்டாளா? அதுலேர்ந்து பண்ணையார் காட்டுப் பக்கமே போறதில்லன்னு ஒரு யூகம்.
பூபதி வெற்றி வீரனாய்த் திரும்ப வந்தான்.
கிளைமாக்ஸ் போரடிக்கிறது. ஆன்ட்டிகிளைமாக்ஸ். வேலுச்சாமி பின் கட்டுத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தான்.
நெல் மூட்டை அடுக்கிய அறையில் அவன் சட்டை அவிழ்த்து ஆணியில் மாட்டியிருந்தது. கைப்பக்கம் வீங்கிய மடிப்பு.
நம்ம ஐயம் பரபரப்பாயிட்டாப்ல. போயி மடிப்பை விரிச்சிப் பாத்தால். ஆகா. அதே பணம். அதே புத்தம் புது தாள்கள். மவனே எடுக்கலைன்னு பொய்யா சொல்றே?
பீடிக்கட்டை நீயே வெச்சிக்க. ஐந்நூறை அப்டியே எடுத்துக்க ஆவேசம் வந்தது. ச்சே வேணாம். என இரக்கம் கொண்டான் ஐயம் பெருமாள். உனக்கு பாதி எனக்கு பாதி... சரிதானே? இதை அடுத்த பேச்சு வார்த்தையில் எதிர்கால டீலாகவும் வெச்சிக்குவம்டா?
அம்பது ருவ்வாத் தான் இல்ல. இந்த முறை - எனக்கு முந்நூறு உனக்கு இருநூறு - நான் 'உழைச்சி'ச் சம்பாதிச்சதில்லா! என் கணக்கு அதிகம். ஒகே?
உலகம் உற்சாகமாய்த்தான் இருந்தது.
கேட்டா. ஆமா நாந்தான் எடுத்துகிட்டேன்னு சொல்லுவம்.. என்ன பயம்?
வேலுச்சாமி, பாகியில் எனக்கு பங்கு உண்டா? அவள் பொன்மூட்டை எனக்கும் இடட்டுமே...
வேலுச்சாமி பார்க்குமுன்னால் வீட்டுக்குப் போக பரபரப்பாய் இருந்தது.
உள்ளே ரேடியோவில் பாட்டு. சிறப்புத் தேன்கிண்ண சிறப்பு அறுவை. அதற்கேற்றாப் போல முதல் பாடல் ரம் பம் பம் ஆரம்பம்.. ரம்பம் ஆரம்பம்.
வேலுச்சாமிக்கு விவரம் தெரியாது. செதுக்கி ஒதுக்கிய புல்லும் ஒரு மாதிரியான வேட்டி - தலைப்பாக் கட்டுமா இவனைப் பார்த்துப் புன்னகையுடன் அந்த அபாயகரமான கேள்வி கேட்டான்.
"பெருமாளு, எனக்குக் கார் ஓட்டக் கத்துத் தரியா?"
"உனக்கு வில் வண்டி. எனக்கு கார் - முதலைக்குத் தண்ணி. யானைக்குத் தரை." என்றான் பெருமாள். எசமானியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான் சைக்கிளில். "சாயக்குடி வரை போயிட்டு வரணும் அம்மா, அவசரம்னா நம்ப மூனா பானா கடைக்கு ஒரு போன் போட்டு தாக்கல் சொன்னா வந்திர்றேன்.“
"சரி" என்று புன்னகைத்தாள். என்ன அழகு. கிட்ட வாயேன் ஸ்ரீவில்லிபுத்தூர்? டாய் நேரமாயிட்டது.
*
*
சனிதோறும் தொடர்கிறது
storysankar@gmail.com
91 9789987842 - 91 9445016842


Thursday, April 18, 2019


தொடர்கதை/எஸ்.சங்கரநாராயணன்

முத்த யுத்தம்
25
 *
டேடே, முத்தயுத்தம் ஆரம்பிச்சிட்டது போலுக்கே. வேலுச்சாமி? அட பாவி மனுசா. என்ன புண்ணியம் பண்ணி இப்டி ஒரு வாழ்க்கை அனுபவிக்கியோ?
இந்த ஜென்மத்துல பாவம் பண்ணி வாழ்க்கையை சுகமா அனுபவிக்கவே போன ஜென்மப் புண்ணியம் வேணும்ல...
லேசான இருட்டு, அவனே தட்டுத் தடுமாறி நடக்கான். கையில் பாட்டில். யாரும் பாத்திறப்படாதேன்னு வீட்டுப் பின்புறம் பதுங்கிப் பதுங்கி சத்தமில்லாமல் போனான். உள்ளதான் கிளைமேக்ஸ். தொலைக்காட்சித் திரைபடத்தில் என்றால். வெளியயுமா சூப்பர்!
இருட்டு, நான் வைக்கப் படப்பைத் தடவுகிறேன். ஜாக்கி இல்லை. ஆச்சரியமா இருந்தது. அதைவிட ஆச்சரியம். படப்பின் மத்த பகுதியில் சத்தம், முத்தச் சத்தம். என்னவோ பாம்புதான் பதுங்கிட்டு வெளியேறுதோன்னு பாத்தா....
இது மனுசப் பாம்பு.
வேலுச்சாமி நீ ஹீரோவா வில்லனா?
பாகிக்குட்டிக்கு ஹீரோ. பண்ணையாரின் வில்லன்!
அப்ப எனக்கு?
தெர்ல! போகப் போகத் தெரியும். அந்தப் பூவின் வாசம் புரியும். உலகத்தின் முதல் கறுத்த பூ. யானைக்குட்டி பாகிக்குட்டி முதல் பார்வைக்கு அந்தக் காட்சி தாக்கிட்டது. அடங் ஙொய்யா. தலைல இளநி விழுந்தாப்ல... மொதல்ல அதிர்ச்சி! அடுத்த கணம் சிரிப்பு தாள முடியல்ல. அவனால முடிஞ்சது அவ்ளதான்னு.. பாட்டிலை அழுத்தமா செருகிட்டு திரும்ப மாடி யேறிட்டான். படபடப்பு. மூச்சு திகைத்தது.. வேகவேகமா சைக்கிளல வந்தாப்ல. அத்தோடு ஒரு வேர்வை குப்பென அப்பியது. முள்ளில போயி சைக்கிளை ஏத்திக் கீழ விழுந்தாப்ல. அங்கங்க சிராய்ச்சிக் கிட்டாப் போல.... அத்தோடு சிரிப்பு. திரும்பிப் பார்த்தா பாண்டித்துரை தூங்கிட்டிருக்காரு... வாயைப் பொளந்துக்கிட்டு. வெறுன்ன வாயைப் பொளந்து என்ன செய்ய?
வேட்டி நெகிழ்ந்து கிடக்கு. அதைப் பார்க்க இன்னும் சிரிப்பு.
பாகீ?.... என்று மனம் சத்தமெடுத்தது. கருந்திரட்சி. கருப்பு வெண்ணெய். சமையலறையில் இருந்து அவள் வெளிவர ஒரு ஸ்ரீவில்லிபுத்தூர் சீயக்காய்த்தூள்... குளிச்ச ஜோருக்கு வாசம் வரும்.. உனக்குப் பிடிக்குமா வேலுச்சாமி? படுபாவி. சண்டாளா. மாட்டைக் குளிப்பாட்டச் சொன்னா அவன் பாரப்பா மனுசாளையே குளிப்பாட்டறான்? தேறிட்டான்னு அர்த்தம்.
தமிழ்ல ஒரு வசனம் உண்டு - பெண்டாட்டி செத்து கவலைப் படறியேன்னாளாம்... அவன், நீயே வாயேண்டி வப்பாட்டியான்னானாம்! அந்தக் கதையாட்டம்.
வைக்கப் படப்பில் புதையுண்டு ஆயிரம் ரகசியங்கள் கிடக்கும் போலுக்கேய்யா...
இருட்டுக்குள் இருட்டு போல பாகி. குகையிருட்டு. சரி... பசிக்கு எருமைதான் கயித்தை அவுத்துக்கிட்டு வைக்கப் படப்புக்கு ஒதுங்கிட்டதுன்னு பார்த்தா. இது வேறு எருமை பாகி!
இது வேற பசி!
பண்ணையார் வீடுகளில். பணக்கார வீடுகளில் எத்தனை கதைகள்.
உள்ளே இருக்கிற ஃபோடுசுக்கு (ஃபோர்ஸ்) போதையே சப்புனு போச்சி. சரி போயி பாட்டிலை எடுக்கப் போக முடியல்ல... டைசன் போதையே அடங்கிச்சின்னா, ஆச்சரியம்தான்.
திரும்பி முதலாளியைப் பார்த்தான். பாகீக்கு என்னைப் பிடிக்காது. அவளுக்கு அந்த வேலுச்சாமியப் பிடிச்சிருக்கு. உமக்கு? உமக்கு சனி பிடிச்சிருக்கு..
சினிமாவில் காணாத கதையா இருக்கேய்யா. பண்ணையார் அட்டகாசம்தான் விலாவாரியா வரும். பண்ணையாருக்கு எதிரா இந்த மாதிரி கதை சுவாரஸ்யமா இருக்கு. இப்டிக் கதைங்க... கொஞ்சம் வயசாளிங்களின் காதல்.... கள்ளக் காதல். சினிமாவில் வர்றதில்லை.
ஏன்?
தெர்ல..
அதற்கு தினத்தந்தி!
சரி மாப்ளை. இந்தக் கதைக்குத் தலைப்பு.. ஆ, முத்தயுத்தம்! நல்லாத்தான் இருக்கு. இல்ல? மன்மத அம்புகளால் யுத்தம். யானைப் படைக்கு பதிலா எருமைப் படை சாராயம் கலந்த, வியர்வை கலந்த, என்னென்னமோ கலந்த வைக்கோல் வீட்டு எருமை சாப்பிடுது.
பாண்டித்துரை வித்தியாசமான ஆளு. வில்ல வள்ளல். அப்டின்னா பாகி? வில்லி வள்ளி.
கால காலமாய்க் காத்திருந்த டைசன். போதை அடங்கிட்டது. இன்னொரு பெக் ஏத்தினா கிக் திருப்பியும் ஏத்திக்கிர்லாம். கீழ கிளைமாக்ஸ் முடிஞ்சிருக்குமா தெர்ல. போயி டிஸ்டர்ப் பண்ண மனசில்லை.
படத்தின் கிளைமாக்ஸையும் வீட்டின் கிளைமாக்ஸையும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினான். சும்மாவா? ஐயம் பெருமாள் பெரிய ஆராய்ச்சியாளன்லா?
சமுதாயத்தில் பல்வேறு வாழ்க்கை மட்டங்கள் இருக்கு. வர்க்க பேதங்கள். அதுக்குத் தக்ன வாழ்வம்சங்களும் அமையுதப்பா. தவிரவும் 'இந்த' மாதிரி விசயமெல்லாம் சுரப்பிகளின் அட்டகாசம். மனுசாள் என்ன பண்ணுவா பாவம்? இதுங்க சும்மா கெடன்னாலும் அதுங்க- பேயி.. சும்மா விடாதுன்னு தோணுது.
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோ?-ங்கான். யாரு? நம்ம பாரதி!
திருட்டுப் பண்டத்துக்கு ருசி. அதிகம்தானா? ருசித்துச் சாப்பிட ஆருக்குதான் பிடிக்காது சொல்லும்... எல்லா தர்ம ஞாயமும் பசி பாக்கிற வரைதான். சாமியாருங்க எல்லாக் கதையும் சொல்வாங்க. ருசி பாக்காத ஆசாமிங்க.
நாம சாமியாரும் இல்லை. ருசி பாக்காத ஆளும் இல்லை. நாட்ல அவனவன் தாக்குப் பிடிக்கிறதே... சிரிச்சிறப்படாது. ஆனா அதான் உண்மை. ஒரு பயத்துலதான்னேன். குப்புனு வேர்வை அப்பிருதுல்லா.. நினைக்கவே உள்ள ஒரு குளிர்.
மனசு வேற. உடம்பு வேற. ரெண்டும் ஒரே மாதிரி வேலை செய்யணும்னு என்ன இருக்கு?
இதுல இன்னொரு விசேஷம் தெரிஞ்சிக்கிடணும். ஒரு தலைமுறைன்றது இருபது வருசம்ங்காங்க. அப்புறம் வாழ்க்கை ரெண்டாம் பாகம். இருபத்தி ஒண்ணு முதல் நாற்பது வரை நாற்பதுக்குப் பிறகு? மூணாம் பாகம்னு வெச்சிக்கலாம்.
ஒவ்வொரு பாகத்லயும் வாழ்க்கைத் தரம், அறிவுத் தரம் ஒவ்வொருந்தரோட சிந்தனைத் தளம்... எல்லாம் மாறுதுன்னு ஒரு கணக்கு. இருபது வயசில பாத்தேனே, அதே ஆள், நாப்பது வயசில அதேமாதிரி இருக்கானா என்ன? இருக்க முடியுமா என்ன?
இருபது வயசில கம்யூனிஸ்ட்டா இருப்பாங்க. நாப்பது வயசில ஆன்மிகவாதியா ஆயிருவாங்க..ன்னு நம்மள்ல வேடிக்கையா ஒரு வசனம்.. பாதி ஆளுங்க அப்டித்தான்.
மனசு அந்த இளமைப் பருவத்துக்கு ஏங்கும்.. ஆனா நோ சான்ஸ். தியேட்டர்ல ஹவுஸ் ஃபுல் போட்டாப்ல. துள்ளித் திரிந்த காலங்கள். பயமற்ற காலங்கள். டக்னு பாத்த பெண்ணுக்கு - பேனாவை எடுத்து - என்ன பேனாவோ! அது அவரவர் சௌகர்யம். அதைவிடு மாப்ள - பட்னு இந்த வயசில், நாப்பதாவது வயசில் லவ் லெட்டர் எழுதிற முடியுமா? அட எழுதி நீட்டிற முடியுமா?
எழுத முடிகிறவர்கள் தைரியசாலிகள்தான். அதில் சிலர் வெற்றி வீரர்களாக வலம் வருகிறார்கள். அவர்கள் பாக்கியசாலிகள். மனசில் தைரியம் அல்லது பாக்கெட்டில் துட்டு தேவை. இல்லாட்டி போத்திட்டுப் படுக்க வேண்டிதான்.
கல்வி கரையில. கற்பவை நாள் சில.
சாரி.... ஸ்பெல்லிங் மிஷ்டேக். கல்வி அல்ல. புள்ளி எக்ஷ்ட்ரா..
ஆச்சரியமான விசயம் ஒண்ணு. இப்டி பக்கத்து வீட்டில் சாய்கிற தென்னை மரங்கள் மனசளவில் ரொம்ப அமைதியான பார்ட்டிங்களா ஒருவேளை இருக்கும். உள்க் கொந்தளிப்பு அடங்கிட்டதில்லையா? என்ன மாப்ளே. சரியா?
காலை எழுந்ததும் திருநீறு பூசி அமைதியாக சாமி கும்பிட்டு விட்டு அந்த நாளைய பணிகளை பாகி துவங்குவதையும் பெருமாள் இப்படித்தான் புரிந்துகொள்ள விரும்பினான். அது அவளது தனிப்பட்ட வாழ்க்கை. ரகசிய வாழ்க்கை. அது உனககேன் தெரிய வேண்டும்? தெரிந்து கொள்ளவும் விமரிசிக்கவும் நாம யாரு? கூந்தல் உள்ளவ கொண்டை முடிகிறாள். மொட்டப் பொம்பளை மண்டையத் தடவிக்கிட்டுக் கெடக்க வேண்டிதான்.
ஒரு விஷயம் ரகசியமாய்க் கிடக்கையில் அழகாகவும் ஒளிபொருந்தி உள்ளெங்கும் பரவசமூட்டுவதாகவும் அமைகிறது - அதாவது அந்த ஆளுக்கு. அனுபவிக்கிற ஆளுக்கு. அதே வெளிய வந்திட்டா ஆபாசமாயிருது. அதாவது மத்த ஆளுக்கு.
எது ரைட்டு. எது தப்பு? ஆரு சொல்றதுன்னேன்? சொல்லேலாது. சொல்லப்படாது.
எனக்கு பாகி தாயம்சம். சோறு பரிந்தூட்டும் பெண்ணம்சம். அவள் பார்வையின் அன்பு ஒளி இதோ மனசில் இந்த இடத்தில் பத்திரமாய் இருக்கிறது. முதல்-காட்சிப் பதிவு அது. அவள் எனக்கு அறிமுகமான முதல் அனுபவப் பதிவு. ஒரு ரகசியம் பொட்டலம் போலச் சிந்தியிருக்கலாம். அதைக் கொச்சைப்படுத்த நான் யார்?
பரவாயில்லையே... என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான் பெருமாள். திருப்தியாய் இருந்தது. அதோட திரும்பி பண்ணையாரைப் பார்க்கிறான். உறங்கிக் கொண்டிருந்தார். சிரிப்பு வந்தது. அவர் முதல் சம்சாரத்தை இன்னும் மனசளவில் கொஞ்சிக் கொண்டிருக்கிறார், அட, அவளை இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறார். நல்ல விசயம்லா?
அவ இருந்த அளவுக்கு இவரு அவ காலையே கத்தித் திரிஞ்சிப்பாருன்னு தோன்றுகிறது. வேற பொம்பளை வாசனையே பிடிச்சிருக்க மாட்டாரு. அதேபோல அவளுக்குப் பிடிக்கலையா, சரின்னு தண்ணியடிக்க பழக்கத்தையும் ஏறக்கட்டி யிருக்கலாம். அல்லது எப்பவாச்சும் வெளியூர், கிளியூர் போன வெச்சிக்கரது. உள்ளூரில் வீடு திரும்பச்சில ஒழுங்கா... சமத்தா இருப்பம்னு இருந்திருப்பாரு. நல்ல விசயந்தானே!
நல்லாவோ நல்ல விசயம். ஏன்னா நானும் அப்பிடி ஆளுத்தானே!
இன்னொரு யோசனை, அவரு சொன்னதில் இருந்து பார்த்தா.. அந்த வனஜா.. அந்த மனுச சுந்திரியைப் பாக்கணுன்னிட்டிருக்கு. நம்ம பாண்டித்துரையையே போட்டு மாட்டிருக்கான்னா நல்ல மகராசிதான். இவருடைய ரசனையையே அவள் வளர்த்தும் இருக்கலாம். வேட்டையாடும் வேட்கையையும் அடங்கியிருக்கலாம்.
அவளுக்குப் பிறந்த குழந்தைகளே இந்த ரெண்டும் என்று பாண்டித்துரை பேச்சுவாக்கில் சொல்றாப்ல.
அதனாலேயே பாகிக்கு இந்தக் குழந்தைகள். இவர்... என மனம் ஒட்டாமலும் போயிருக்க வேண்டும். ரெண்டாங் கல்யாணம் செய்துக்கறது சாதாரன விசயமா என்ன? பொம்பளைங்க யார் அதை விரும்புவாங்க.. அட துட்டை வெச்சி நம்மளப் போட்டு மாட்டிட்டாரேன்னு அவளுக்குள்ள அந்த வன்மம் காய்ச்சிப்போயிக் கிடக்கும்லப்பா. பக்கத்து வீடு எதிர்வீடு மனுச மக்களைப் பார்க்கணும்ல... சிநேகிதிங்க மூஞ்சில முழிக்கணும் - வாழ்க்கைல எவ்ளவோ இருக்கு. அதிரடியா தாலி கட்டி, நீ பதிவிரதையா இருன்னா ஆச்சா? தாலி கட்டற முகூர்த்தத்தில் பிறத்தியார் சத்தம்... நாராசச் சத்தம் சேக்கப்படாதுன்னு கெட்டி மேளம் வாசிச்சாறது...
கல்யாணப் பொண்ணு மனசே இரையும் போது என்ன செய்யிறது? மனுசன் பாகிட்ட கேட்டிருக்க மாட்டாரு - கேக்கண்டாமா ஒரு வார்த்தை. என்னப் பிடிச்சிருக்கா? - அப்டின்னு.... கேக்காதது எத்தனை பெரிய தப்பு? எத்தனாம் பெரிய பாவம்?
அவரு விரும்பாமலேயே கூட பெத்தவங்களாப் பாத்து அவருக்கு பாகியைக் கட்டி வெச்சிருக்கலாம்.
ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் எத்தனையோ சுவாரஸ்ய முடிச்சுகள். சும்மா வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்றாப்ல பேசிறப்படாதில்லையா?
அவரவர் மனசுக்கு... அதும் அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கபடி சிலது சில சமயம் நியாயம்னு படுது.. சில சமயம் அடப்பாவி மக்கான்னு மனசு அலறுது - இல்லையா? என்ன நான் சொல்றது?
தண்ணியடிக்கது ரைட்டா?
தப்புங்க. அது நம்பூர்ல. ஒரே சூடு பூமி இது.. உனக்கு அந்த சமாச்சாரம் தேவையே இல்லை இங்கே. ஆனா வெள்ளைக்காரனுக்கு?.. அந்தப் பனியில் உடம்பு வெரைச்சிறாம் இருக்க... அந்தக் கோட்டு அந்த சூட்டு தொப்பி. போர்த்திய உடை விஸ்கி - உள்க் கதகதப்பு வேணும்ல. இல்லாட்டி உடம்பே அந்தப் பனியில... நடுங்கிப் போகும்லப்பா.
ஐயம் பெருமாள் ஒண்ணும் அறிவாளி அல்ல. எதோ தேடித் தடவிப் படிச்ச இலக்கியம்.. பரவால்ல ஆளை நிதானப் படுத்திருக்கு. நல்ல விசயந்தான்.
ஒரு பார்வைக்கு இந்த இலக்கியவாதிங்க சமுதாய எதிரிங்க போல... குழப்பவாதிங்க போல் தெரியும். ஆனா அவங்களுக்குள்ள ஒரு சுய நிதானம்.. வேற மாதிரியான அணுகுமுறை, வாழ்வின் ஒழுங்கு. கட்டுப்பாடு எல்லாம் இருக்கு. இல்லாமல்லாம் இல்லை...
மனிதனை, மனிதனுக்குள் இருக்கிற நல்ல மனிதனை வெளியே கொண்டுவர்ற வேலையை அவங்க துப்புரவாச் செய்யறாங்க. உன் மனசையும் கொச்சைப் படுத்தாமல் வெளி வாழ்க்கையையும் அகௌரவப்படுத்தாமல் ஒரு விசயம் அவங்களால சொல்ல முடியுது. நினைச்சிப் பார்க்க முடியுது.
அது சாதாரண ஆட்களுக்கு... வாழ்க்கையின் நெருக்கடின்னு அமையும் போதுதான் தெரிய வரும்.
போதையே அடங்கிட்டதேய்யா... என்று கவலையாய் இருந்தான். போதையாய் இருந்தால் மனசு இப்படியெல்லாம் சிந்திக்குமா?
அது சரி... நம்ம வெளுத்த தோல் அறிவாளிங்க... அவங்க தண்ணி யடிச்சா? அது இல்லாம முடியாதே அவங்களுக்கு. அப்படி இப்பிடி ரேஞ்ச்ல அறிவு அவங்களுக்கு வேலையே செய்யாதா என்ன?
ஆனா பெரிய அறிவாளிங்கன்னு திர்றாங்களே? அது பொய்யா?
தெர்ல.
மணி எக்குத்தப்பா ஆயிருக்கும்னு தோண்து.. என்று நினைக்கவே ஓஹ்னு கொட்டாயி விட்டான். தூக்கம் கண்ணைச் சுழற்றியது. யாராவது அவர்களைத் தேடி மாடிக்கு வந்திருக்கலாம். தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து திரும்பியும் போயிருக்கலாம். அல்லது பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்து விட்டு அவர்கள் சாப்பிட்டதை கவனித்து எழுப்ப மனசில்லாமல் போயிருக்கவும் கூடும்..
மாடியில் தனி உள்ளறை இருந்தது. படுக்கிற வசதியுடன் பண்ணையாரை அங்கே நல்லடக்கம் பண்ணியிருப்பார்கள்! இவனை அப்படியே விட்டிருப்பார்கள்..
அந்த வேலுச்சாமியே கூட இதையெல்லாம் செய்திருக்கக் கூடும்.
அது அவன்தான்னு தோணுது. கவனமாய் ஐயம் பெருமாள் அன்டிராயரில் பதுக்கி வெச்சிருந்த துட்டு... காலையில் எழுந்து பார்த்தான். காணம்.
தொடர்கிறது
91 9789987842 / 91 9445016842
storysankar@gmail.com