Thursday, February 28, 2019


முத்த யுத்தம்

18
யம்பெருமாளுக்கு பூமியே புது தினுசாய்ச் சுழல்கிறாப்போல ஒரு மயக்கம்.
அப்ப பட்டணத்தில் வெத்துப் பொழுதாகவே பெரிதும் கழிஞ்சது. என்ன வாழ்க்கை என்று வெறுப்படித்தன நியதிகள். வீட்டு ஞாபகம். விர தாபம்...  வேலையும் நிரந்தரமில்லை. பசி தெரியாத ஊர். தினசரி அடிதடி ரகளை என்று கிடக்கும் பகுதிகளில் குடியிருந்தான்.
எதுக்கெடுத்தாலும் ரகளை, தண்ணியடிச்சா மப்பு ஏறிப்போய் அதுக்கு ஒரு ரகளை நடுத்தெருவுக்கு வந்து, அதும் பொம்பளையாளுகளே வந்து வண்டை, வண்டையாய்க் கெட்ட வார்த்தை பேசினார்கள். ரோட்டு நடுவே சாக்கடை எடுத்துப் போட்டாப் போல... அவனைச் சுத்தி ஒரு கூட்டம். சரி ஆறுதல் சொல்லத்தான்னு பார்த்தா அதுக்கில்லை. அவள் என்ன கெட்ட வார்த்தை பேசறா...ன்னு கேட்டு ரசிக்கிற கூட்டம். யாரு, யாருக்குக் கள்ளப் புருசன்னு அவ அறிவிக்கையில் அதைக் காதாறக் கேட்கிறதில் ஒரு ருசி. சிரிப்பு. அட நாய்களா.
பயந்து கெடக்கும். திருட்டுப் பயலுகள் சாஸ்தி. அட அந்த ஜாமான் தமக்குத் தேவையா? அதில்லை. எவனும் கவனிக்க வில்லையா. அபேஸ் அடி! ஜன்னல் திறந்து கெடக்கா...  எது கையில் சிக்குதோ எடுத்திட்டு... விடு ஜூட். என்ன சித்தாந்தம். பட்டணத்து சித்தர்கள் அப்படித்தான். சின்னப் பயல்களாய் இருந்தாலுமே திருடவும் பறித்துக் கொள்ளவும் எவனும் தயங்கவே மாட்டங்கான். அனுபவிக்கிறதில்லை. டீல் விட்டு அத்து விட்டுர்றது. அது ஒரு சந்தோசம். அறுந்துட்டா, அது கீழ விழுறபோது எவன் பிடிக்கானோ அவனுக்குச் சொந்தம்! கீழ விழற பட்டத்தைப் பிடிக்க மேல பாத்திட்டே ஓடி அவனே கீழ விழுந்தாறது.
அதும் பேர் பட்டணம். நாகரிகத் தொட்டில். எலெக்ட்ரிக் சுடுகாடு!
கிராமத்தில் பொழுதுகள் பரபரப்பாய் இருந்தன. எதிர்பாராமல் ஐஸ் குச்சியாய் ஸ்ஸ்னு உறிஞ்ச உறிஞ்ச உள்ளே சிலிர்த்தன் நிபதிகள். பத்மினியின் தம்பியின் சைக்கிள் ஒண்ணு வெறுதே கிடந்தது பயனில்லாமல். அவன் பஜார்ப் பக்கம் அரை நிஜார் போட்டு சைக்கிள் கடை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். சைக்கிளை அவனே நல்ல மாதிரியாய் எண்ணெய் கிண்ணெய் போட்டுத் தயார் பண்ணிக் கொடுத்தாப்ல. ஸீட் அடி ஊக்கு வளையத்தில் அவளது பெட்ரோமாக்ஸ் மேன்டில் மாட்டிக்கிறாதபடி, பத்மினி சொல்லி, 'இஸெட்' ரேன்ஜில் பாதுகாப்பு நடவடிக்கைகள். அவஸ்தை அவளுக்கும்தானே?!
எதோ தம்பியாலான ஒத்தாசை!
தினசரி பி.பி.பி. வீட்டில் இருந்து கிளம்பிவரத் தோதாய் இருந்தது. எதிர்காத்து. தொடைவலி தெரியாமல் இருக்க விசில் அடித்தபடி வீட்டுக்கு வருவான். நிகழ்ச்சி நடுவே நிலைய வித்வான்களின் வாத்திய இசை!
மேலப் புதூரில் இருந்து காலையில் வர காத்து உதவி செய்யும். அது பிரச்னையில்லை, மேலதிகப் பாட்டுக்கள். உற்சாகத்துக்குக் குறைவில்லை. ஒருநாள் பி.பி.பி. பின்னாடி நிக்காரு. அது தெரியாமல் விசில் அடிக்கிறான். திரும்பிப் பாத்தா முதலாளி.
நெளிஞ்சான்.
"எலேய், எனக்கு விசிலடிக்கச் சொல்லித் தர்றியா?"ன்னாரு குழந்தையாட்டம்.
வாழ்க்கை ருசிக்கிறது. திருவிழா சீசன் வேற. குளித்து விட்டு அம்மணமாய் உடைமாற்ற ஓடும் பெண்குழந்தை போல பொழுது சுறுசுறுப்பாய் ஓடியது. ஒரே சிரிப்பு, உள்ளானந்தம். தன்னைப் போல மனசில் ஒரு தாளக்கட்டு. ஜிஞ்ஞ்சினாக்கடி ஜிஞ்ஞ்சா ஜிஞ்சிஞ்சா.
பத்தும் பத்தாததுக்கு இந்தத் திருவிழாவுல பெரிய பார்ட்டி யார்னு பாத்தா... நம்ம மனோன்மணியாம்ல?
லாட்ரில லக்கி ப்ரைஸ் அடிச்சாப்ல ஒரு குபீர். அதுக்கும் மேல ஒரு வார்த்தை, காதுல தேனாச் சொன்னாரே மகராசன். "நீ தான் சிறுகுளம் போயி பார்ட்டிய பிக் அப் பண்ணணும்டா."
பிக் அப் தானே? பண்ணிருவம்! பொத்னு அந்தாக்ல விழுந்துர்றாப்ல ஒரு தள்ளாட்டம். மனத்தின் துள்ளாட்டம். டண்டணக்கா. டக்கா. டண்டணக்கா.
பெறகு? நாம் பண்ணாம யாரு பண்ணுவா?-ன்னு உள்ளத்தில் வெள்ளையடிச்சாப் போல  வெளிச்சம். பண்ணையார் வண்டி வாங்கியதே இதும் மாதிரி ஒரு பந்தாவுக்குதான்னு படுதப்போவ்....
துடடு இருந்தா மனுசனுக்கு என்னெல்லாம் தோணுது... பிக் அப் பண்ணவும் தோணாதா என்ன?
துட்டுன்னு இல்ல. ஆம்பளையாளுகளுக்கே இப்டி ஒரு எடுப்பு. தொடுப்பு - தொடுப்பா என்னன்னு தெர்ல! அதுல ஒரு திருட்டு ருசி.
ஒண்ணில்ல. வாடகைக்கு வீடு பாத்திட்டிருக்கான்னு வெய்யி. வீட்டுகாரனோ தரகனோ... சுத்தி அறை அறையாக் காமிக்கான். இவாள் அரை கவனம்தான். நோட்டமெல்லாம் பக்கத்து வீட்ல யார் குடியிருக்கா? அழகா அம்சமா பெண் வம்சம் எதாவது?-ன்னு ஒரு ஆராய்ச்சி. இங்கேர்ந்து நோட்டம் பார்க்க வசதிப்படுமா?
எஸ்ஸா? "பிடிங்க சார் அடவான்சை!"
தரகர் என்னாமாச்சிம் உளருவான். கிட்டத்லயே பஸ் நிறுத்தம் காய்கறி மார்க்கெட். நல்ல தண்ணி, அதெல்லாம் யார் கேட்டா.
மத்த நிகழ்ச்சிகள் வெறுத்துப் போயின. நாட்கள் நத்தையாய் நகர்ந்தன. பொழுதுகளே சில சமயம் முயலோட்டம் ஓடுது. சில சமயம் பயந்த தவளையாட்டம் மூலையாப் பார்த்து பம்மிருது. ஏன் அப்டி? தெர்ல.
ஆ... மனோன்மணி, அவளை தூரத்தில் இருந்து பார்க்கவே என்னமோ பண்ணிச்சே. ஒரு கிச்சு கிச்சு.. கூச்ச மயிர் சிலுப்பல். கிட்டத்ல, அதும் அவன் வண்டில. எலேய் கனவு கண்டியேடா? இத்தனை சுளுவா, சுருக்கா சிக்கீருச்சே.
தானறியாமல் வாயில் விசிலில் ஒரு பாட்டு. எப்ப கிளம்பியது தெரியாது. என்ன பாட்டு? யாரு கண்டா? நல்ல பணியாரம்னா வாய்ல தானா எச்சில் ஊறலியா? அதைப் போல. நல்ல சமாச்சாரம்னா பாட்டு!
நேத்து உற்சவர் புறப்பாடு கூட ஒருத்தன் புலி ஆடி வந்தான். முகமெல்லாம் உடம்பெல்லாம் மஞ்ச பெயின்ட் நடுவுல கருப்புப் பட்டைகள் பூசி. செயற்கை வால். கடவாப் பல் எடுத்த படவா ராஸ்கல். கைல மான் கொம்பு. முன்னாடி பின்னாடி வந்து ஒரு ஆட்டம். அந்த மாதிரி இப்ப பெருமாள்.
"பாத்துக் கூட்டுட்டு வா!"
பின்ன?- என்று கிளம்புகிறான். டேய் பதறாதே. சாதா நாளிலேயே நீ ஆக்சிடென்ட் பார்ட்டி. இப்டி ஏடாகூடப் பொழுதுகளில் தலைகீழா நடப்பே. பாத்து வழில நின்னுட்டா?-ன்னு ஒரு பயம். முந்தின்னாளே ஒரு தரோ செக் அப் பண்ணியாச்சி. ஒண்ணும் ஆவாது. பிக் பண்1ணுமுன் ஒரு செக் அப்.
முயல்ப் பொழுதுகள்! வண்டியே கல்லிலும் மேட்டிலும் துள்ளி முயலாய் ஓடியது. ஜிகா ஜிங்கு ஜிகா! ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...
சிறுகுளம். மனசை பரபரவென்று யாரோ சூடு பறக்க மசாஜ் செய்கிறார்கள். மயங்கிக் கிறங்கி விழுந்துறப்படாது. சமாளிக்க முடியுமான்னே திணறிப் போச்சு உடம்பு நடுங்கியது. லேசா ஜுரக் கொதிப்பு.
கோவில் ஒட்டிய பெரிய எடுப்பு வீடு. வாசல் சிறகு விரித்துக் கிடந்தது. உட்பறவையாட்டம் வீடு. முன்வளாகத்தில் நடுப்புறத் தண்ணீர்த் தடாகம். சுதைச் சிற்பமாய் ஒரு மயில் முன்னே ஒரு பெண். அந்தத் தடாகத்தில் நீர் ஊற்றுகிறாப் போல. தடக்கென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.
முயல் எப்ப மானாகியது?!
கீழும் மேலுமாய் எடுத்துக் கட்டிய வீடு.
நாட்டியக்காரி வீடுல்லா. திரைச்சீலைகளே தாம் தி தாம் தை தி தை என ஆடுகின்றன. வண்டியின் ஹாரன் அடித்துவிட்டுப் படபட படபடப்புடன் காத்திருந்தான். அத்தனை இரைச்சலும் அடங்கி மனசு திடுக்னு ஒரு அமைதி குடுத்தது. மேடைல நாடகம் ஆரம்பிக்கு முன்னால ஒரு இருட்டு அப்புமே அதும் மாதிரி.
மாடியைப் பார்க்கிறான். காற்றுக்கு திரைச்சீலை உள்ளொடுக்கமாய் எழும்பியது. அதுவே பார்க்க என்னவோ போலிருந்தது. மனோன்மணியின் வண்டியைப் பார்க்கிறாப் போல. அவன் மாடியைப் பார்த்தால் கீழ்ப்பக்கம் திரைச்சீலை ஒதுங்கி அந்த தேசிக்காச்சாரி வெளிய வந்தாச்சி. ஒரு மாதிரி வெளிர் நீல வண்ண சில்க் ஜிப்பா, பாகவதர் கிராப் நல்லா எண்ணெய் போட்டுப் பளபளத்தது. கொடுத்துச் சிவந்தது கர்ணன் கையிம்பாங்க.. வெத்திலை எடுத்துச் சிவந்த உதடுகள் அவருக்கு. அவாளுக்கு பவுடர் இத்யாதி அலங்கார ஆடம்பரங்கள். நட்டுவனார் அத்தனை பேர்த்துக்குமே ஆம்பளையும் இல்லாமல் பொம்பளையும் இல்லாமல் ஒரு சாயல் வந்துருதே ஏனப்பா?
தெர்ல.
கச்சேரி பார்ட்டிங்க தன்னைப் போலப் பின்சீட்டில் உக்காந்தாறது. டிக்கில மேள தாளம் சுருதி வீணை வெளியே  எட்டிப் பார்க்கிறது டிக்கிய மூட வழியில்லை.
"மேடம் ரெடியா?"
"வருவாங்க வருவாங்க" என்றார் சாரி. மேல் அறையில் மேக் அப்பின் இறுதிகட்டப் பூச்சுகள். ஜல் ஜல் என்று இங்குமங்குமான ஓட்டங்கள். சற்று கூர்ந்து கவனித்தால் கேட்கின்றன. காத்திருந்தான். திருப்பியும் காற்றுக்கு மாடித் திரைச்சீலை உட்பக்கம் தூக்க, தலை தூக்கிப் பார்த்தான் அவள் முக தரிசனத்துக்காக.
தேசிகாச்சாரி மனசில் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொள்கிறார். மிருதங்கம் கையில் தாளம் போட்டு அதை அங்கீகரிக்கிறார். அப்பவே நிகழ்ச்சியின் களை கட்டுகிறது அவன் மனசில். ஜல் ஜல் மாடி இறங்குகிறது.
மகாராணி வருகிறார் பராக் பராக்...
அதென்ன பராக் பராக்?.... தெர்ல! உண்மைல அதன் பொருள் - மனோன்மணி வருகிறாள் பராக் பார்க்காதே, என்பதுதான். வாசல் திரைச்சீலை ஒதுங்கி... ஆ, கண்டேன் பெண்ணே உன்னை. தோளோடு சால்வை ஒன்றைப் போர்த்தி நாட்டிய உடையில் மனோன்மணி. மகாராணி. சித்தம் கலங்க வைக்கும் அழகின் மொத்தம். அவனை நோக்கி நெருங்கி வருவாள். வருகிறாள். வந்தாள்!
தானாகவே நெஞ்சை ஆண்மையுடன் நிமிர்த்தி முகமெல்லாம் சிரிக்க ரு கையும் கூப்பி வணக்கம் சொன்னான். அடாடா அதை அவள் அலட்சித்தும் பொருட்படுத்தியுமாக ஒரு மத்திம சாயலில் அங்கீகரித்தது என்னமாய் இருந்தது.
தன்னைப்போல முன் கதவைத் திறந்து விட்டான். வாசனையொன்று முன்னால் குனிந்தது. வியூக நிழல்! கூட அவளது சிறு தேவைகள் - பால் கூஜா, மிளகு சேர்த்த சுடு தண்ணீர் என... எடுத்துக் கொண்டு ஒரு பெண். உட்கார இடம் தேடினாள் அவள். ஒரு அவசரத்துடன் முன்பக்கம் அவளை அனுமதிக்க முயன்றான். மனோன்மணி இன்னும் கிட்டத்தில் வருவாளே என்கிற ஒரு மயக்கம்தான்.
மனோன்மணி பின் பக்கம் ஜாடை காட்ட உடனே பின்னால் மூணு ஆண்களும் ஒடுங்கி ஒதுங்கி ஓரம் தந்தார்கள். மனம் தன் வசத்தில் இல்லை அவனுக்கு. அவன் இத்தனைகாலம் காத்திருந்த நாள். மகத்தான நாள்... நாளாம் நாளாம் திருநாளாம்... டேய் அதெல்லாம் அப்புறம், என மனக்குதிரையை அ-ட்-டக்-க்-கிளான்.
கார் கிளம்பியது.
"பாத்து நிதானமாப் போப்பா" என்கிறார் தேசிகாச்சாரி. அவர் பந்தா. வழியெலாம் அவர்கள் ஒத்திகை பார்த்துக்கொண்டே வந்தார்கள். அவர் ஜதி சொல்லிப் பார்த்துக் கொள்கிறார். சப் சப்பென்று சப்பாத்தி போடுகிறது மிருதங்கக் கை. மனோன்மணியின் கால்கள் ஜல்ஜல்லென நல்லோசை எழுப்புகிறது. அப்பவே நாட்டியமாடத் தவிக்கின்றன போலும்.
அவளிடம் என்னென்னமோ பேச உளரிக் கொட்ட இருந்தான். தவித்துக் கிடந்தான். அதைவிட இந்த அனுபவம் மேலாய் இருந்தது. அவளும் இவனுடன் பேசத் தயாராய் இல்லை.
பழகிக் கொள்வேன். புன்னகைத்துக் கொண்டான். இந்த அழகு கையருகே. அதன் சிலிர்ப்புகளை, தக்கணத்தில் ரயில் தண்டவாளத்தை மாற்றிக் கொண்டாற் போல மாற்றிக் கொண்டேன் அல்லவா?
வில் வண்டி பார்த்தவள். கார் அவளுக்கு அதிகபட்ச மரியாதை. அதைக் காட்டிக் கொள்ளாத பாவனை அவளுக்கு. என்ன அலட்சியம். தொழில்க்காரிதான்!
அதைப் புரிந்த கணம் அவனும் தன்னிலை உணர்ந்தான். உள்ஜுரம் மட்டுப்பட்டது. இது வெறும் உணர்ச்சிகரமாய் அணுகப்பட வேண்டிய நேரம் அல்ல. இது சிவாஜி படம் அல்ல எம்ஜியார் படம்டோய்!
திருவிழா மேடை விளக்குகள் தெரிந்தன. கூட்டமான கூட்டம் என இங்கிருந்தே தெரிந்தது. இந்தக் கூட்டத்தை ஒரு மணிநேரம், ஒண்ணரை மணிநேரம் ஆளப் போகிறாள் இவள். ஒரு மனுசப் பிறவிதானே இவள். ஒரு மொத்தக் கூட்டத்தையும் பெரும் பூட்டெனப் பூட்டி சாவியை இப்படி இடுப்பில் செருகிக் கொள்கிற ஜாலம் மிக்கவள்.
தனியொரு மனுஷி. ஹா! கலைதான் எப்பெரும் பேறு!... ஒரு ரசிகனுக்கே அது பேறு என்றால் கலைஞர்களைச் சொல்...
காரைப் போய் நிறுத்துமுன் கூட்டம் ஹோவெடுத்து எழுந்து கொள்கிறது. எலேய் வண்டிக்குள்ள மாட்டிறாதீங்க, பைத்தாரப் புள்ளீங்களா...
சட்டென்று இறங்கவில்லை அவள். அவன்போய் கதவைத் திறந்து விட இடதுகாலை எடுத்து நளின வசீகரத்துடன் தரையில் வைத்து, என்ன அழகான புத்தம் புது கால்கள். சிறப்பான செருப்புகள். உள்ளே செம்பஞ்சுக் குழம்பு பூசி அழகுக் கால்கள். இறங்கின. எட்டி எட்டிப் பார்க்கின்றன சன மொத்தமும். திருவிழாக் குழுவினர் மனுசச் சங்கிலி அமைத்து பாதுகாப்பு வளையம் அமைக்கிறார்கள்.
முதலாளி விவரந்தான். அவரும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடோடி வரவில்லை. அமைதியாகக் காத்திருக்கிறார். இருக்கையை விட்டு எழுந்து கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணரை பிறந்தகுழந்தை ஸ்வரூபத்துடன் வசுதேவர் எடுத்துச் செல்கையில் நீர் பிரிந்து வழி விட்டதாமே? சனக்கடல் பிரிகிறது. வழி கிடைக்கிறது. நடுவே மனோன்மணி. ஜல் ஜல்லோசை நல்லோசை மேடை நோக்கிப் போகிறது.
பி.பி.பி. அமெரிக்கையாய் ஒரு வணக்கம் சொல்கிறார். அவளும் பசையுள்ள பார்ட்டி. ஆகவே மயில்துத்தமும் - பசைன்னா காப்பர் சல்ஃபேட். மயில்துத்தம் இல்லாம எப்டி?! - பணிவுடன் வணங்குகிறது.
முதலாளி பெரிய ஆள்த்தான். கூத்துப் பொம்பளைங்கள் என்றால், அதுக்கு ஒரு மரியாதை. பெரிய பார்ட்டிக்கு எனில் அதற்கென தனி எடுப்பு தெரிகிறது அவருக்கு.
மேடையோரம் என்னவோ கலாட்டா. மனோன்மணி உடை மாற்றவென்று போட்ட கூரை ஒதுக்கச் சதுக்கத்தை யாரோ ஓட்டை போட்டிருந்தார்கள். உடனே அடைத்துக் காவல் போட்டாகிறது!
சிரிப்பு வந்தது, தாமதமாக அங்கே வந்து சேர்ந்ததில் அவனுக்கு உட்கார இடம் இல்லை. முதலாளியிடம் என்னவோ சொல்வது போல கூட்ட வியூகத்தை உடைத்து உள்ளே போய் அவர் காதில் "எதாவது வேணுமா?" என்கிறான். அதை அங்கீகரிச்சாப் போல அவர் புன்னகைத்து, வாணாம், என தலையாட்டினார். அப்படியே அவன், பின்சீட்டில் தவங்கிடந்து காத்திருந்தவனை கறாராய் எழுப்பிவிட்டு உட்கார்ந்துகொண்டான்.
பாவம்... எப்போலர்ந்து இடம் பிடிச்சி தவங் கிடந்தானோ? அதையெல்லாம் பாத்தா வேலை நடக்காதப்போவ்!
(வெள்ளி தோறும் தொடர்கிறேன்)
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842



Thursday, February 21, 2019


நான்காம் பகுதி

முத்த யுத்தம்
17

லையடிவாரத்து சிறுகுளத்தில் மயில்கள் மிகுதி. ஊரே அழகு பரத்திக் கிடந்தது. தலைமையாக அவள். காவிய சுந்தரி. மனோன்மணி. சுந்தரக் காவிரி.
சதிர்ப்புதிர்.
அவளுக்கே தன்னைப் பற்றிய ஆச்சரியங்கள் மிகுதியாய் இருந்தன. ஆ, இந்த ஆண்கள்... எந்தப் பெண்ணிடமும் இல்லாத எதை என்னிடம் காண்கிறார்கள் தெரியவில்லை. கண்கள் எனும் கருணைச் சுரப்பிகள். கருவண்டு விழிகளைச் சிப்பியென மூடிய அந்த சோழிச் சிமிழ் பரத்தி அவள் பார்வையை விசிறும் போது... அவர்கள் விளக்கேற்றிக் கொண்டாற் போல உள்ளே... நிறைவதை அவள் உணர்கிறாள். ஆ, அவர்கள் அவளது பார்வைக்குக் காத்திருக்கிறார்கள் என அறிகிறாள். கட்டளைக்கு... பணிவதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். வீழ்ந்துபட தோல்வியடைய அவர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏன்? ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் ஏன் இப்படி தோல்வியுற ஆவேசமுற வேண்டும்? அழகு சரி... அழகு மட்டுந்தானா பெண்? அட அழகே கூட... என்னிடம்தானா இருந்தது அந்த அழகு? பிற பெண்களிடம் இல்லையா என்ன?... இல்லை என்கிறார்களே. அல்லது இதைப்போல இல்லை என்கிறார்களே? அந்த ஆண்களின் ஏக்கம் மிக்க கண்கள் அதை அவளுக்கு உணர்த்துகின்றனவே?
யா கனவான்களே? உலகத்தை உருட்டி நகர்த்திச் செல்ல வல்லவர்களே... அழகு என்பது என்னிடம் மாத்திரம் இல்லை. என்னழகில் பாதி உங்களிடம் உள்ளது. உங்களது கண்களில், உங்களது இதயத்தில் உள்ளது.
இதை ஒருநாள் அவள் பகிர்ந்து கொண்டாள். அன்றொரு நாள்... அவள் சொல்கிறாள்.. "ஆணும் பெண்ணும் சமரசம் செய்து கொண்டு அன்பைப் பகிர்ந்து கொள்கையில் அங்கே அழகு பிறக்கிறது." ஆ, என்று மானுடம் அந்த நெகிழ்ச்சியைத் தாள மாட்டாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஆடுகிறது.. கொண்டாடுகிறது.
"பெண்ணா நீ -  தேவதை உன் பார்வை அழகு. பேச்சோ அழகோ அழகு" என்று கண் கிறங்கக் கிறங்கப் பேசியாகிறது.
கலீரெனச் சிரிக்கிறாள் மனோன்மணி.
உலகில் அழகில்லாமல் எதுவுமே இல்லை.
"ஆம். உன்னைப் பார்த்தபின் அதை நான் உணர்கிறேன்?"
அடடா, இந்த ஆண்களின் தேவைதான் என்ன? இணக்கப் போக்கு, பிணக்கைப் போக்கிய மன இணக்கப் போக்கு... அது அவரவர் பெண்களிடம், மனைவிகளிடம் கிடைக்கவில்லையா என்ன? கிடைக்காதா என்ன?
சரி. கிடைக்கவில்லை... எனில் அதற்கு பெண்களையே.. பெண்களை மாத்திரமே காரணமாய்ச் சொல்வது சரியா? அது தகுமா? அது தர்மம்தானா?
அலை பாயாதே கண்ணா!
என்னிடம் விட்டுக் கொடுக்க, பணியத் தயாராய் இருக்கும் மனம்... மனைவிகளை சிரம் தாழ்த்தி அறிவுக்குள் ஏத்திக் கொள்ள ஏன் தயங்க வேண்டும்.
நிரந்தரமான அழகு அது - அல்லவா? ஆகவே அதில் கவர்ச்சி குறைவெனக் கருதுகிறீரா ஐயா?
பெண்மை அழகு. தாய்மை பேரழகு அல்லவா?
மனோன்மணி பாடல்கள் புனைய வல்லவள்.... அவள் பாடல்கள் இப்படியாய். அமைகின்றன. அறிவின் ஊற்றுக்கண்ணை சோடாவெனத் திறந்து துரைக்க வைக்க, நனைக்க வைக்க அவை முயல்கின்றன. எளிய ஆனால் உள்ளே புரட்டுகிற அலைதாங்கிகள் அப்பாடல்கள்.
வாழ்க்கை என்பது மலர்ப்படுகை, மெல்ல நடந்து கவிதை வளாகங்களைக் கடந்து அவள் போய்க் கொண்டிருக்கிறாள். தூய நல்லழகு. தினந்தோறும் விழித்த கணம் அவரவர் வீட்டு ஜன்னலைத் திறந்து பாருங்கள் மானுடரே.
பூக்கள். எத்தனை விதவிதமான பூக்களால் இந்த உலகம் சிரித்து... தங்களைத் தாங்களே இந்த மரங்கள் அலங்கரித்துக் கொள்கின்றன. அழகாய், ஜோராய் இருக்கிறது அல்லவா? அழகா? எங்கிருந்து வந்தது அது? மரத்தில் இருந்து வந்தது அல்லவா? தானே தன்னை உற்சாகமாய் அந்த மரம் உணர்கையில் அழகு அங்கே பிறக்கிறது அல்லவா? பேருந்தில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவே,. இடைப்பட்ட பிரதேசத்தில் அழகு சிறு குழந்தை போல உட்கார்ந்து கொண்டதை அறிந்து கொண்டீர்களா மானுடரே.
"என்னமாக் கவிதை எழுதறாய்யா இவ..." என அதற்கும் என்னை வியந்தால் என்ன செய்வது?
கலீரென நகைத்துச் சிரிக்கிறாள் மனோன்மணி. ஒளிபூத்து விரிகிறாப் போல.
உடலுக்கு ஒத்தடம்.. அறிவுக்கு விருந்து. அதுதான் மனோன்மணி.
"உன்னைப் போல என் மனைவிக்குப் பேசத் தெரியவில்லை..."
சற்று முன் தனக்கு இப்படிப் பேச வரவில்லை. என்று தோல்வியை ஒப்புக் கொண்ட மனம், அதைப் பெரிதுபடப் பாராட்டாத மனம், மனைவிக்குப் பேசத் தெரியவில்லை என முறையிட்டால் என்ன செய்வது?
பேசலாம். கவிதை புனையலாம். பேச்சுதான் அழகா? மௌனம்?
கடல் மௌனமாய் இருந்தது. வார்த்தை நதிகள் மௌனக் கடலை நோக்கி டுகின்றன.
கடல் என்பது மௌனம். வார்த்தைகள் அதன் சிற்றலைகள். கவிதைகள் சிற்றலைகள். கவிதைகள் மௌனத்தைப் பற்றியே பேசுகின்றன.
என் வார்த்தைகள் உங்கள் மௌனத்தை மையமிட்டு இயங்கும். பாரும் மேன்மக்களே. கவிதை உங்கள் மடியில் வந்தமரும் உங்களின் குழந்தை, என்கிறாள் மனோன்மணி ஒரு கவிதையில். வாவ். என வியக்கிறது கூட்டம். கைதட்டி ஆரவாரிக்கிறது.
என்ன இது? கர்நாடக சங்கீதம் அல்ல. வடநாட்டு இந்துஸ்தானியும் அல்ல. கஜலுமல்ல. புது மாதிரியான அனுபவம் அது. அதுதான் மனோன்மணி. அதுதான் அவளின் சிறப்பு. தனி முத்திரை. அடையாளம். கற்பனைச் செழுமை, வளமான குரல். சுயமான அபிநயங்கள். கவிநயங்கள். சலங்கைச் சலசலப்பு. ஓஹோவென்ற அதன் எளிமை. அவளது ஐவிரல் குவிப்பில் தாமரை மொட்டு தெரிகிறது. மெல்ல மெல்ல விரித்தால் கர்ச்சீப் மேஜிக் போல அட நிஜத்தாமரை, என ஒரு மயக்கம்.
நிஜத்தாமரையில் இந்த அழகு இல்லையேய்யா!
"ஏன் இல்லை?" என்கிறாள் மனோன்மணி. மானுடரே நீங்கள் நிஜத்தாமரை மலரக் காத்திருந்து, ஆமாம்... அதற்குக் காத்திருக்கத்தான் வேண்டும் - காத்திருந்து பார்த்திருக்கிறீரா? காத்திருத்தல். அங்கே இருக்கிறது கவிதை ஐயா... பிடித்து இறுக்கிக் கொண்டாட முடியாது சில குழந்தைகளை என அறிவீர்கள் அல்லவா? காத்திருந்தால், அவை தாமே வந்தமரும் மனசில். வந்து, மனசில் பறவையெனக் கூடு கட்டும்.
ஆண்டாள் இறைவனை, உடல் மூலமாக வழிபட உத்வேகங் காட்டவில்லையா? எம்கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க.,. மாணிக்கவாசக ஸ்வாமி கற்பனை.
மனோன்மணியின் கவிதைகளில் குழந்தை குழந்தை என வருகிறது அடிக்கடி. என்றார்கள் விமரிசகர்கள்.
உலகம் சார்ந்த அவளது பார்வை. கவிதைகள்... ஒரு குழந்தையின் ஆச்சர்யப் பார்வை அது - என்கிறார்கள். அத்தனை எளிமை. நல்லதை மாத்திரம் எடுத்துக் கொண்டு அல்லது தாய்ப்பாலாய் உறிஞ்சிச் செரிக்கிற பார்வை.
கலீரென நகைக்கிற மனோன்மணி. கள்ளங்கபடமற்ற அந்தச் சிரிப்பு அது. தனி மனித... ஒவ்வொரு மனிதனும் தனக்கு வாய்க்க வேண்டும் என ஏங்குகிற சிரிப்பு. அது அவள் வாய்வழியே வெளிச்சிந்தி உலகத்தை வெளிச்சமாய் நிறைத்து நுரைக்கிறது.
முக இணக்கம். உடல் வழியே அபிநயங்கள் நரம்புகளில் ஓடும் அந்த உற்சாகத்தை தெறித்துக் தெளித்துத் தெரிவிக்கின்றன. மனோன்மணி கனவுக்கன்னியாகிறாள். மானுடத்தின் கனவுக் கரு ஆகிறாள். கனவின் மானுட உரு ஆகிறாள்!
மானிடம் கட்டுண்டது மானுடம். விழிப் பிரளயம். ஆளைத் தாலாட்டும் அழகு அது,. மலர்க் கோபுரம்.
, பார்த்தீரா? இது கவிதை இல்லையா? எத்தனை சிறப்பாய் இருக்கிறது? எங்கிருந்து வந்தது இது? உம்மிடமிருந்து தானே? எப்படி வந்தது இது? உம்மிடம் கவிதை இருக்கிறது அல்லவா? அதுதானே நான் சொன்னது?!
"பெண்ணே. நீயே எம் கவிதையின் நிறவுகோல்!"
கலீரென நகைக்கிறாள் மனோன்மணி அதைக் கேட்டு. காதை சங்கீதமாய் நிறைக்கும் சிரிப்பு அது! அதன் வெண்மை, முக மலர்ச்சி... கண்ணுக்கு விருந்து. மனப்புண்ணுக்கு மருந்து.
கவலை வலையைக் கிழித்தெறிகிறது அது. வழித்தெறியும் விழித்தெறிப்பு.
என் கவிதை... என்னில் நீங்கள் காணும் கவிதை... அது என்னிடம் எப்படி ஐயா வந்தது? என்கிறாள் மனோன்மணி சிறு புன்னகையுடன் நகைச் சிரிப்புடன். அது உலகத்தில் உள்ளதுதானே? அதில் நான் எடுத்துக் கொண்டதுதானே? எடுத்துக் கொடுத்தவள் நான். அதை பாடலாகத் தொடுத்துக் கொடுத்தவள் நான். நான் நடந்த இடத்தில் கிடந்த பூக்கள் அவை. அவை நான் நடந்தபின் அங்கே கிடப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ?
நிமிர்ந்த நன்னடை.. நேர் கொண்ட பார்வை - அது ஆண். ஆகவே கொட்டிக்கிடக்கும் பூக்களை இழந்நீர்.
குனிந்த மென்னடை. கடைக்கண் பார்வை... எனினும் அதன் அழகு... அது நீவிர் காணாத அழகாகவே இருக்கிறது. அல்லவா?
கதவுக்குப் பின்பக்கமாய்க் கவிதை. குறும்புக்காரக் குழந்தையெனக் காத்திருக்கிறது மானுடரே. கண்டுபிடியுங்கள் அதை.
அது நீங்கள் கண்டுகொள்ளக் காத்திருக்கிறது.
ஹாவென வியந்தது மானுடம். அட நர்த்தகி. என் ரட்சகி. யட்சிணி நீ குழந்தையா? மேதையா? பேதையா? இல்லை மானுடத்தின் போதையா?
அடி யட்சிணி என்ன ரட்சி நீ.
யாதுமாகி சிறந்தவள், எங்கும் நிறைந்தவள்.
அந்தச் சிரிப்பில் சிறிய ஏக்கம் இருக்கிறது. ஆ, மனிதர்கள் ஏன் வளர்கிறார்கள்? அவர்கள் குழந்தையாகவே பிறந்து வாழ்வை ஆச்சரியங்களாகவே நுகர்ந்தும் விடலாம். சச்சரவுகள் நச்சரவுகள் அல்லவா? அவற்றை அனுமதிக்கலாமா வாழ்வில்? வாழ்க்கை அழகானது. சிறிய எல்லைகளின் பாற்பட்டது. அதை விரோதம் பாராட்டிச் சீராட்ட பொழுதில்லை. அது முறையும் இல்லை என்றாள் ஒருநாள்.
பெரிய தத்துவம் என்று மனோன்மணி எதைத்தான் சொல்லிவிட்டாள்?
அதுதான் ஆ... ஆ... ஆச்சரியம். கரிசனத்தின் தரிசனம்.
மானுடம் அவள் மடியில் குழந்தையென வந்தமரத் தவித்தது.
மனோன்மணி பெண்மையின் பரிபூரணம். அவள் குரல் சொன்னதை விரல் அறிவித்தது. அர்த்தத்தை நர்த்தனத்தில் அள்ளி வழங்கினாள். அர்த்தநர்த்தகி ‘அர்த்த’ நாரிஸ்வரி!
கழன்றும் ஏர் பின்னது உலகம் என்றார் வள்ளுவர். ஆ... கழன்றும் அவள் பின்னதாய்க் கிடந்தது உலகம் என்கிறார்கள் விமரிசகர்கள்.
சரி... அவள் கவுக்கன்னி. ஆனால் மனோன்மணியின் கவிதைகள் அவளது கனவுகளா? அவற்றில் கனவில் பூச்சு... மணம்.. நல்வாசனை எப்படி அமைந்தது?
விளக்கங்களுக்கு அப்பாற் பட்டவளாய் அவள் திகட்டினாள். அவர்கள் மனதில் திகைப்பூட்டினாள். விமரிசன வளாகங்களில் விமரிசையாய் அவள் முன்வரிசை பெற்றாள். அவளை விளக்கியுரைக்க உறைக்குள் சிறைப்பிடிக்க அவர்கள் திண்டாடினார்கள். அவளது மாய எல்லைகளை அவர்களால் சுற்றி வளைக்க முடியவில்லை. தூய ஒளியெனக் கிடந்தாள். கம்பன் சொன்னாற்போல - சான்றோர் கவியெனக் கிடந்தாள்.
மேடையின் உயரத்தில் விரலாலே அவள் துயரங்களைக் கழுவித் தூய்மையாக்கினாள். இமைக் குளுமை. வளமைச் செழுமை.
நான் துளசி மாடம். வீட்டுப் பெண்கள் குத்து விளக்குகள் அல்லவா? - என்கிறாள் மனோன்மணி ஒரு கவிதையில்.
காற்றில் அலைப்புறும் அதைக் காப்பாற்றுங்கள். கைச்சுடர் போற்றுதும்.
அவள் ஏக்கம் குடும்பச் சூழலை நோக்கி சர்க்கஸ் கூடாரமாய் விம்மித் தணிவதை, அலைவதை வியக்கிறார்கள் அனைவரும்.
அதுதான், அந்த இணக்கச் சிணுக்கம் தான் அவளது வெற்றி - என்பாரும் உண்டு.
சிவ பூஜை செய்ய அவள் கோயிலுக்கு வந்தால், சந்நிதிக்கு வெளியே சாமியைத் தேடுகிறீகளே?... என நகைத்தாள் அவள்.
மனிதர்களைக் குறைசொல்வதே யில்லை. சாடுவதேயில்லை. இனிய உளவான சொற்கள். சுட்டு விரல் பாவனையில் சற்று வேடிக்கை போல நளினக் குழைவாய் அவை சுட்டிக் காட்டின. எள்ளின மானுடத்தை சிறு நகைப்பொலியுடன் நகைப் பொலிவுடன்!
பண்டிதர் பாமரர் யாவர்க்குமானவை அவள் கவிதைகள்..
மற்றும் அவள்.
முற்றும் அவள்!
"நாங்கள் பொக்கிஷங்கள். எனினும் பெண்ணே... நிறவுகோல் நீ அல்லவா?"
ஆஹா உம் கவிதைகள் என்னை எனக்கு அறிவிக்க வல்லவை.. நீர் என்னைப் பற்றி எனக்கு எடுத்துச் சொல்ல நான் அறிகிறபோது உம்மைப்பற்றி உம்மிடம் நான் என்ன சொல்லிவிட முடியும் ஐயா? - என ஒரு கவிதை அவளிடம் இருந்து.
வாருங்கள் மானுடரே. வந்தென்னைப் பாருங்கள்.
நானே உங்கள் கண்ணாடி. உங்களைக் காட்டித் தருகிறேன்.. என கவிதை முடிகிறது.
நாவே நர்த்தனம் செய்ய வல்லதாய் உள்ளதே உன்னிடம் - என அதற்கும் என்னை வியக்கிற மானுடம். அவளுக்கு வெட்கம் பூக்கிறது.
கொடுத்தல், எடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல்... இவை எதிலும் தனியே இன்றி பிணைந்து ஒரு ரகசியம் போல உள்ளொளிந்து கிடந்தது கவிதை. அழகு. உண்மை.
நிஜம் ஒளிந்து கொள்கையில் கவிதையாகிறது.
மேகமூட்டம் எனும் யானைக் கூட்டம்.
கனவுக் கருச் சுமந்து கருத்துக் கிடக்கின்றன மேகங்கள். கருத்துக் கிடங்குகள்.
பொட்டலம் பிரித்து அதைப் புரட்டலாம் வாருங்கள்.
ஒரு சொல், சொல்லில் இருந்து சொல் கிளை விரிக்கிறது. சொற்கள் ஊற்றெனப் பெருகி மடையுடைத்துக் கவிதையென அலைபுரட்டி ஓடித் தழுவுகிறது அரங்கத்தை. மானுடத்தைக் கால் நனைக்கிறது, சிலீரெனப் பொங்கி அவை குளிர வைக்கின்றன. அத்தனை ஜனங்களும் அங்கே அந்த அமைதியில் அலைகிளம்பக் காத்திருந்தார்கள்.
சப்தம் மௌனத்தை வியக்கிறது. மௌனமோ சத்தத்தை வியந்தமைகிறது. உலகத்தில் எத்தனை முரண்கள்!
அவள் காற் சலங்கை கலீரென நகைக்கிறது. தோளமர்ந்த சிறு குழந்தையாய் எத்துகின்றன அவை. மானுடத்தை கன்னத்தில் கடிக்கின்றன.
*
(வெள்ளி தோறும் தொடர்கிறேன்)
91 9789987842 / 91 9445016842
storysankar@gmail.com