Thursday, December 27, 2018


முத்தயுத்தம்
9

ராஜவம்ச பெருச்சாளிகளோ பெரும் மீசைப் பண்ணைகளோ ஆய கலைகள் அறுபத்தி நாலிலும் தேர்ச்சி பெற்றதாக சரித்திரம் பொய் சொல்கிறது என்பதால், அவர்கள் அதையெல்லாம் கற்றுக் கொள்ளவில்லை என்பது மில்லை. ஒன்றில் விவரம் பத்தாது என்றாகிறபோது அடடா என்று தேள்கடிக்குப் போல உதறிவிட்டு இன்னொன்றில், ஆபத்தில்லாத ஒன்றில் கை மாத்திக்கிர்றதுதான். நமக்கு எது லாயக் படுமோ அது!
அப்ப பாண்டித்துரையிடம் ஒரு நாய் இருந்தது. வேட்டைநாய். உயரமானா சரியான உயரம். ராஜபாளையம் வெரைட்டி. நாக்கைத் தொங்கப் போட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சுத்து முத்தும் பாக்கும். ஒரு மாதிரி பழுப்புப் பாசியின் வெல்வெட் பளபளப்பு மிக்க தோல். கண்ணருகே சிறிது நிறம் வெளிர் வாங்கிய தேமல். அதிகம் குரைத்து அவர் பார்த்ததேயில்லை. குறைத்தே குரைக்கும்!
ஆகா வேட்டையில் சூரன். நீளக் கால்கள். அது ஓடும் வேகத்தை சினிமாவில் ஸ்லோமோஷனில் எடுப்பார்கள். நம்மூர் நாய்கள் ஓடுவதைப் படம் எடுத்தம்னா கல்லெறிக்கு பயந்து ஓடுவதே ஸ்லோமோஷன் போலிருக்கும்.
மான் என்ன வேகம் ஓடும். மானின் வேகத்துக்கு சமதையாய்க் கூட ஓடும் புரூட்டஸ். நாய்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைப்பது சுதந்திர காலத்தில் ஒரு வேடிக்கை போல ஆரம்பித்திருக்கலாம்! நாய்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன ஏனோ! ஆனா வெள்ளைக்காரனை, ஓடறதா.. நகர்த்தவே வம்பாடு பட வேண்டியதாப் போச்சு. பஸ்ஸில் பக்கத்து சீட் போல, கொஞ்சம் தள்ளி உக்காருன்னாக் கூட, என்ன முறை முறைச்சான். கடேசியா காந்தி சொன்னாரு. சரி வயசாளி, அதும் ஒல்லி ஆத்மான்னு வழி விட்டான்… காந்தி உக்கார்ந்து அவனை எழுப்பி விட்டுட்டாப்ல.
நம்ம காங்கிரஸ்காரன் காந்திக்கு முன்ன ‘மியூசிக்கல்-சேர் அவசரம்போல’ அவம்போயி உக்கார்ந்தது தனிக்கதை.
அப்ப வெள்ளைக்காரன் பேசினான்யா.அதான் வசனம் – “நீயுமா புரூட்டஸ்?”
மாந்தோப்பிலேயே புரூட்டஸ் வளர்ந்தது. பாத்துப் போகணும். புது ஆள் வாசமே அதைத் தலை நிமிரச் செய்யும். நம்ம பாண்டித்துரை ஒரு மூடுக்கு செண்ட் கிண்ட் பவுடர்னு அடிச்சாக்கூட சிலிர்த்து ஆர்றா அதுன்னு ஒரு பார்வை. அந்தக்கால பாண்டித்துரைக்கு வேர்த்துரும். “கியா நல்லான்? நாயக் கட்டிருக்கியா?”ம்பாரு சந்தேகமா. (முதல் கியா – அது இந்தில்லா!) அசந்தா அவர் தொடைக்கறி காலி. அப்பறம் அவரே அந்த வசனம் பேசறாப்ல ஆயிருமே?
- நீயுமா புரூட்டஸ்?
நாய் நல்ல இசைஞானம் மிக்கது. அதன் கோபத்தை அனுசரித்து புரூட்டஸ் குரலெடுக்க ஆரம்பிக்குமுன் மெல்ல சுருதி சேர்க்கும்.
நம்ம தெருநாய்கள் எதிர்ப்பு தெரிவிக்கறதிலேயே ஒரு பணிவு, பயம் தெரியும். கீச்சென்று பொம்பளையாள் குரல்.
கருப்புக் குதிரை ஒன்று வைத்திருந்தார். அம்சவேணி. அதென்னமோ தெர்ல. நாய்களுக்கு இங்லீஷ் பெயர். குதிரைன்னா பொம்பளையாள் பெயர். யாரும் நாய் மேல ஏறி உக்காந்து ‘சவாரி’ செய்யறதில்லை. அதனாலயோ?
நாய்க்கும் குதிரைக்கும் நல்லான் நல்லா எண்ணெய் தடவி மாலிஷ் பண்ணி வைத்திருந்தான். பாக்கவே நகைப்பெட்டியைத் திறந்தாப்போல கண் கூசும். வேட்டைக்குக் கிளம்புமுன் அதன் கால்களைத் தடவித் தருவான். முட்டிகளையெல்லாம் நீவி விடுவான். உதறி விடுவான். புரூட்டஸ் எப்பவும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையுது. குதிரைகள் இளைத்தால் ஒழிய நாக்கை நீட்டுவதில்லை. மனுசாளெல்லாம் ஜுரம் வந்தால் டாக்டரிடம் போய் நாக்கை நீட்டுகிறார்கள்… ஒருமுறை பாகீஸ்வரி தர்மாஸ்பத்திரியில் நாக்கை நீட்டிக் காண்பித்ததைப் பார்த்து பயந்திருக்கிறார். துர்க்கையம்மன் போல இருந்தாள்.
***
பெளர்ணமி தினம். அறுவடைக் காலம் முடிந்த சோம்பேறிப் பகல்கள். அல்லது விருந்தினர் வந்த தினங்கள். அவர்களுக்கு வேட்டையாடிய மாமிச உணவைப் பரிமாறலாம் அல்லவா? அப்படி நாட்களைத் தேர்ந்தெடுத்து பாண்டித்துரை வேட்டைக்குக் கிளம்புவார்.
மாந்தோப்பு வரை வில்வண்டி. வேலுச்சாமி தெவையில்லைன்னு தனியே அவரே ஓட்டிப் போவார். பழகிய மாடுகள். வழி தானே தெரிய, போய்ச் சேர்ந்து விடுகின்றன. இந்த மிருகங்கள் ஒவ்வொன்றும் எப்படி சமயோசித அறிவுடன் இயங்குகின்றன… என வியப்பாய் இருந்தது அவருக்கு. சர்த்தான், அவர் அறிவை வெச்சி அதுகளை மதிக்காரு!
குடிலின் முன் வளாகத்தில் குதிரையை ஒட்டி ஒரு வெள்ளோட்டம் பாத்துக்குவார். சிறு துள்ளலில் அது ஓடி வட்டம் போடும். நீச்சல் பந்தயக்காரன் குதிக்குங் குள்ளாற உடம்பையெல்லாம் உதறி உருவிக்குவான். அதைப்போல குதிரையும் காலை மாத்தி மாத்தி உதறிப் பாத்துக்கிடும். நல்ல உயரமான குதிரை. போலிஸ்காரன் போடற விலங்கு மாதிரி பக்கவாட்டில் இரும்பு அரை வளையம். அதை மிதித்து முதலில் நல்லான், அவர் அடுத்ததாக முன்னால் உக்கார்வார்.
யானை அங்குசத்துக்குக் கட்டுப்பட்டாப் போல, அம்சவேணி அவன் விசிலுக்குக் கட்டுப்பட்டது. நீள ஊளை. வாய்க்குள்ள விரலைக் குடுத்து முள்ளுமீன் சாப்பிடறாப்ல நல்லான் ஒரு இழு இழுத்தான்னா சும்மா தோப்பே, காடே அதிரும். அது ஒரு கலை. பீடாவுக்கு வெத்திலை மடக்கினாப்ல நாக்கை மடக்கு. விரலைப் பாக்குவெட்டி போல உள்ளே செலுத்து. ஒரு விஷ். பக்கத்தில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் குதிரை பாய்ந்து ஓடிவரும்.
ஆய கலைகள் அறுபத்து நாலும் கத்துக் கொண்ட பண்ணையாருக்கு விசிலடிக்க வரவில்லை. தனியே அவர் ஏக்கத்துடன் வயக்காட்டுப் பக்கம் மலங்காட்டுப் பக்கம் பல முறை முயன்று பார்த்தாரு. சரி, நமக்கு இது லாயக் படாதுன்னு விட்டுட்டாரு.
மனுசாள் போகும் வழி வேற. குதிரைவழி வேற. பாதை சிறுகச் சிறுக, குதிரையோட்டம் நடையாகி பிறகு அதும் தடையாகி விடும். இறங்கி நடத்திக் கூட்டிட்டுப் போவார்கள். சரித்திரக் கதைபோல எங்காவது ராஜகுமாரிகள் முண்டக்கட்டையாக் குளிக்க மாட்டாளுகளா என்று ஏக்கமாய் இருக்கும். மூடு வந்தா அவரு இறங்கி முண்டக்கட்டையாக் குளிப்பாரு. எங்கயிருந்து வருமோ... காட்டுத் தண்ணி அத்தனை ருசி! அத்தனை தெளிவு. சிற்றருவி. தரையில் வழிஞ்சோடும் நீரில் அப்படியொரு தெளிவு. மீனும் நண்டும் தரையும் கண்ணாடி போல் உள்ளே தெரியும். சட்டென்று பலமுறை வெறுங்கையால் அந்த மீன்குட்டிகளைப் பிடித்திருக்கிறார்.
காட்டின் ஊடாடி உட்புகும் பச்சை வாசனை. சில சமயம் தேன்கூடு தேன் சொட்டச் சொட்ட பளபளத்துக் கிடக்கும். தூக்கணாங் குருவிக் கூடுகள். ஒரு பறவை பின்னியதுன்னா நம்பவா முடியுது?
ஒருமுறை மழையில் மாட்டிக் கொண்ட அனுபவம். பெருமரமொன்றில் அவரும் நாயும் குதிரையும் நல்லானும். மரம் அகலமானா நம்ம பட்டணத்தில் வீராணம் திட்ட குடிநீர்க் குழாய் அகலம். என்ன மழை. என்ன இருட்டு.
காட்டு மழை எப்ப எடுக்கும், எப்ப விடும்னு சொல்லவே முடியாது. மழைவிடக் காத்திருந்தார்கள். அவர் குதிரையை ஒரு வெதுவெதுப்பு வேண்டித் தொட்டார். குதிரை உடம்பெங்கும் ஒரு சிலிர்ப்பு அலையோடியது.
என்ன ஆச்சரியம்னா, நல்லானுக்கு வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதுன்னு நினைத்திருந்தார். மழையை அவன் எவ்வளவு ரசித்தான். மர அடிவாரத்தில் குத்திட்டு உட்கார்ந்து காதில் இருந்து ஒரு மாஜிக் நிபுணன் போல பீடியெடுத்து அந்த இருட்டில் இடுப்பு முடியில் வைத்திருந்த தீப்பெட்டி யெடுத்து குபீரென்று நெருப்பு பற்ற வைத்தான். என்ன அழகு.
“ஒரு பீடி குடு நல்லான்”
“ஐயா நீங்களா?”
“சுருட்டு எடுத்தாரல. அதனாலென்ன, பரவால்ல குடு”
அவர் எப்பவாவது சுருட்டு பிடிப்பார். வேட்டையாடச்சிலே இருட்டுக்கும் குளிருக்கும் ஒரு துணை போல உள்க் கதகதப்பளிக்கிறது சுருட்டு. நல்லான் பார்த்தான் பண்ணையை. கரடி சுருட்டு பிடிக்கிறதைப் போலிருந்தது.
ஜோக் ஒண்ணுமில்லை. நிஜம். ஒருமுறை கரடி வித்தைக்காரன் ஒருவனை வேடிக்கை பார்த்தான் நல்லான். கரடி சர்க்கஸ் ரொம்ப சுவாரஸ்யம். கரடியை டான்சாடப் பழக்கியிருந்தான். அவன் சொன்னா அது குட்டிக்கரணம் போடுது. அட, சைக்கிள் ஓட்டுது. சுருட்டுப் பிடிச்சி புகையை வெளிய ஊதுதுய்யா. எப்படிக் கத்துக் கொடுத்தான் இந்த வித்தைக்காரன்!...
திடீர்னு சரசரன்னு சத்தம். “ஷ்”னு எச்சரிச்சான் நல்லான். “அசையாதீங்க. பயப்பட வேணாம்.” பாத்தா பாம்பு. அப்பதான் பாம்பு மரமேர்றதைப் பார்க்கிறார். என்ன சுறுசுறுப்பு. என்ன வேகம். நல்லா ஒராள் ஒண்ணரையாள் நீளம். கருப்பும் வெள்ளையுமா பாசிமணிபர்சாய் உடம்பு. அவர்களைச் சட்டை செய்யாமல் அவர்களையிட்டு பயப்படாமல் மரத்தில் ஏறி மறைந்தது. கடுமையான விஷம் இருக்கும்.
அந்த மழைக்கும் இதமான சிறு வெளிச்சத்துக்கும் யானைகள் இரண்டு தூரத்தில் தும்பிக்கைகளை இணைத்துக் கொண்டு நடன இசைக்கு மண்டையாட்டுவது போல ஆடிக் கொண்டிருந்தன.
இன்னொரு முறை சாரைப் பாம்புகள் இப்படி நடனமாடுகிறதைப் பார்த்திருக்கிறார். காட்டில்தான் எத்தனை அழகுகள். ரகசியங்கள். தைரியத்துக்கு நல்லான். கூட புரூட்டஸ். பயண அலுப்பு தெரியாமல் இருக்க குதிரை அம்சவேணி. வாழ்க்கை அமக்களமாய் இருந்தது.
இரவு வேட்டை ஒன்றில் காட்டெருமை ஒன்று தனியே வெளியே வந்ததைப் பார்த்தான். பயமாய்த்தான் இருந்தது. நல்லான்தான் தோளமுக்கி அவரை அமைதிப்படுத்தியது. எருமையின் முனகல் பாஷை அவனுக்குத் தெரிகிறது. அது சீற்ற முனகல் அல்ல. என்னவோ உபத்திரவம் அதற்கு…
நிலா. யானைமுதுகெனத் தெரியும் பாறைக் கற்கள். எருமை போய் முனகி முனகி மடுவைத் தேய்க்கிறது. பால் கொழித்த கெட்டியான மடு. ஒவ்வொரு தேய்ப்புக்கும் பாறையில் பீய்ச்சியடிக்கிறது பால். குட்டிக்குத் தந்தது போக மீதமா, குட்டி இறந்து விட்டதா தெரியவில்லை.
பாவம். அதும் வேதனை அதுக்கு. சலூனில் கத்தியத் தீட்டறாப்ல பாறையில் உரசோ உரசுன்னு உரசுது. கீழப்படுத்து அந்தப் பாலைப் பீய்ச்சிக் குடிக்கலாம் போல ஆசையா இருந்தது. கிட்ட நெருங்க முடியுமா? நம்ப உள்ளூர் எருமை மிதிச்சாலே கால்சதை குதறி சாணியாக் கொழகொழத்துரும். இது காட்டெருமை!
எருமை போன பிறகு மெல்ல அங்கே போய்ப் பார்த்தார்கள். பால் இப்போது கெட்டித்துக் காய்ந்திருந்தது. தொட்டெடுத்தால் சாக்லெட்போல உடைந்து கையோடு வந்தது. வாயில் கரையக் கரைய என்ன ருசி…
அதெல்லாம் அனுபவிக்கணும்யா. திரும்பி எருமைவந்திருமோன்னு பயந்து பயந்து சாப்பிட்டார்!... வீட்டுக்கும் எடுத்து வந்தார்.
புரூட்டஸ் இருந்தால் மான்வேட்டை சுலபம். மான்கள் திரளக் காத்திருப்பார்கள். இதுவரை எங்க இருந்ததோ? திடீரென்று பள்ளிக்கூடம் விட்டாப்போல ஒரு கலகலப்பு. மானின் வரத்து. கம்மாயில் புதுத்தண்ணி வருகிறாப் போல. அதும் கலைமான்கள் விநோதமான கொம்புக் கொண்டைகளுடன் நடமாடும் அழகு. நிலா வெளிச்சத்தில் அப்படியே சொக்கும். ஒருமுறை மாட்டிய கலைமானைத் தலை சிதைக்காமல் பாடம் பண்ணி சுவரில் மாட்டி வைத்திருக்கிறார். அதைப் பார்க்கையில் கை தானாக மீசைக்குப் போகிறது. ஏன்? அட, அவருக்கு அது இத்தாம் பெருசா இருக்கு. அதான் பண்ணையார்னா அது ஒரு கெத்து! பந்தா! மைனரிச மேனரிசம்…
***
நல்லான். புரூட்டஸ். அம்சவேணி. பாண்டித்துரை. குரூப் ஃபோட்டோவுக்குப் போல காத்திருக்கையில் கானகம் தன் ரகசியங்களில் ஒரு அத்தியாயத்தைத் துவக்குகிறது.
விலங்குகள்… ஜீபூம்பா!... சத்தத்துக்குக் கட்டுப்பட்டாப் போல மெல்ல உருவங்கொண்டு அந்தப் புல்வெளியில் உலா வருகின்றன.
மான்கள் மகா மகா சந்தேகப் பிராணிகள். காதை என்ன பாடு படுத்துகின்றன. யாக குண்டத்தில் நெய்யூத்த அரசயிலை மடிச்சாப் போல காதுகள். சிறு காற்றின் சிணுக்கத்துக்கும் நுணுக்கமாய் அவை விரைத்து விரிகின்றன. ஒரே ஒருமான் பதறினாலும் போச்சு. அத்தனையும் பறந்துரும். ரேக்ளா ரேஸ் போல…
எல்லாம் அமைதி. எங்கும் அமைதி. மான்கள் நடமாட்டத்தைப் பார்க்கிறார் அண்ணாச்சி. நல்லானும் பார்க்கிறான். அவன் கை மெல்ல புரூட்டசைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது அதுவே கதாநாயகன். ஆகவே அது மிஸ்டர் புரூட்டஸ்!
புரூட்டஸ் அடுத்து நல்லான். அடுத்து பாண்டித்துரை. குதிரை தப்பு பண்ணி விட்டாப் போல தலை குனிந்து அருகே நிற்கிறது. இல்லை இல்லை. கயிறு தணிவாய் இழுத்துப் பிடிக்கப் பட்டிருக்கிறது.
எந்த மான் சிக்குமோ? அதுமிஸ்டர் புரூட்டசின் தேர்வு. அவர் தலையிட முடியாது.
யாரும் இல்லை. தொந்தரவு இல்லை என்கிறாப்போல மான்கள் சமாதானமுறுகின்றன. நல்லான் இன்னும் காத்திருக்கிறான். அந்த மான்கள் அவர்கள் பக்கம் ஓரளவு கிட்டத்தில் வரட்டும்… இன்னுங் கூட… அருகில் பக்கத்தில் நெருக்கத்தில் கிட்டத்தில் சமீபத்தில்… இன்னும்… ம்.னு.ன்.இ…
கை மெல்ல மிஸ்டர் புரூட்டசைத் தட்டி விடுகிறது. அமைதியாக, ஆனால் உட்பரப்புடன் காத்திருந்த மிஸ்டர் புரூட்டஸ் சுவிட்சைத் தட்டினாப் போல மெல்ல ரகசியமாய் அந்தப் புற்புதருக்குள் பச்சைப் பாம்பாட்டம் பதுங்கி ஆனால் வேகமாய் நகர்கிறதே. அந்த அழகு… அந்த சாமர்த்தியம்…
நிச்சயமா பாண்டி அண்ணாச்சிக்கு இல்லை!
திடீரென்று அந்தப் புல்வெளியில் எழுந்து கொள்கிறது மிஸ்டர் புரூட்டஸ். காடே சிலிர்க்கிற உருமாற்றம். புழுதிப் படலம். அந்த விநாடியில் அவர் குதிரையேறி – நல்லான் இல்லை – மான் வேட்டைதானே? – பாய்ந்து முன்னேறுகிறார். மான்கள் பதறி விலகிச் சிதறுகின்றன. குதிரையைத் தட்டி விடணும். ஆது கிளம்பற ஜோருக்குத் தாவியேறணும். படாத எடத்துல பட்டுக்கிறப்படாது. ஏறின ஜோருக்கு துப்பாக்கியப் போட்றப்டாது.
நாய் ஒரு மானைக் கணக்கு வைத்து ஓடும். இளைய மான்கள் பதறி வழி பிரியும்… ஆனா எடுக்கிற ஓட்டம் இருக்கே. நம்மால விரட்டிப் போக ஏலாது. பெரிய மான்களோவெனில் பலம் ஜாஸ்தி கொண்டவை. ஓடற வரை ஓடும். முடியலியா சட்டுனு நின்னுரும். திரும்பி சண்டைக்கு வந்துரும். கொம்பால ஒரு கிழி கிழிச்சா கிழிச்ச நம்ம சதையோட அது காட்டுக்குள்ள ஓடறதைப் பார்க்க வேண்டிதான். அத்தனை மூர்க்கம் இருக்கும் அந்த மோதலில்…
மிஸ்டர் புரூட்டஸ் துரத்திப் போகிற வேகம் அலாதியானது. பயம் சிறிதுமற்ற துரத்தல். தாக்க வரும் மானிடம்கூட பதுங்குமே தவிர பின்வாங்காது என்பதுதான் விசேஷம். கவனமெல்லாம் குறியெல்லாம் மானின் கழுத்துதான். வசம் பார்த்து நேரம் பார்த்து, முகூர்த்தம் நெருங்க சந்தர்ப்பம் கூடிவர… முழு வேகப் பாய்ச்சலில் துள்ளி… மானின் கழுத்தோடு தொங்கும்.
மான் அதை உதற வம்பாடு படும். தரையெங்கும் நாயை உதறி அறையும் துணி துவைக்கிறாப் போல. மிஸ்டர் புரூட்டசின் பற்களுக்கு சவால். சவாலில் அவர் தோற்றதேயில்லை.
குதிரையில் புயல்போலத் துரத்தி வரும் அண்ணாசியின் முறை இப்போது. குறி தவறிறப்படாது. நாம விழுந்திறப்படாது. டமார்!
மான் அப்படியே சுருண்டாற்போல சர்ர்னு புல்தரையில் வழுகிப் போகும். நல்லா நெத்திப் பொட்டுக்கு அடிச்சா அது அடி. அமைஞ்சா சரி. இல்லாட்டி கெடச்ச எடத்துல அடிக்கறதுதான். இன்னொரு டமார். எதுவரை… மான் தலையைக் கீழே போடும்வரை… அதுக்குப் பின்னரும் கூட மிஸ்டர் புரூட்டஸ் கழுத்துப் பிடியை விடாது. அண்ணாச்சி இறங்கிப் போய் மிஸ்டர் புரூட்டசைத் தொடுவார். அதன் பின்தான் அது வாய்ப்பிடியை விடுவிக்கும்.
எதுவுமே நடக்காததுபோல நின்று சாதுவாய் அவரைப் பார்க்கும். அப்படியே நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீருடன் அவர் நாயை அணைத்துக் கொள்வார். நாய் அந்தக் காலக் கடிகாரம் போல நாக்குப் பெண்டுலம் தொங்க அவரைப் பார்க்கும். அதன் உடம்பெலாம் புழுதி. இரத்தக் கீறல்கள். தரையோடு இழுபட்ட காயங்கள். பரிசுத்த வீரன் அல்லவா? என்ன அமைதியாய் நிற்கிறது. அதன்கூட நிற்கவே எனக்குத் தகுதி இல்லை!... என்பதாய் நினைத்துக் கொள்வார்.
மான்கறி சரியான கனம் இருக்கும். அதைக் குதிரைமேல் போட்டுக் கட்டியெடுத்துக் கொண்டு திரும்புவார்கள். மானின் உடம்பில் இருந்து ரத்தம் ஒழுகும். வாசனை அந்த வளாகத்தையே நிரப்பும். ரத்த வாசனைக்குக் கழுதைப் புலிகள் சுற்றி வரும். ஓநாய்கள் படையெடுக்கும். புலி கிலி வந்திறக் கூடாதே என்று பயமாய் இருக்கும். திரும்பி புரூட்டசைப் பார்க்கிறார் அவர்.
கவலையே இல்லை அதற்கு. பயமே இல்லை. சகஜமாய்க் கூட வந்தது.
அந்த புரூட்டஸ் இப்போது இல்லை. இறந்து விட்டது. அவரே சுட்டு விட்டார்.
***

- வெள்ளி தோறும்  தொடர்கிறது
storysankar@gmail.com
91 97899 87842

Thursday, December 20, 2018


இரண்டாம் பகுதி
முத்த யுத்தம் 
8

பெரியகுளம் பன்னீர்ப்புகையிலை நம்ம பாண்டித்துரை வேட்டைப் பிரியர். வீட்டின் நடுவறையில் ஆணியில் இன்றும் அவரது துப்பாக்கி மாட்டியிருக்கிறது.
அருகே ஒரு இடுப்புயரப் படம். கோஞ்சம் கூர்ந்து பார்த்தால் அட, நம்ம அண்ணாச்சிதான் அது. இப்ப ஊத்தப்பமா ஆயிட்டாரு. அப்ப ஸ்பெஷல் சாதா தோசை போல… மாவு ஒரு மாதிரி புளிச்சி முத்திட்டா?... ஊத்தப்பம்!
கையில் என்ன அது? அட துப்பாக்கி. தோசை சுடுறதுக்கில்லய்யா, மிருகங்களைச் சுட.
குறிபார்த்த வாக்கில் நெஞ்சுக்கு நேரா உயர்த்திய பார்வை… அதை அவர் சுட்டிருந்தா என்னாயிருக்கும்?
ஃபோட்டோகிராபர் செத்திருப்பான்.
திரைப்படத்தில் அதைப் பார்க்கிறவனுக்கு, படத்தின் கிளைமேக்சில் இந்த துப்பாக்கி  பயன்படும்… அதை பாண்டித்துரையோ, அவர் சம்சாரம் பாகீஸ்வரி அம்மாவோ அல்லது திடுக்கிடும் திருப்பம் போல நம்ம கொழுக்கட்டையோ எடுத்து டுப்பென்று வில்லனைச் சுட்டு வீழ்த்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படக் கூடும். சினிமா பல விநோதங்கள் உள்ளடக்கியது. அதில் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு சுடும் பயிற்சி கண்ட வில்லன்கள் குறி தவறி விடுகிறது. கதாநாயகனோ அல்லது கிளைமேக்சில் மாத்திரமே பயன்படுத்தும் நாரிமணிகளோ சுடும் குறி தவறுவதேயில்லை.
பாண்டித்துரையின் பால்ய காலங்கள் காட்டு வளாகங்களில் அமைந்தன. பெரியகுளத்தில் இருந்து மேம்பக்கம் அண்ணாமலை தம்பிமலை. குளுந்த காத்தை வாங்கி ஊருக்குத் திருப்பி விடும் மலைகள்.
அதிகாலைப் பனியில் உப்புக் குவியல் போல பனி ஒளிர அதுகளைப் பார்க்கவே கொள்ளை அழகு. படகோட்டி எம்ஜிஆர் தொப்பி அண்ணாமலை என்றால் நாகேஷ் தொப்பி தம்பிமலை.
எந்த வெயிலும் தெரியாதபடிக்கு அத்தனை குளுமை. கீழடிவாரத்தின் மாந்தோப்பு… ஆக்சிடெண்ட் ஆன ஆளை வேடிக்கை பார்க்கிறாப் போல நெருக்கியடித்து மாமரங்கள். சரியாப் பாக்க முடியாத மரங்கள் குனிந்தும் எட்டியும் அடுத்தாள் முதுகில் கையால் அழுத்தியும் கிடக்கும். மாந்தோப்பு பாண்டித்துரையின் வம்சாவளி சொந்தம்.
வம்சாவளி ஆளுகள் டிக்கெட் எடுத்து இடத்தைக் காலிசெய்து போனபின் இப்போது பாண்டித்துரையின் அனுபவ பாத்யதைக்கு வந்திருக்கிறது. எப்ப வந்தாலும் தோப்பு நடுவில் அவர் தங்கிக் கொள்ள மூங்கில் சார்ப்பு போட்ட குடில். ஓர் ஓரத்தில் இன்றும் உருண்டு கிடக்கிற காலி விஸ்கி பாட்டில்கள்.
பாண்டித்துரை வந்திருந்தா மறு ஓரத்தில் அவரு உருண்டு கெடப்பாரு. நடுப்புற பாய் கிடக்கும். பக்கத்தில் அவரது வேட்டி பாம்புச்சட்டை போல. பாண்டித்துரை முண்டக்கட்டையாக் கெடப்பாரு. இடுப்பு நடுப்புற பாம்புக்குட்டி.
தொந்தியா அது? குழாய் வைத்த மண்பானை. அட அதைப்பத்தி கூட ஒரு கதை உண்டு.
ஒருத்தி குயவன் கடைக்குப் போயி பானை விலை கேட்டிருக்கா. அந்தப் பானை என்ன விலை? பத்துரூவா. இது? பத்து ரூவா. அவள் கிண்டலாக அவன் தொந்தியைக் காட்டி, இது?... என்றாள். அம்பது ரூவா! ஆத்தி. இதுக்கு மாத்திரம் ஏன் இம்புட்டு விலை? இது குழா வெச்ச பானையில்லா, என்றானாம் குயவன்.
தோப்புக் காவலாளி நல்லான் தங்க தனியே வெளியே சிறு குடிசை இருக்கிறது. என்றாலும் முதலாளி இல்லாத நாட்களில் அவன் உள்ளதான் படுக்கறது. மாம்பழங்களை உதிர்த்துப் பெறக்கி அடுக்கி சைஸ்வாரியாப் பிரிச்சி வண்டில ஏத்தியனுப்ப கொள்ள என நித்தியப்படி வேலைகளில் அவன் மேற்பார்வை உண்டு.
யார் வீட்டுக்கு விருந்தாளியாகப் போனாலும் பிஸ்கெட்டோ பழமோ வாங்கிப் போகிறாப் போல, அவனைப் பார்க்க வர்றாளுங்கள் பீடிக்கட்டுகளுடன் வருகிறார்கள். ஓட்டல் சர்வருக்குப் பென்சில் போல அவன் காதில் எப்பவும் பீடி.
பாண்டித்துரையின் வேட்டைத் துணை அவன்தான். அவன் குறி தப்பவே தப்பாது… என மத்தவரை விட பாண்டித்துரை அபாரமாய் நம்பினார். அதனால்தான் அவனைக் கூட அழைத்துப் போனார்.
இன்ன வேட்டை என்று வேட்டையாடக் கிளம்பு முன்தான் முடிவெடுப்பார். அடிவார வளாகத்தில் கரடிகள் வரத்து அதிகம். கரடிகள் ஏனோ தலையை ஆட்டியாட்டி வருகின்றன. சைஸ் சின்னதாய் மட்டும் இருந்தால் அவை குழந்தையின் பேட்டரி பொம்மை போலிருக்கும். குழந்தையின் பொம்மைக் கரடிகள் ஜால்ரா அல்லது பேண்டு அடிக்கும். ஏலே இது நெசக் கரடி. மனுசாளையே அடிச்சிரும்.
இரவுகளில் தோப்பின் எல்லைகளில் இப்பவும் கரடி நடமாட்டம் உண்டு. எத்தனை வேலிக்கும் கரடிகள் அசருவதேயில்லை. பாண்டித்துரை இரவுகளில் அங்கே வந்தால் தீவட்டி ஏத்தி வெச்சிதான் படுக்கறது. திடீர்னு கரடி உள்ள புகுந்திட்டா என்ன செய்யிறது…
நல்லான் சுடுவான். அவன் குறி தப்பாது… என்றாலும் அந்த அரைகுறை இருட்டில் எது கரடி எது அண்ணாச்சின்னு தெரியணுமே?
யார்ட்ட எந்த அகராதித்தனம் கொண்டாடினாலும் நல்லான் கிட்ட மாத்திரம் அண்ணாச்சி வெவகாரம் செய்ய மாட்டாரு. அவன் குறி தப்பாது!
இருட்டில் காட்டில் நடந்து போகிறதே தனி அனுபவம். கைக்கடிகாரச் சத்தம் போல மார்பு அடிக்கிற சத்தமே துல்லியமாக் கேட்கிற இருள். ஓட்டம் எடுக்கத் துடிப்பான கால்கள். முன்னே நல்லான். காட்டின் எல்லைகள் அறிந்தவன் அவன். சின்ன வயதில் அடிக்கடி அவனை மிருகங்கள் துரத்தி எல்லைவரை விரட்டியடித்திருக்கும் போல…
அது பரவாயில்லையே? வழி தவறிட்டா என்னா செய்யிறது?
வேட்டையாட முக்கியமா விலங்குகள் பத்தி சூட்சும அறிவு வேண்டியிருக்கிறது. சாதா அறிவே பத்தாத அண்ணாச்சிகளுக்கு சூட்சும அறிவுக்கு எங்க போக.
கரடிகள் நல்லா மரமேறும். கரடி துரத்திட்டதேன்னு அவசர அவசரமா மரம் ஏறப்படாது. கீழிருந்து கரடி கூடவே ஏறும். எப்டி இறங்கறது… இறங்கும் வழில அது இருக்குதே?
கரடிகளும் மரம் ஏறுமேயொழிய இறங்கத் தெரியாது. பொத்னு குதிச்சிரும்.
பாம்புகள் ஜோராய் மரம் ஏறும். பார்த்து மலைத்திருக்கிறார். மரப் பொந்துகளில் பறவை முட்டைகளைத் தேடி பாம்புகள் மரமேறுகின்றன.
ராப்பொழுதுகளில் காட்டின் விநோத வாசனை. அதன் பிரத்யேக சத்தங்கள். ஆஸ்த்மா கிழடுகள் போல மிருக உருமல்கள். ஆளுயர கோரைப் புற்களைப் பற்றி வளைத்து இழுத்து யானைகள் கூட்டமாய் வந்து உண்ணும் காட்சிகள்.
மனுசாளை விட மிருகங்களுக்கு ராத்திரிக் கொண்டாட்டம் அதிகம். பார்வை உக்கிரமும் அதிகம். ராத்திரி பூனைக் கண்ணைப் பார்த்தாலே பயமாய் இருக்கும். மிருகக் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியுமா? அதுக்கு செயற்கைக் கண் வெச்சிருக்காப்டி மனுசன்.
பாண்டித்துரை ஆத்திர அவசரத்துக்கு டார்ச் எடுத்துப் போவார். ஆறுசெல் பேட்டரி. எட்டுசெல் பேட்டரி. தட்டினம்னா சும்மா ஒன் ஹெச்பி மோட்டார் போல வெளிச்சத்தைப் பீய்ச்சி யடிக்கும்.
கைக்காவலுக்கு டார்ச் என்றாலும் அணைத்து விட்டு நடந்து போவார்கள். திடுதிப்னு ஏதாவது மிருகம் வழி மறிச்சா, அது எதிர்பாராம, அதும் முகத்துக்கு நேர டார்ச்சை அடிச்சா… குபீர்னு பதறி ஓட்டம் எடுக்கும் பாரு. ஆசுவாசப்பட்ட பின் அதை நினைச்சு நினைச்சுச் சிரிப்பு வரும்!
காட்டில் அவருக்கு முன்னால நல்லான் போவான் – அதைத் தனியா சொல்ல வேண்டியதில்லை. அவனுக்கு டார்ச் தேவையில்லை. அட பயமுங் கிடையாது. நாலடி மூணடி கிட்டத்ல கரடியை சந்தித்திருக்கிறான். தப்பிக்கிற நேக் தெரிந்தவன் அவன்.
வெறுங் கையோட அதிகபட்சம் துப்பாக்கியோட போனாத் தேவலை. துப்பாக்கி, அப்புறம் நீளக்கத்தி. பத்தும் பத்தாததுக்கு டார்ச். குடிக்கத் தண்ணி, பைனாகுலர், கேமெரா.. ன்னு போனா இவுக வேட்டையாடப் போறாகளா, பிக்னிக் போறாகளான்னே சந்தேகமாயிருதுல்லா?... நம்ம வாத்தியார் பாடல் என்ன? “வேட்டையாடு விளையாடு”ன்றாப்ல…
மான்வேட்டைன்னா கொஞ்சம் உள்ளாரப் போகணும். மான் கூட்டம் ரொம்ப உஷார்ப் பார்ட்டி. எப்பவும் கூட்டங் கூட்டமாதான் திரியும். இரையெடுக்கும்… அப்பப்ப தலையைத் தூக்கிப் பார்த்துக்கும். சிறிய சத்தத்துக்கும் காது விரைக்க நிமிர்ந்து மருட்சியுடன் சுத்து முத்தும் பார்க்கிறதே அழகு.
ஆனால் என்ன ஒரு செளகரியம், ஒரு மானைச் சுடக் குறி பார்த்தால், அடுத்த மான் சாகலாம். நாமளும் இதத்தான் குறி பாத்தேன்னு சமாளிக்கலாம்.
ஐயோ மான் மாமிசம் என்ன ருசி. நினைக்கவே இப்பவும் நீர் ஊறி விடுகிறது அண்ணாச்சிக்கு. மான் கால் சூப் – அதைத்தான் ஆங்கிலத்தில் சூப்பர்ப் என்கிறார்கள்!
வேட்டைக்காரர்கள் இப்பவும் செத்த மான் உடலைத் தூக்கித் தோளில் போட்டபடி ஊருக்குள் விற்று வருகிறார்கள். மானும் தேனும் விற்பனைக்குறுதி… ஆலும் வேலும் பல்லுக்குறுதி, என்கிறாப் போல.
அடடா, நிலா வெளிச்சத்தில் காட்டுக்குள் நடமாடுகிறதே கொள்ளையான அனுபவம். போனாப் போகட்டும் என்று அம்மணிகள் குழந்தையை வெளியே விளையாட அனுமதித்தாற் போல ஒளி கசியும் கானகம். சில சமயம் நடுவில் புல் இல்லாத வெளிகள் கிடக்கும். புற்கள் வெட்டப்பட்டோ அல்லது இடுப்புயர அளவில் வளர்ந்தோ கிடக்கும். அந்த அமைதியில் அங்கே நின்று வானத்தைப் பார்க்கணும்யா. ஆமாமாம், பக்கத்துல நல்லான் இருந்தாதான் ரசிக்க முடியும்.
சில சமயம் சத்தமில்லாம… நல்லானுக்கு பதிலா கரடி வந்து நின்னாலும் நின்னுரும். நல்லான் கொஞ்சம் நில்லுன்னு நிக்கச் சொல்லிட்டு அவரும் நிப்பாரு. காட்டின் நல் வாசனை. லேசான குளிர். நல் வெளிச்சம். ரொட்டியில் வெண்ணெய் தடவினாப் போல என்ன இதமான வெளிச்சம். அதைச் சாப்பிட ஆசையாக் கெடக்கும். வேட்டையாட வந்தம்னே மறந்துரும்.
ஏதாவது மிருகத்தின் உருமலே அதை ஞாபகப்படுத்திரும்னு வெய்யி.
பொங்கல் வெச்ச பானையா நிலா. பொங்கிய பாலாய் வெளிச்சம். டாப் ஆங்கிள் ஷாட்! அந்தப் பால் குடிச்சம்னா சுட்டுப் பொள்ளீரும். இது குளுமையோ குளுமை. இதையெல்லாம் அனுபவிக்கக் கொள்ள நல்லானுக்குத் தெரியாது. “என்ன சாமி ஒண்ணுக்கு இரிக்கணுமா?” என்பான்.
ஞாபகப் படுத்தினாப்ல அப்பதான் மூத்திரம் முட்டும் அண்ணாச்சிக்கு. அவரைப் பார்க்க, அவனுக்கும் வரும்.
வேட்டையாட நல்ல நிலா வெளிச்சப் பொழுதாய்க் கிளம்பறது நல்லது. தப்பி ஓடியாறதுக்காவது வெளிச்சம் வேணும்ல? எங்கியோ கேட்கிற மிருகச் சத்தத்துக்கு பயந்தலறி திக்கு திசை தெரியாம முட்டி மோதி அவசர அவசரமா ஓடி… நேரா கரடி கிட்டத்லியே போயி நின்னம்னா?
வேட்டையாடுவது ஒரு ருசி. மிருகத்தின் மாமிசம் ஒரு ருசி. அதைவிட ராத்திரியில் காட்டுக்குள்ளான அனுபவம்… அதன் ருசி தனி.
நல்லான்தான் அவருக்கு மரம் ஏறச் சொல்லிக் கொடுத்தான். ஆமாமா, ஏர்றது என்னத்த ஏர்றது? இருக்க பயத்துக்கு விழுந்து கூட்டியாவது, கொடியும் செடியும் பிடிச்சிக்கிட்டு ஏறிப்பிடலாம். விரட்டி வந்த மிருகங்கள் ஓடிரும். பெறகு எறங்கணும்லா? வசம் பாத்து எறங்கறதே தனி டெக்னிக். தெரிஞ்சாளுகதான் செய்ய முடியும்.
அவுக போன சென்மத்துக் குரங்கு வம்சாவளிகளா இருக்கலாம்.
குரங்குன்னு கிண்டலெல்லாம் வேணாம். நம்ம ஆஞ்சநேய ஸ்வாமி சஞ்சீவி மலையையே கூம்பா மடிச்ச பேப்பர் ரோஸ்ட் போலத் தூக்கலியா?
சிலர் வேட்டையாடாட்டியும் ராத்திரி காட்டைப் பார்க்க, படம் எடுக்க பிரியப் பட்டு வருவார்கள். உள்நாட்டு வெளிநாட்டுப் பார்ட்டிகள். அப்படி சில ஆட்கள் ஃபோட்டோவும் பாண்டித்துரை வீட்டு நடுவறையில் இருக்கு. தோளில் மாலை சுமந்த உற்சாகச் சிரிப்பாய் வெளிநாட்டுக்காரியும் கூட பாகீஸ்வரியும் என்ன காம்பினேஷன்! டிகாஷன் அருகே பால்!
பெரும்பாலும் வெயில் தாழ அடிவாரத்தில் இருந்து கிளம்பினால் வெயில் உள்வாங்க வாங்க காட்டுக்குள் முன்னேறலாம். நல்லான் டூருங் டாக்கீசில் பாதிப்படம் ஓடுகையில் ஒண்ணுக்கு அடிக்க எந்திரிச்சி போகிறவனைப் போல இடப்புறம் வலப்புறம் இலை தழைகளை ஒதுக்கிக்கிட்டே முன்னே போவான். ரொம்ப அடர்த்தியா உள்ள போகணுன்னா மாத்திரம் பயன்படுத்த பெரிய சைஸ் கத்திரிக்கோல் வெச்சிருக்கான்.
பின்னாடியே தடம் பார்த்துக் கொண்டு போகலாம். போதும் என்று தோணுகிற அளவில் – அது என்ன அளவு அது? நம்ம தேவைப்படி அதை அவனே முடிவெடுப்பான்.
நல்ல வசமான மரமா அவனே தேர்வு செய்வான். யானைகள் முட்டு தூக்கித் தருவதைப் போல மரத்தில் முண்டு முண்டாய் இருக்கும்… பொம்பளையாளுகள் கொண்டை போட்டாப் போல. பிடித்துக் கொள்ள, காலால் மிதித்து ஏற சவுகரியம்.
நல்லா ரெண்டாள் மட்டம் மூணாள் மட்டம் ஏற மரம் வளைவாய்ச் சற்று நீட்டி திரும்ப ஏறியிருக்கும். நாலைந்து மனுச மக்கள் உக்காரலாம் போல. இருட்டும் வரை காத்திருப்பார்கள்.
அன்னப் பறவையின் சிறகு கொண்டு வானத்தில் மேகங்களை வரையும் காலம். அட அது வேற உலகம்யா. நம்ம அண்ணாச்சி அந்த அனுபவத்துக்குக் கிறுக்கு பிடிச்சித் திரிஞ்சாப்ல…
எப்படா பெளர்ணமி வரும்னு காத்திருப்பார். நிலாவும் அந்த வெளிச்சத்தைக் கிழித்து விடாத கவனமுடன் நடமாடும் குளுந்த காத்தும்… ஆ, அந்த அமைதியும். அவரது சின்ன மூச்சுக்கும் மரத்தில் ஏதாவது பொந்தில் ஏதாவது பறவை கலவரப்படலாம். எழும்பிப் பறந்து தவிக்கலாம்.
உடனே காட்டின் முகமே மாறிரும். சினிமால கிளைமாக்ஸ் போல காட்டில் பரபரப்பு. மான்களும் காட்டெருமைகளும் அலைபாயும். குரங்குகள் தவிச்சித் தடுமாறும்.
மரம் ஏறி உக்காந்தம்னா சத்தமே வரப்படாது. மூச்சு விடப்படாது. அப்ப உனக்கே காடு தட்டுப்படும். ஒயிலாய் நடை பழகும் மான்கள். அஜீரணத்துடன் திண்டாடுகிறாப் போல வயிறை எக்கி எக்கி சத்தங் கொடுத்தபடி ஓநாய்கள் நரிகள் கழுதைப்புலிகள்… அட ஒண்ணுமில்ல புதருக்குள் காட்டுச் சேவல்கள் நடமாடும் அழகு. காட்டுப் பன்றிகள். முள்ளம் பன்றிகள். நம்ம பண்ணையார் வீட்டுப் பொம்பளைகள் பெரிய ‘ட்டியார் ராஜகுமாரி’ வம்சம் போல டிரஸ் பண்ணி அலட்டுவதைப் போல… முள்ளம் பன்றிகள். மயில்னு நினைப்புடன் முள் விரைக்க நடமாடும்.
பாண்டித்துரையின் முதல் வேட்டை அனுபவம் வித்தியாசமானது. நல்லான்தான் யோசனை சொன்னது. நடந்து விரட்டி ஓடி கீடி… இதெல்லாம் இப்பசத்தைக்கு வேணாம். மரத்துல ஏறி உக்காந்துகிட்டு குறியெடுத்துச் சுடலாம்!
அப்படியே ஆகட்டும்னாரு பாண்டித்துரை.
சுடும்போது குண்டுபாயும் அந்த ஃபோர்சுக்கு எதிர் விசை உருவாகித் தோளில் முட்டித் தள்ளும்.
மான்வேட்டை. வசமான மரத்தில் ஏறிக் காத்திருந்தார்கள். புது அனுபவம். மனம் பூரித்துப் பரபரத்துக் கிடந்தது. நெஞ்சு திக் திக் என்றது.
மான்கள் மெல்ல நடமாட ஆரம்பித்த ஜோர். நிலாப் புல்வெளி. நடுவே தலை நீட்டியபடி மான் கூட்டம். மாமன் மச்சான் மருமகப் பிள்ளை பேரன் பேத்தி சம்பந்தி சித்தப்பா பெரியப்பா. சிநேகித வட்டாரம். வாயைப் பிளந்தபடி அந்த அழகில் சொக்கிப் போனார்.
நல்லான்தான் உசுப்பினான்.
குறி பார்த்தார். டமார்! எந்த மான் கீழே விழுந்ததோ தெரியாது. அவர் விழுந்தார்.
*
(வெள்ளி தோறும் தொடர்கிறேன்)
storysasnkar@gmail.com
97899 87842

Thursday, December 13, 2018


தொடர்கதை/எஸ்.சங்கரநாராயணன்
முத்தயுத்தம்
7
ஸ்ஸை நம்ப முடியாத சூழலிலும் காலை சீக்கிரமே கிளம்பி வந்து விடலாம் என்ற யோசனையிலும் ஐயம்பெருமாள் சைக்கிளில் மேலப்புதூர் வரை போவது நல்லது என நினைத்தான். சும்மா இல்லை. எட்டு ஒன்பது கிலோமீட்டர், அதும் சைக்கிளில். அந்தப் பக்கங்களில் காத்தும் மேலிருந்து கீழ்வாக்கில் வலித்து வாங்கியது. நல்ல எதிர்காத்தில் அவன் மாட்டிக் கொண்டான்.
தொடை விட்டுப்போனது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாகம் தாகம்னா அப்டியொரு தாகம். சைக்கிள்ல சீட்டு வேற சரியில்லை. ஸ்பாஞ்சே இல்லை. கழுதையின் மண்டையோடாய் இருந்தது. தவிரவும் அடிக்கடி கழுத்தைச் சொரிந்து விடச் சொல்லி நீட்டுகிற பசுமாடு போல முகத்தைத் தூக்கியது சீட். கீழே ஸ்க்ரூ டைட் பத்தாது. அது பாதகமில்லை. ஆனால் அதன் ஊக்குக்கொண்டை போன்ற முன்வட்ட இரும்பு வளையத்தின் இடுக்கில் அவ்வப்போது அவன் ‘குஞ்சலம்’ சிக்கு சிக்கென மாட்டிக் கொண்டது. எறும்பு ஊறும் அண்டர்வேர் அணிந்து கொண்டாற்போல திடீர் திடீரென வலி… ஆவெனத் துடித்து டான்சாட வைத்தது. கெட்ட சீட்டின் அழுத்தம் தாளாமல் அடிக்கடி ஒண்ணுக்கு வந்தது.
மோசமான தெருவில் விளக்கு கிடையாது. ஒழுங்கா பஸ் பார்த்து வந்திருக்கலாம். இத்தனை அவஸ்தைகளின் நடுவே முதலாளி காலையில் என்ன சொல்வாரோ என்ற பயம் வேறு.
வீடு வந்து சேருமுன் மயங்கி விழாத குறைதான். ஒன்பது கிலோமீட்டர்லாம் சைக்கிளில்… அதும் தூக்கங்கெட்ட சமயத்தில் வரலாமா… அட ஆக்கங்கெட்ட மூதேவி, என்று தன்னையே திட்டிக் கொண்டான். சைக்கிளை விட்டு இறங்குங்குள்ள இடுப்பு கடுத்து எலும்பெல்லாம் கலகலத்து பேண்ட்டுக்குள் தேன்கூடாய் வீக்கம். அட இத்தோடு… வீட்டில் பத்மினி இருக்கணுமே, என்று ஒரு கவலை. அதைவிடக் கலவரமான விஷயம்… காலை சீக்கிரம் வந்து சேரணும்.
வாழ்வில் இத்தனை சோதனைகள் வந்தால் என்ன பண்ணுவான் மனுசன்?
வந்து வீட்டு வாசலில் இறங்குகையில் இறங்கவே தெம்பு இல்லை. நிற்க முடியல்ல. கால்கள் வெட வெடவென்று நடுங்கின. அட, ஹேண்ட்பாரில் இருந்து காலைத் தூக்கிப் போட்டு இறங்கவே திகைத்துப் போனது.
தெருவில் இருட்டு நன்றாய் இறங்கி ஊறியிருந்தது. படுத்திருந்த தெருநாய் ஒன்றின்மேல் ஏத்தத் தெரிந்தான். காலைக் குதறியிருக்கும். நல்லவேளை! வீட்டு வாசல் வளாகமே தெரியவில்லை. பார்வையில் ஓர் இருட்டு அப்பி மீண்டது. இவள்… உறங்கியிருப்பாளோ என்று தோணியது. மணி எப்படியும் ஒம்பதரை பத்து இருக்கும். பசியான பசி. தள்ளாடி இறங்கி கண் மயங்க நின்றபடி கதவைத் தட்டிவிட்டு தள்ளாடிக் காத்திருந்தான்.
***
காலையில் அவனிடமிருந்து சேதி வந்ததுமே அவளுக்கு மிதக்கிறாப் போலிருந்தது. மனசெங்கும் பரபரப்பு. இனி விடிவுகாலம் ஆரம்பிச்சாச்சி என ஒரு உள்த் தித்திப்பு. “அப்பா வராஹட்டி ஒன்னியப் பாக்க” என்று குழந்தையைக் கொஞ்சுகிறாள்.
“ப்-பா” என்று தனம் படத்தைத் தேடியது.
“அடி என் சில்லுக் கருப்பட்டியே… இங்கன எங்கருக்கு… நம்பூர்லல்ல இருக்கு…” என்று அவள் குழந்தைக்கு முத்தம் வைத்தாள். “எய்யா நான் ஊருக்கு இப்பமே போயாவணும்… அவுக எப்ப வராஹளோ தெர்லியே… அவக வரச்சில நான் இருக்கண்டாமா?”
”சரி” என்று ஐயா துட்டுக் கொடுத்து பஸ் ஸ்டாண்டு வரை வந்து ஏத்தி விட்டார். அவருக்கும் மாப்பிள்ளையைப் பார்க்கலாம்னு ஒரு இதுதான்… “ஏளா தனியாப் போயிருவியா மகளே? காசு கொஞ்சம் இடிக்கும் போலுக்கே…” என்றார் தயங்கி.
இந்நேரம் இவரு எதுக்கு அங்க, என வெட்கத்துடன் நினைத்துக் கொண்டாள். சிரிப்பு வந்து விட்டது. “அதெல்லாம் பரவால்ல, அவுக ஒண்ணும் நினைச்சிக்க மாட்டாக” என்று அவசர அவசரமாய்க் குழந்தைக்கு ஜெட்டி கூடப் போடாமல் தூக்கி இடுப்பில் ஏத்திக் கொண்டாள். விறைப்பு காட்டிய மயிரை வலிக்க வலிக்க, குழந்தை அழ அழ உச்சியெடுத்து தென்னை மரம்போல ஓர் அமைப்பில் ரப்பர் பேண்டால் முடிபோட்டு பவுடர் அடித்து, ஒழுகும் மூக்கை “சிந்துட்டி மூதேவி” என்று அவசரப்படுத்திக் கிளம்பினாள்.
பஸ் கிளம்பும்வரை அவபட்ட பாடு. ஏதோ மாப்பிள்ளை மகராசன் அங்கே பாய்விரித்துக் காத்துக் கிடக்க மாதிரி!
முதலில் ஒத்துழைக்க மறுத்த தனம் பிற்பாடு வெளியே கிளம்புகிற உற்சாகத்துக்கு வந்துவிட்டது. மாடும் ஆடும் மனிதர்களும் என்று உலகத்தில் எத்தனை சமாச்சாரங்கள்… அது அப்பாவையே மறந்திருந்தது! தெருவில் அம்மா முகத்தைத் திருப்பித் திருப்பி அது ஓராயிரம் பேச்சு பேச முயல்கிறது. அம்மாவின் பாராட்டை எதிர்பார்க்கிறது. அவளுக்கோ ஆயிரம் யோசனை. தனத்தை அவள் கவனிக்கவேயில்லை.
பஸ்சில் நல்ல கூட்டம். வியர்வைக் கவிச்சி. சுவாசிக்கத் திணறியது அதற்கு. மூக்கு ஒழுக ஒழுக அலறி விறைத்தது. மார்பைத் திறந்துவிட்டு அடக்கப் பார்த்தாள். அவள் சீட் பக்கம் ஆம்பளையாள் ஜனம் கூடிட்டது. கூச்சமாய்க் கோபமாய் வந்தது. இருந்த ஆத்திரத்தில் குழந்தை முதுகில் நாலு சாத்து சாத்தினாள். கடைசியில் விசும்பி விசும்பி விரல் சூப்பியபடியே அது உறங்கி விட்டது.
காலை அவள் கிளம்பி அப்படி வருகிறாள் பரபரப்புடன். அதுவரை வீட்டில் இருந்த மாப்ளை அப்பதான் கிளம்பிப் போயிருக்கிறான்… அடடா, என்றிருந்தது.
“அட, ஆமான்றேன். கார்ல வந்தாரு!” என்றாள் கிழவி.
காரிலேயே திரும்ப வரப்படாதா?... காலையில் இருந்து காத்துக் கிடந்தால் அவன் ஆள் அட்ரசையே காணோம். வாழைப்பூ வீட்டுத்தோட்டத்தில் பறித்துக்கொண்டு வந்திருந்தாள். வாழைப்பூ துவையல் அவனுக்குப் பிடிக்கும். சமைத்து வைத்துக் காத்திருந்தாள்…
படத்தில் அவனைப் பார்க்கப் பார்க்க மார் பொங்கியது. மனசில் ஆயிரம் யோசனை. சிரிப்பாணிக்குக் குறைவில்லை. இனி கஷ்டமேயில்லை. துயரமேயில்லை… என்கிறாப்போல ஒரு மெத்தென்ற மிதப்பு.
அட கஷ்டம் வந்தா சேந்து அதை அனுபவிப்பம்… அதுவே தெம்புதானே?
மனசில் கனவுகள் அலை புரட்டின. சீச்சீ, என வெட்கப்பட வைத்தன. வெளிய வெறைப்பு காட்டும் ஆண்கள் வீட்ல நாலு சொவத்துக்குள்ள, அதும் இருட்டுல எத்தனை குழந்தையா மாறிர்றாங்க?
வீட்டுக்குள்ள... அது வேற மாதிரி வெறப்புல்லா!
சிலுப்பி விரைத்த தலையைத் தண்ணி போட்டு வாரி, முடிந்தவரை படியச் செய்த அவன் படம். அருகே அவள். அவள் தாண்டிப் போகும் தோறும் அவன் அந்தப் படத்தில் இருந்து கையை நீட்டி அவளைப் பிடித்து இழுக்கிறாப் போல… என்னென்னவோ பைத்தாரக் கற்பனைகள்.
மதியம் ஆச்சி. சாயந்தரமாச்சி. அவுக ஆளே வரவில்லை. இதில் இசக்கி வேற அடிக்கடி வந்து “அவன் வந்தானா, வந்தானா?” என சூடேத்திக் கொண்டிருந்தான்.
இருட்டி விட்டது. சரி, இனி நாளைதான் வருவாக, என நினைத்து அலுத்துப் போய்ப் படுத்தாள்.
வந்து இறங்கினான் ஐயம்பெருமாள். காரில் அல்ல சைக்கிளில். இறங்கி நிக்கயேலாமல் ஒரு குடிகாரத் தள்ளாட்டமாய் இருந்தது. இறங்கியபோது ஒரு மோசமான தேவிடியா விளையாட்டைப்போல – கடைசியா ஒருதடவை தொட்டுக்கறேன் – என்று சீட் ஊக்கு அவன் தேன்கூட்டைப் பதம் பார்த்தது. சின்ன வயதில் துரைசாமி வாத்தியார் ஆள்காட்டி விரலாலும் பாம்பு விரலாலும் இடுக்கி போலச் செய்துகொண்டு அப்படித்தான் கிள்ளுவார்…
”ஆரது?” என்று உள்ளிருந்து கேட்ட அவள் குரல் பெரும் ஆறுதலை அளிக்கிறது. தயங்கித் தயங்கி கதவைத் திறந்தால் காத்துபோன பலூனாய் அவன். இடுப்பில் இரும்பு குண்டு என்பது வேறு கதை…
அப்படியே குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேசன் ஆன மாதிரி அவள் தோளைப் பிடித்துக் கொண்டே தள்ளாடி உள்ளே வருகிறான்.
பேண்ட்டைக் காலில் இருந்து உருவி எடுக்கவே தெம்பு கிடையாது. காலே வீங்கி துப்பாக்கி உறையாய் ஒட்டிக் கிடந்தது பேண்ட். அவளே உதவி செய்ய வேண்டியிருந்தது. ஜிப்பு வேறு எசகு பிசகா மாட்டியிழுத்து ஆவென அலறினான். மாத்துத் துணி கூட வேணாம்… காத்தாட அப்படியே விட்டுட்டா நல்லது.
ஆங்கில எழுத்து “வீ” போலக் காலை விரித்துக் கிடந்தான்.
“பசிக்குதுடி எதுனாச்சிம் குடு”
“இப்பதான் இசக்கி கிட்டக் கொடுத்தேன்.”
அதும் போச்சா?
“சரி, பாலாவது எடுத்திட்டு வரவா?”
“ஐய பிள்ளைக்கு வேணுல்லா?” என்று சிரித்தான்.
”நீ சாப்டியா?” என்றான் தலையை மாத்திரம் திருப்பி.
“இல்ல” என்றாள்.
“ஏன்?”
அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். வா, என அருகே அழைத்தான் சைகையாய். கிட்ட வந்ததும் கையைத் தூக்கி அவளை இழுத்து நெற்றியில் முத்தங் கொடுத்தான்.
அப்படியே சாய்ந்து அவன் மேல் படுத்துக் கொண்டாள்.
மெலிதான வியர்வை வாசனை. ஹாவென உள்ளிழுத்தான்.
“என்னா இப்டி வீங்கிக் கெடக்கு?” என்றாள்.
இருந்த வீக்கத்துக்கும் அதுக்கும் அவள் வருடல் சுகமோ சுகம்.
அதை அனுபவிக்க முடியாமல் அவள் அடுத்து ஒரு கேள்வி கேட்டாள்.
“இந்த வீக்கத்தோட இதே வண்டில காலைல நீங்க திருப்பிப் பெரியகுளம் போணுமே?”
”ஐயோ” என்றான்.
***
இரவெல்லாம் உடம்பு வலியில் முனகிக் கொண்டு கிடந்தான் போல. திரும்பித் திரும்பிப் புரண்டிருக்கிறான். நல்ல தூக்கம், அசதி. லேசான ஜுரம் இருந்தது. அவள் அவனைத் தொந்தரவு செய்யவே இல்லை.
முன்னைக்கு இப்போது எவ்வளவோ மாறியிருந்தாள் பத்மினி. காலம் கற்றுத் தந்த பாடங்கள். தவிர வயதின் முதிர்ச்சி. இல்லாட்டியும் அவள் இப்ப சிறு பெண்ணா என்ன? அம்மையில்லா?...
அவனிடம் யோசனை கேட்காமலேயே நிறையக் காரியம் பண்ணியிருந்தாள். தபாலாபீஸ் போய் பெரிய குளத்துக்குக் கால் போட்டு பி.பி.பி.க்கு “அவுகளுக்கு மேலுக்கு சொகமில்லை. ஒருநா ரெஷ்ட் எடுத்திட்டு வரட்டும். தயவு செஞ்சு அனுமதிங்க” என்று ஏற்பாடு செய்தாள். பி.பி.பி.தான் போனை எடுத்தது. பொம்பளைக குரல் அடிக்கடி வரும் அவருக்கு. பாத்தா இது விசயம் வேறாயிருந்தது!
அவளே பேசியதால் “ஐய அதுக்கென்ன” என்றது வாய் தன்னைப்போல. உண்மையில் அவன் பேசியிருந்தால் போனிலேயே போட்டு வாட்டியிருப்பாரு!
மறுநா மதியம் போலத்தான் ஐயம் எழுந்தான். தலை பாரம் அடங்கவில்லை. அவள் ஒரு பக்கமாய் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். மெல்ல கிட்டே போய் அவளையும் குழந்தையையும் ஒருசேர அணைத்துக் கொள்கிறான். மனசில் தனி ஆனந்தத் திகட்டல்.
மார்பில் இருந்து தலையை எடுத்து “-ப் பா!” என்கிறாள் தனம். “ஆமாண்டி செல்லம்” என்று குனிந்து அதன் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தான். “ஐயோ நேரமாச்சிட்டி” எனப் பதறி எழுந்தவனை நிதானப் படுத்தினாள். “இன்னிக்கு வரமாட்டீகன்னு தாக்கல் சொல்லியாச்சி” என்கிறாள் புன்னகையுடன்.
போய் ஒண்ணுக்கிருந்தபோது மஞ்சளான மஞ்சள். சூடு கிளம்பி வலியெடுத்தது. ஆவி பறந்தது. அவள் சுடுசோறு எடுத்துப் போட்டு மஞ்சளாகிறதா என்று பார்த்தாள். நல்லவேளை! காமாலையில்லை…
சூடான வீட்டுக்காபி. இன்று பூரா ஓய்வுதான். டிங்டாங் பெல் வியர்வைக் கசகசப்புக்கு ஒட்டிக் கிடந்தது. கியர் மாற்றி நிமிர்த்திக் கொண்டு குப்புறப் படுத்துக் கொண்டான். முதுகில் குழந்தை ஏறி யானை விளையாட்டு விளையாடியது இதமாய் இருந்தது. டர்பண்டைன் வாங்கி வந்து முதுகு பூராவும் அரக்கப் பரக்கத் தேய்த்து விட்டாள் பத்மினி. பின் கழுத்தை விறைத்துக் கொள்ளச் சொல்லி கழுத்து நரம்புகளை அழுத்தி நீவி விட்டாள். உடம்பு வலிக்கும் அதுக்கும் சூப்பர்!...
வெந்நீர் விளாவி வைத்திருந்தாள். அவன் குளிக்கப் போக, பின்னாடியே வந்து முதுகு தேய்த்து விட்டாள். என்ன அனுசரணையாய் பார்த்துப் பார்த்துச் செய்கிறாள்…
”ரொம்பத் திண்டாடிட்டியாடி?” என்று கேட்கும்போதே அழுகை வந்தது. அவள் புன்னகை செய்கிறாள். அக்குளில் அவன் சோப்புத் தேய்த்துக் கொள்கையில் கிச்சுக்கிச்சு மூட்டுகிறாள். சிரிப்பு தாளவில்லை. தொட்டதுக்கெல்லாம் சிரிப்பு! – என்பது இதுதானோ?
இடையிடையே தனம் வந்து என்னென்னமோ பேசுகிறது. அவள் பேச்சை யார் கவனித்தார்கள். அவர்கள் குழந்தை தூங்கக் காத்திருந்தார்கள்!
தொட்டனைத்தூறும் மணற்கேணி மா (ந்) தர்க்குக் கற்றனைத்
தூறும் (செக்ஸ்) அறிவு
                  – ஜொள்ளுவர்.
***
(முதல் பகுதி முற்றும்)
வெள்ளிதோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com
91 97899 87842


Thursday, December 6, 2018



வெள்ளிதோறும் / தொடர்கதை

மு த் த யு த் த ம்
6
யம்பெருமாளுக்கென்றே ஒரு ராசி போல… அவன் கடன் கேட்டுப் போகும் போது அநேகமாக, “அட, இப்பதான் நம்ம பார்த்தசாரதி கேட்டான்னு குடுத்திட்டு வந்தேன்” என்பார்கள். அல்லது காபி குடித்த தம்ளரைக் கீழே வைத்துவிட்டு “ஏய் வாடேய், எப்டியிருக்கே” என்பார்கள். என்னாத்தச் சொல்றது, என்றிருக்கும். தம்ளரைப் பார்த்தபடியே பேசிவிட்டுத் திரும்புவான்.
அடடா, கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் மனோன்மணி தரிசனம் கெடச்சிருக்குமே என்று நினைத்துக் கொண்டான். அவன் தருமன் கோவிலுக்குள் உள்ளே நுழைய, அவள் வெளியேறிப் போகிறாள்.
காலி தம்ளராய் தருமன் மலை வளாகம். அந்த முகம்… என்ன முகம் அது. அவளைச் செதுக்கியபின் பிரம்மன் கட்டை விரலை வெட்டிக் கொண்டானாமே?
அதுவரை காரில் வந்த சிறு பெண்களும் அவர்களின் சிரிப்பும் கும்மாளக் கலகலப்பும் ஓரளவு பிடித்துத்தான் இருந்தது. மனோன்மணி கடந்து போனாள்… காருக்குள் இதுகள்… பெண்களா இதுகல்லாம்? குரங்குக் கூட்டம் – என்கிறாப்போல ஆகி விட்டது. நம்ம பி.பி.பி.யோட உறவுக்காரப் பொண்ணு. அந்தக் காரில் இருந்த பெண்களிலேயே சுமார் அதுதான், என்று அதுவரை ரியர்வியூவில் பார்த்துக் கொண்டே வந்தான். அதும் முகரையே பாக்க விளங்கலை இப்போது.
இதுகளைப் பூரா எத்தி வெளியேத்தி மாட்டு வண்டிக்கு அனுப்பிட்டு, அந்த ஒயில்க்குயிலை மயில் மகராசியைக் கார்ல ஏத்திக்கிடுவோமா… மாட்டு வண்டி மாத்திரம் இன்னுங் கொஞ்ச நேரம் நின்னிருந்தது – அது நடந்திருக்கும்.
அவன் வேலை போயிருக்கும்!
பக்கத்தில் மனோன்மணி உக்கார்ந்து அவன் வண்டியோட்டிப் போகிற கலையழகை வியந்தபடி கூட வருகிறாள்… கற்பனை ஜோராகத்தான் இருந்தது. அதே போதையுடன் திரும்பிப் பார்த்தால் கூட அந்த பூபதி. சனிதிசையில் பிறந்தவன். அடுப்புக்கரி. ஆப்பக்குழிக் கரி.
அந்தக் காரிலேயே சிவப்பு… அழகு… யார்? ஐயமென்ன, நம்ம ஐயம் பெருமாள்தான், சிவலிங்கத்துக்குப் போட்ட திருநீற்றுப்பட்டை போல…
பெண்கள் பொதுவாக பிரார்த்தனை என ஏதாவது நேர்ந்து கொண்டு அந்தக் கோவில் வளாகத்தில் சந்நிதிக்கு வெளியே கல்லடுக்கி பொங்கல் வைத்து காணிக்கை செய்கிற வழக்கம்.
கல்மூட்டி விறகெரித்த அடையாளங்கள் இருந்தன. ஒரு கவிதையின் கடைசி வரி போல. மீதி வரிகள் எங்கே? அவை எரிக்கப் பட்டு விட்டனவா?... என்று தன் கற்பனையின் வளத்தில் சிலிர்த்துக் கொண்டான். என்ன ஒரு அலங்கார துக்கம் அது! மத்த வரிகளைக் காணாமல் கடைரி வரியை வாசிச்சி என்ன செய்ய? மர்மக்கதைல கடேசில போலீஸ்காரங்க வந்தாப்ல.
தெனாலிராமன் யானை வரைஞ்ச கதையால்ல ஆயிட்டது?
தெனாலிராமனை யானைப் படம் வரையச் சொன்னாராம் ராசா. போட்டாப் போச்சு, என்றபடியே, மட்டமா ஒரு நீளக் கோடிழுத்து, அதுக்குமேல நீள் சதுரமா ஒசரத்துக்கு ஒரு கட்டம் வரைஞ்சான். இது சுவரய்யா. அந்தா யானையோட அம்பாரி, சுவருக்கு அந்தாண்ட யானை போகுதுன்னானாம்.
பெண் சிட்டுகள் மனோன்மணியை மறந்து விட்டிருந்தார்கள். அவர்கள் உற்சாகமாய் பொங்கலிடுவதில் இறங்கினார்கள். அவர்கள் அதிகாலையிலேயே நம்ம ஐயத்தின் வரவுக்காய்க் காத்திருந்தார்கள். முந்தைய இரவே முடிவெடுத்து கொழுக்கட்டையிடம் அவர்கள் முகூர்த்த நேரத்தில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பைச் செய்திருக்கலாம் என்று தோணுகிறது.
தருமன்மலை அடிவாரத்துப் பிள்ளையாருக்கு வேண்டுதல் என்றால் கிழவியையே உக்கார வைத்துப் படைச்சிருப்பாங்க.
கோவில் குருக்கள் மனோன்மணி போனதுமே கிளம்பியிருப்பார்னு தோணுது. மாமியைப் பார்க்கிற அவசரம்.
கோவில் வளாகம் பூட்டிக் கிடந்தது. அதைப் பத்தி என்ன? பெண்களுக்கு கோவில், வெளியே கிளம்பறது எல்லாம் ஒரு சாக்குதான். புதுத்துணி கட்டிட்டு தன் அழகைத் தானே மெச்சிக்கிட்டு மாரை நிமித்திக்கிட்டு அலையணும். அவ்ளதான் விசயம். பாதிப் பொண்ணுகளுக்கு ’எடுப்பாவே’ அமையறதில்லை – அது வேற விசயம்.
தருமன்மலை அருமையான இடம். நல்ல நிழல். யானைக்கால் வியாதி கண்டாப் போல பெத்தம் பெரிய மரங்கள். நல்ல குளுமை. காத்து அந்தாக்ல வேட்டிய ஒரு தூக்கு தூக்கி உள்ளெலாம் தடவும். பொம்பளையாளுங்கள் புஸ்ஸென்று கொதித்த பாலாய்ப் பொங்கும் பாவாடையை தொடை நடுவே கையால் அமுக்கிக் கொடுத்தபடியே தடுக்கத் தடுக்க சிரித்தபடி நடமாடினார்கள். என்னத்துக்கு அத்தனை சிரிப்பு… தெர்ல.
எப்பிடியும் ஒரு அவர் ஒண்ர அவர் இங்க ஆவும். கொஞ்சம் அப்டி ஓரமாப் படுக்கலாம்னிருந்தது.
கோவில் வளாகத்திலேயே பின்னால் ஒரு ஊத்து. ஜலதாரை வழியே எங்கிருந்தோ வரும் தண்ணி. என்ன குளிராக் கெடக்கும். கைல வாங்கிக் குடிச்சம்னா ஆகா, என்ன ருசி. எந்தக் கோடைக்கும் அந்த ஜலதாரைக்கு தண்ணி வரத்து நிக்காது என்கிறார்கள். தெர்ல. பள்ளமாய்க் குளம் எடுத்துக் கிடக்கிறது.
என்னமோ ஒரு நல்ல நாள்ல ஜனங்க ஒரே கூட்டமா அங்க அந்தாக்ல அப்பும். அப்ப திடீர்னு அங்க நாவிதர்கள் கத்தியும் கிண்ணமுமா முளைப்பார்கள். சர்ர்ரக் சர்ர்ரக்னு பளிங்குக்கல்லில் கத்தி தீட்டுகிற சத்தம். வர்ற ஜனங்க பூராவும் மொட்டை போடும்… நாலு மொட்டை அடிச்சா ஒரு மொட்டை இலவசம்னு பண்டிகைக் காலச் சலுகை இருக்கோ? எல்லாம் அந்த ஊத்தில் குளிச்சிட்டு ஈரவேட்டி அல்லது புடவை சரசரக்க, குளிர் உதட்டை நடுக்கி உடலையே ஆட்ட ஆட்ட, புதுநடையில் தருமனை நினைத்தபடி கைகுவித்து வணங்கியபடியே பிராகாரம் சுத்தி வருவார்கள். பெரும் பொம்பளைகளை நீண்ட காதுத் துளைகளுடன் மொட்டையாய்ப் பார்க்க இளங்கோவடிகள் போலிருக்கும்.
மலையேத்தத்தில் மரத்தடி தோறும் பிச்சைக்காரர்கள் முளைத்திருந்தார்கள். பூராவும் மொட்டைகள். மலையேற்றப் படிகளில் சீரியல் பல்ப் போட்டாப்ல இருக்கும் ஒரு பார்வைக்கு. விசேச நாள்னா அவுக எல்லாத்துக்கும் தனியே தண்டோரா அறிவிப்பு யார் தர்றாங்களோ? எப்டிதான் தெரியுதோ? எங்கருந்துதான் வராகளோ? அத்தனை பேர் முன்னாலும் வெளிநாட்டுக் கக்கூஸ் போல ஒரு பாத்திரம். அது எங்க அப்படியொரு பாத்திரம் விக்குதோ? இத்தனை சனியனுக்கும் அந்தக் கடை எப்படித் தெரிஞ்சதோ, தெர்ல. இந்தியாவில் பிச்சையெடுக்கிறது நல்ல தொழில். அட அதைவிட இந்தப் பாத்திரம் தயார் பண்றது சூப்பர் தொழிலாயிருக்கும் போல.
தருமன் ஊத்துக்குப் பின்புறமா கொஞ்சம் தள்ளி புதரை ஒழுங்கு பண்ணி பொம்பளையாளுகள் ஈரஉடை மாத்தும் ரூம் மாதிரி ஒரு ஏற்பாடு. நிறைய இளவட்டப் பயலுகள் கேமெராவுங் கையுமா அந்தப் பக்கம் திரிவார்கள். அவசர கிளிக்குகள். அவ்ட் ஆப் ஃபோகஸ் ஷாட்டுகள். பெரிய மொட்டைத் தலை மாத்திரம் டாப் ஆங்கிளில் விழுந்திருக்கும். அதையே தப்பா எடுத்துக்கிட்டு உணர்ச்சிவசப் படுகிற சென்மங்களும் உண்டு.
உடம்பே அலுத்துக் கிடந்தது அவனுக்கு. பட்டணத்தில் இருந்து முழுசா ஒரு ராப்பயணம். வந்தா ஓய்வே கிடையாது. இதுங்க கிளப்பி இங்க கூட்ட்டு வந்திட்டதுங்க… கூத்தடிக்க.
பண்ட பாத்திரங்கள், அரிசி… மத்த ஐட்டங்களை எடுத்து வைக்கிறார்கள். புதுக்கல் எடுத்து அடுக்கியாகிறது. அக்கன்னா அடுப்பு. பூபதி விறகு பெறக்கிக் கொண்டு வந்தான். “டிரைவர்?” என்று கூப்பிட்டபோது கண்ணை மூடிக்கொண்டு தூங்குவது போலக் கிடந்தான் ஐயம். விட்டா அந்த பூபதி எல்லா உபரி வேலையும் இவன் தலைல கட்டிருவான்.
உடம்பு என்னா வலியெடுக்குது, அவனுக்கில்ல தெரியும். முதுகைச் சாய்த்த கணம் ஆகாவென்றிருந்தது. நல்ல தூக்கம். தானறியாத அசத்தல் அசத்திட்டது. பேச்சுச் சத்தம் தூரத்து இரைச்சல் போல்க் கேட்கிறது. அட, பெண் சிட்டுக்கள் ஊத்தில் குளிப்பாளுகளே என்று சட்டென்று மூளை சுறுசுறுப்பானது. வேற மனுச மக்கள் யாருமில்லை. அவர்கள் உடை பற்றி சற்று அஜாக்கிரதையாகக் கூட, ஆனந்தமாய்க் குளிப்பார்கள்… உடம்பு பரபரக்க சிவந்த கண்ணைத் திறந்து பார்த்தான்.
அவர்கள் குளித்து முடித்து, ஆ – வேறுடைகள் மாற்றி, ஈரத்தலையைச் சிக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
மனோன்மணி… என்று குப்புறப்படுத்துக் கொண்டான்.
வீட்டு ஞாபகம் வந்தது… ம், குருக்கள் கொடுத்து வைத்தவர்!
எப்படியும் அழுகையும் சிரிப்புமாக நம்மாளு, பத்மினி… மேலப்புதூர் வந்து சேந்திருக்கும். என்னைப் போல அவளும் ஏங்கிக் கெடக்காளோ என்னமோ… தெர்ல. ஏவுட்டி மவராசிகளா? என்ன துட்டு இருந்தென்ன? நகைநட்டு, நாகரிக பட்டு பகட்டு, அலங்காரம் இருந்தென்ன? துடைப்பக்கட்டைக் குஞ்சலம்.
பத்மினி. குடங்கழுத்து போல இடுப்பு. எலும்புத் தூக்கல். இடுப்பு அல்ல அது. எடுப்பு. ஒரு மடிப்பு கிடையாது… சும்மா வழுவழுன்னு கெடக்கும். சோளிக்கும் புடவைக்கும் நடுவே ஆம்பளைங்க கிள்ளுவதற்கென்றே இடம் விட்டாப் போல… ஒரு கிள்ளு கிள்ளுவான். ஸ்ஸென்பாள். சைக்கிள் பஞ்சரானாப்போல. வலிக்கா? சரின்னு தடவிக் கொடுப்பான். அதுக்கும் ஸ்ஸ்-தான்.
பொம்பளையாளுகள் ஒரு விசயத்தை ரசிச்சா சின்ன –ஸ். அதில் கொஞ்சல் இருக்கிறது. கடுப்பாயிட்டா பெரிய –ஸ்ஸ்ஸ்! அது பாம்புச் சீறல்லா…
ஆ, மனோன்மணி… ச்சீ, பத்மினி…
பூபதி மணியடிக்கிற ஓசை கேட்கிறது. ஓசையல்ல அது. பூசை. நாசி விழித்து பொங்கல் வாடையைத் தேடியது. நல்லா நெய் ஊத்துங்கடியோ. சாமி காரியம்லா!...
சாமி பிரசாதம்னு வாங்கி ஊருக்கு எடுத்திட்டுப் போணும்.
போய் தருமன் ஊத்தில் முகம் கழுவினான். சற்று தள்ளி புதரின் நீட்சிக்கு ஒரு ஈரப்புடவை, மற்றும் புதர்கள் மேல் பொம்பளைத் துணிகள். கொண்டு வந்த இலையைச் சிறிது சிறிதாய் சச்சதுரமாய்க் கிழித்து பொங்கல் எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே பசிக்கிறது.
முதலாளி வீட்டில் பரவாயில்லை. நல்ல சாப்பாட்டுக்கு காரண்டி. நெய், பால், தயிர் எதற்கும் அஞ்சாத செழிப்பு உள்ளவர்தானே?
பொங்கல் ருசியாய் இருந்தது. அட வீட்டுச் சாப்பாடு. பிரியமான கைமணச் சமையல்னே அனுபவிச்சி நாளாச்சில்ல? மெஸ் சோறு. அதும் கடனில். தினசரி போய் நிற்கவே கூசும். வேற வழியுங் கிடையாது. அரை மனசா முதலாளி வெறுப்புடன் உள்ளே அனுப்புவார். மூணு மணிக்கு அவன் போவான். அவரும் மிச்ச சோறு வெச்சிட்டு என்ன செய்யிறது… வெஞ்சனமோ கூட்டோ ரெண்டாந்தரம் கேட்க முடியாது. முறைப்பான்கள். சர்வர்கள் அடுத்து சாப்பிடணும்.
பண்ணையார் வீட்டுப் பின் வளாகம் பெரியது. மாட்டுக் கொட்டகைக்குள் வாலை உதறியபடி எருமைகள்… பூபதி ரேவதி என்று பிள்ளைகளுக்குச் சளைக்காத வண்ணத்தில். மூத்திரமும் சாணியுமான கலவை வாசனை. ஏற்றக் கிணறு. உயரமான வைக்கோற் போர். மொட்டை மாடியில் இருந்து அதைப் பார்த்தால் அநேக சுவாரஸ்யங்கள். கள்ளக்காதல். நின்றபடி சிறுநீர் கழிக்கும், தூரத்துணி மாத்தும் பொம்பளையாட்கள். பெரிய வீட்டில் திருடிய சாமான்களைப் பதுக்கும் வேலைக்காரி… காரர்கள்.
ஆ, பத்மினி. இதோ வருகிறேன்… உடனே நேரே மனைவியைப் போய்ப் பார்க்கிறாப்போல அவசர அவசரமாய்ச் சாப்பிட்டான்.
பத்மினியோடு இங்க வந்து சாமி கும்பிட – மொட்டையெல்லாம் போட மாட்டான் – ஆசையாய் இருந்தது.
***
வீடு வந்து சேர இருட்டி விட்டது. நல்ல வேகத்தில் வந்தான். புழுதி எழும்பி பின்னாடியே பேய் விரட்டுவதுபோல வந்தது. எல்லாருமே அலுத்திருந்தார்கள். அந்த பூபதி நாய்… முன் சீட்டில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொட்டாவி விட்டான். கொஞ்ச நேரத்தில் கரகாட்ட மேளப்பார்ட்டி போல தலைய ஆட்டி ஆட்டி தூங்கியே விட்டான். தானும் தூங்கி விடுவோமோ என்று ஐயத்துக்கு பயமாய் இருந்தது.
பெண்கள் அலுத்திருந்தார்கள். வந்தபோதான கலகலப்பு இப்போது யாரிடமும் இல்லை. கண் இடுங்க பாகீஸ்வரி ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி வந்தாள். மத்ததுகள் ஒன்றின் மடியில் மற்றது என்று, கன்னா பின்னா வென்று அவிழ்த்துப் போட்ட உடைகளைப் போல உடம்பையே அவிழ்த்துப் போட்டிருந்தார்கள்.
இதில் நான் மட்டும் அக்கறையாய் வண்டியோட்டிப் போகிறேன். ரேடியோ, ஸ்டீரியோ என்று இருந்தா ஒரு பேச்சுத் துணை போல இருக்கும். சில ஓட்டல்களில் அல்லது டீக்கடைகளில் சாயந்தர விவித்பாரதியில் இந்தியில் பேசி, டண்டண்ண டண்டண்டண் டண்டண்டண் மியூசிக்குடன், ஏதாவது மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடல் வைப்பான். லோக் சங்கீத். கர்ண பாடாவதி புரோகிராம். ர்ர்ர்ர்னு ஒரு பின்னணிச் சத்தத்தோட அதும் பாட்டுக்குக் கேட்டுக்கிட்டிருக்கும். டீக்கடைக்கும் ஒரு அடையாளம் வேணும்ல…
எவங் கேக்கப் போறான்?... ரேடியோக்காரன் விடாம வைக்கான். அதும் தினசரி.
பாகீஸ்வரி முகத்தில் நல்ல அருள் இருந்தது. பொறுமைசாலி என்று பார்த்தாலே தெரிகிறது. திருத்தமான முகத்தில் திருநீறும் கீழே அளவான குங்குமமும். குங்குமப் பொட்டின் நிதானமே அங்கத்திய ஆளுகளில் ஆச்சரியம். அதது குங்குமத்தைப் பாத்த ஜோரில் காணாததைக் கண்டாப்ல அதிரச சைசுக்கு அப்பிருதுங்க. பத்தும் பத்தாததுக்கு கல்யாணமான பொம்பளைகளுக்கும் ஆகாதவளுக்கும் என்ன வித்தியாசன்றே? காலைக் கொஞ்சம் அகட்டி நடப்பாளுக – அதைச் சொல்லல… தலை வகிட்டுல குங்குமம் ஒரு அடையாளம். டேஞ்சர் ஸோன். இரத்த பலி வாங்கிரும். புருசன்காரன் அருவா எடுத்திருவான்னு அர்த்தம்.
இப்டி அப்பி அப்பி ஊர்ல பாதிப் பொம்பளைங்க நெத்தி வெந்து புண்ணாக் கெடக்கு.
பத்மினியை ஸ்டிக்கர் பொட்டு வைக்கச் சொன்னான். சின்ன சைஸ். உச்சில வகிட்டுக் குங்குமம்? வேற வழியில்லைல்லா.
வீட்டையடைய லேசாய் இருட்டிட்டது. முதலாளி இல்லை. யப்பா… என்றிருந்தது. மாட்டு வண்டியும் இல்லை. உடனே பயமாய்ப் போச்சு. காத்திருந்து அலுத்து, வண்டியில் கிளம்பியிருப்பாரோ? அவன் போனாப் போறான். அதப்பத்தி என்ன?
வேலை போயிருமோ?
முதலாளியிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதா… ‘வீட்டில்’ சொல்லிவிட்டு கிடைத்த பஸ்சில் மேலப்புதூர் கிளம்புவதா புரியவில்லை. அவனால் நிற்கவே முடியவில்லை. உடம்பில் தெம்பே இல்லை.
பாகீஸ்வரி புரிந்து கொண்டாள். பெண்ணா அவள்? மகாலெட்சுமில்லா… நீ எத்தாம் பெரிய குங்குமமும் வையி தாயி. உன் இஷ்டம்…
“அவுக வந்தா நான் சொல்லிக்கறேன். நீ கிளம்பு. மொகம் வீங்கிக் கெடக்கே” என்றாள் (மொகம் மட்டுமா!). தேன் வந்து காதில் பாய்ந்தாற் போலிருந்தது. எறும்பு பிடுங்காமல் இருக்கணும்!
”நம்ம வீட்டு சைக்கிள் எடுத்திட்டுப் போ. காலைல சீக்கிரம் வந்திரு. பஸ்சுக்கு நிக்க வேணாம்ல?” என்று யோசனையும் சொன்னாள்.
பப்பப்பப்பாங்க், விடுதலை! விடுதலை! விடுதலை!... என்று பாலச்சந்தர் படத்து பாரதியார் பாட்டு வந்தது மனசில்.
ஆனால்?...
***
(வெள்ளி தோறும் தொடர்கிறது)
storysankar@gmail.com
91 97899 87842