Thursday, January 31, 2019


நகைச்சுவைத் தொடர் - வெள்ளி தோறும்
முத்த யுத்தம்
எஸ்.சங்கரநாராயணன்

14
ன்னீர்ப் புகையிலை பாண்டித்துரைக்கு வேட்டை ருசி தாண்டி பொம்பளை ருசி தட்டி, அது கொள்ளைக்காலம் ஆச்சி. விலங்கு வேட்டைன்னா அது ஒரு காலம். இளமைக் காலம். ஓடணும் சாடணும், சதா கவனமா இருக்கணும். வேகம். சுறுசுறுப்பு அதன் அழகு. இந்த வேட்டை அப்பிடியில்ல. இதற்குத் தேவை நிதானம். சிலாளுகள் இதிலும்… புதுசா சைக்கிள் கத்துக் கிட்டவன் மாதிரி வேகவேகமாப் போயி விழுந்து வாருவான். நம்மாளு அவசரங் காட்டறதே யில்லை. பெண்ணுன்னா பூவுல்லா. இதழ் இதழா அதைப் பிரிச்சி, விரிய விரிய அனுபவிக்கணும்யா… மானுடத்தின் ரகசியம் அது. அது ஒரு சுகம்.
மனுசாளுக்கு ஒண்ணாக் கூட்டமாக் கூடி சந்தோசமா இருக்கிறது பிடிக்கிறது. அடிக்கடி வீட்லயும் பொது இடங்களிலும் விசேஷம் என்றும் திருவிழா என்றும் கொண்டாட களியாட்டங்கள் வேண்டித்தான் இருக்கிறது. வேடிக்கை விநோதம் அன்னாடப் பரபரப்புன்னு இல்லாமல் இது உபரியான பரபரப்பு. சில வெட்டி வீரமணிகளுக்கு ஊர்ல எலெக்‌ஷன்னா ஒரு தன்னெடுப்பு. மிதப்பு வந்துரும். கூடிக்கூடி அந்தக் கச்சி இந்தக் கச்சின்னு ஆவேசமாப் பேசுவான்!
வேலை காரியம்னு வெளியூர், பட்டணம்னு போனவர்கள் கூட ஊர்ல திருவிழான்னு வருசம் ஒருமுறை மண்டகப்படி ஏத்துக்கறதும், வந்து உறவுக்கார ஆளுக வீடுகளில் தங்குவதும், காலைல எழுந்து நாலு ஆளுகள் தெரிஞ்சாளுகள் வீடுகளுக்கெல்லாம் ஒரு விசிட் அடிக்கறதும்… அவனவன் ஒருவாரம் பத்துநாள் லீவு போட்டுட்டு வாரான்யா… ஒடம்பு சரியில்லன்னாலே லீவு எடுக்க யோசிக்கிற மனுசன்… அது சரி… பாதிப்பேருக்கு ரெஷ்டே ஆபீசுலதான். வீட்ல மாத்தி மாத்தி என்னமாச்சியும் வேலை செஞ்சிட்டே இருப்பான். ஆபிசுன்னா இருக்க வேலையும் செய்யிறதில்லை. வேலையா? அது தனியா ஓ.ட்டி. கணக்கு.
இங்கே ஒட்டுதலின்றி, இருந்த வீட்டையும் விற்றுக் காலி செய்து போனவர் எல்லாரையுங் கூட ஊர் விடவில்லை. சொந்த ஊர். சொந்த மண். தாய்நாடு, உலகம்… எத்தனை பற்றுதல்கள். உயிரின் இருத்தல்-தாகம். கேட்கிறது எல்லாமும்!
“சாருக்கு சொந்த ஊர் இதா?”
“நம்ம அவ்ள பெரியாளு இல்லங்க. சொந்த வீடுதான் நமக்கு.”
இதையே உல்ட்டாவாச் சொல்றதும் உண்டு. “எங்க ஐயா எனக்கு நிறைய சொத்து வெச்சிட்டுப் போனாரு…” என்றானாம் ஒருத்தன். அடுத்த அறிவாளி “அட போடா, எங்க ஐயா இந்த உலகத்தை விட்டே போனாரு”ன்னானாம். நாட்ல பாதிப்பேர் வாழ்றதே இந்த தடாலடியிலும் சண்டியர்த் தனத்திலும் தான்.
பண்டிகைக் காலங்களில் கிராமம் அழகெடுத்துக் கொள்கிறது… பூத்த மரம் போல. பக்கத்து பக்கத்து கிராமம்னாக்கூட ஒரே சமயத்தில் பண்டிகை வைக்கிறதில்லை. விட்டு விட்டுக் கொண்டாடினார்கள். அப்பதான் இங்கத்திய ஆளுங்கள் அங்கே போக வர சவுகரியம். அதுல போட்டி வேற. இந்தத் திருளா… நம்ம ஊர்ல… ஜமாச்சிரணும்யா… என்பார்கள்.
அறுவடை முடிந்த ஜோரில் பொதுவாக, சாமிக்கு ஒரு நன்றி அறிவித்தல் போல கோலாகல கலகலப்புகள் நடந்தேறும். மழையில்ல, தண்ணியில்ல, வறட்சி… நோய் நொடி ஊர்ல புகுந்து சுழல்காத்தா வாலைச் சுழட்டுது… என்கிற மாதிரியான பிரச்னை சமயத்திலும் கஞ்சியூத்துதல், சாமி குளிப்பாட்டு, ஆடு பலி தருகிறது… என்று பயத்தில் கொண்டாடுவதும் உண்டு. அப்ப பூசாரிக்கோ ஊர் ஆளுகளில் ஒருவனுக்கோ உள்ளூற சாமி இறங்கும். சனங்கள் அதன் குழந்தைகள் அல்லவா? குறி சொல்லிட்டு ‘மலையேறும்’ – கவலைப்படாதேய்யா, நான் குளுந்திட்டேன் – இனி ஒரு குறையும் வராது. நான் பாத்துக்குவேன்… னாப்ல. ஐதிகங்கள்!...
வறட்சிக்குப் பின் வந்த மழை ஊரையே கலக்கிப்பிடும் கலக்கி. அவனவன் தெருவுல வந்து மழைல ஆட்டம் எடுப்பான். அத்தைமடி மெத்தையடி. ஆனா அவபல்லு சொத்தையடி… ன்னு இட்டுக் கட்டி பாட்டு. இதுல ஆம்பிளையாள் பொம்பளையாள் வித்தியாசமில்லை!
திருவிழா நெருங்க நெருங்க… போன வருடத் திருவிழாவை நினைவு கூர்ந்து பேசித் திரிவார்கள். பம்புசெட், தோட்ட வளாகம், பஸ் ஸ்டாண்டு, டீக்கடை என்று சந்திப்பிடங்கள் அழகு பெறும். சாதிகள் கரைந்து காணாமப் போயிரும். அவனவன் திருவிழாவச் சாக்கிட்டு முடிவளத்துத் திரிவான். பக்தி பிச்சிக்கிட்டுக் கிளம்பும் நாலா பக்கமும், பஸ் புழுதி போல… மீசையும் தாடியும்… சொறியலும் மூக்குச் சிந்தலுமாத் திரிவான். பாக்க பைத்தாரன் சாயல் தட்டும். இது ஒரு துருவம்னா… சரியாத் திருவிழாச் சமயம் மொத்தத்தையும் வழிச்சிட்டு முழு மொட்டையா சீக்குக் கோழியா, மண்டைவெல்லமாத் திரிவான் சிலாளு. கழுத்து நீளமாயிட்டாப்ல தெரியும். அதும் மேல மண்டை. சரியா மருந்து முக்காத தீக்குச்சி. மண்டைல அவனவனுக்கு எத்தனை நெளிசல்னு அப்ப கணக்கு எடுக்கலாம். ஓட்டு மண்டைதானே? அதென்னாத்துக்கு ஆக்சிடெண்ட்டான கார் போல அங்கங்க நெளிஞ்சு சப்பளிஞ்சி கெடக்கு?... தெர்ல.
இன்னும் சிலாளுகள் வேற டைப். நாளுப் பூராவும் ‘தண்ணி’ல மொதப்பான். தேரடிலயும் பொதுக்கூட்ட சிமெண்ட் மேடைலயும் பினாத்திக்கிட்டே உருண்டுக்கிட்டு கிடக்கிற பார்ட்டி. அடாடா அவாள் இப்ப மஞ்ச குங்குமம் பூசறதென்ன… கழுத்துல மணி மணியா மாலை. இடுப்புல மஞ்ச வேட்டிதான். மாமிசம் சேக்கிறதில்லை. பொண்டாட்டிய விட்டு தனிப் படுக்கை. (அதான் பெரிய விசயம். இப்டி ஆளுக மனசுக்குள்ள எப்படா விரதம் முடியும் முடியும்னு ஒரு உள்ப் பரபரப்போட உலாவுவான். அதன் காரம் முந்தின நாள் கட்டின வேட்டிய நனைச்சி தனியா உலர்த்தும்போது, பட்டார்ர்ன்னு உதர்ற உதறல்ல தெரியும்!) – காலைக் குளியல். சாமியை அப்டி ஒரு விசிட்ன்றாப்ல. திருவிழாவில் அவுக காவடி எடுப்பாங்க. சிலபேர் புது வழக்கமா அடிக்கடி ‘மகமாயி’ன்றாப்ல வசன எடுப்பு சேத்துக்கர்றது. வாயில கெட்ட வார்த்தை வரப்படாதுன்னு ஒரு நிதானம்…
ஆக வாழ்க்கைல எதெது கூடாதுன்னு அவனுக்கே ஒரு கணக்கு தெரிது. அதுல ஒண்ணுஞ் சந்தேகமில்லை. ஆனா வேணாததெல்லாந்தானே ‘அதிகமா’ மனுசனுக்கு வேண்டிருக்கு…! அது ஏன்யா அப்டி?
கிளி மாதிரி பொண்டாட்டி அமைஞ்சாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வேணும்னு வசனம். ஏன்னா, இவனே குரங்கு ஜாதி! அதானேய்யா அர்த்தம்?
மத்தாளுகள் வண்டிமாடு மாதிரி திருவிழாச் சமயம் வழிக்கு வந்தான்னா, பாண்டித்துரை இதுக்கு நேர்-எதிர். அந்தச் சமயம்தா அவருக்கு கிறுக்கு உச்சம் பிடிக்குது. உள்ளுக்குள்ள மன்மத ராஜா உக்காந்துக்கிர்றாரு… சிட்டுக்குருவி லேகியம்… உள்ள வேலை செய்ய ஆரம்பிக்குது. அதென்னாது சிட்டுக்குருவி லேகியம்? யாருக்குத் தெரியும்? ஒரு வாய் வார்த்தையாச் சொல்றதுதான்…
திருவிழாச் சமயம் ஊர்ல மெயின் பஜார் யாவாரம் அவ்ட். கோவில் எதிர்ல திடல்… பொட்டல்னு திருவிழாக்குன்னே கெடக்கும். சில ஊருகளில் பொதுநாள் குறிச்சி வாரச் சந்தை வைக்கிறதும் உண்டு. மாடு ஆடு மண்பானை பாத்திர பண்டம்னு விக்கிற சந்தைகள். அறுவடைச் சமயம்னா புல்லுக்கட்டு, பருத்தி, வைக்கோல்னு சீசன் யாவாரங்கள்.
அந்தப் பானை என்ன விலை?
பத்து ருவ்வா.
யாவாரி வயித்தைக் காட்டி... இது?
அம்பது.
அம்பதா?
குழா வெச்ச பானையில்லா. வெலை சாஸ்தி.
அட மனுச மக்களை விடுங்கப்பா. இந்த ஊர்சுற்றி மாடுகள் நாய்களுக்கு அப்பத்திய பரபரப்பைப் பாக்கணுமே… நாய்கள் ஒவ்வொரு மனுச மூஞ்சியா தலையத் தூக்கித் தூக்கிப் பாக்கும் – தெரிஞ்ச அண்ணாச்சி என்றால் அது ஒரு உள்க் கொந்தளிப்போடு உற்சாகங் காட்டுவதே தனி அம்சம். பிஸ்கெட் வாங்கிப் போடற பார்ட்டில்லா…புது ஆளுங்களையும் பார்த்து ஒரு எதிர்பார்ப்புல ஆட்டுறதுண்டு. சிலபேர் போடுவான். சிலபேர் கிட்ட வரச்சொல்லி விடுவான் ஒரு ஃபுட்பால் எத்து! வாள்வாள்னு கத்திக்கிட்டு நாய் எடுக்கும் ஓட்டம். அதுல அவனுக்கு ஒரு சிரிப்பு.
வாள் வாள் என்னா சார்வாள் இப்பிடிப் பண்ணிட்டேள்.
சில சமயங்கள்ல நாய்க்குக் கோவம் வந்து அது துரத்த இவன் எடுப்பான் ஓட்டம். பாக்கிறவன் சிரிக்கிறா மாதிரி ஆயிரும். போதுவா நாலு பேர் கூடறதே இந்தச் சிரிப்புக்குத்தானே?
அப்டின்னில்ல. நம்ம ருக்மணிக்கும் பக்கத்து ஊர் முனியாண்டிக்கும் காதல்னு இந்த ஊர் மன்மதனுக்கும், முனியாண்டி அல்லது அவன் சொந்தக்காரன், பங்காளிகளுக்கும் கைகலப்பாறதும் உண்டு. சந்தைல மண்பானைக் கடை போட்டவன், சோடா வியாபாரி பதறுவான். பொதுச்சேதம்னு மொதல் சேதம் அவனுக்குத்தான். அட சண்டை போடுங்கப்பா. ஒங்க இஷ்டம். அதுக்காக மண்பானைலதான் விழுகணுமாக்கும்? நாட்ல அவனவன் சினிமா பாத்து கெட்டுப் போயிட்டான்.
ஐயோ சோடா அடி பயங்கரம். கோலி சோடா. ஒரு சோடாவைத் தூக்கிப் போட்டு இன்னொரு சோடாவால் நச்சுனு குறி தவறாம அடிக்கணும். அப்டியே பாட்டில் தூள் தூளா, சீனியா, ஆலங்கட்டி மழையாட்டம் பொழிஞ்சு எதிராள் மூஞ்சில போயி அப்பும். காயமும் தழும்பும் ரொம்ப டேஞ்ஜர். பல ஆளுங்களுக்குக் கண்ணுக்குள்ள சில்லு எறங்கீருக்கு…
நல்ல கதை பேசச்சில இந்த நாறக்கதை எதுக்கு? வேணாம். நம்ம அண்ணாச்சி கதை உற்சாகக் கதையாச்சே…
பொண்ணுங்க ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு விதத்தில் அழகுடாம்பாரு பாண்டித்துரை. ஒருத்திக்குக் கண் அழகு. ஒருத்திக்கு உதடு சும்மா கருவண்டாட்டம் நவ்வாப்பழ பளபளப்போட வாவான்னு கூப்புடும். சிலருக்கு மார்பு எடுப்பு… வடித்தெடுத்த சிலை போல. கைவிரல், நீள உடம்பு, நீண்ட முகம்னு பல்வேறு தினுசு அழகுகள். சிலாளுகள் தலையைக் கொஞ்சம் தூக்கி வாரியிருப்பாங்க. பிடரி தெரியும். குதிரை மாதிரி ஒரு தோற்றம். அதை ஒரு சிலுப்பு சிலுப்பிக்குவாளுக. பல் அழகுக்காரிகள். சில பேருக்கு ஒடம்பு நல்லா தோல்–வெரைப்போட உயரக் கழுத்து, அதையடுத்து தோளின் விரிவுன்னு அது ஒரு எடுப்பு.
இதுல என்னா விசேஷம்னா யார் யாருக்கு எது அம்சம்னு அவளவளுக்கே தெரிஞ்சிருக்குது. நல்ல பல்வரிசை உள்ள ஆளுகளைப் பார். சதா சிரிச்சிட்டே இருப்பாங்க. வாழைப்பூவாட்டம் தெத்துப்பல் பார்ட்டிங்க சிரிக்கலையான்னு எதிர் கேள்வில்லாம் போட்டு ஒழப்பப்டாது. அவங்க சிரிக்கலைய்யா… பாத்தா சிரிச்சாப்ல தோணுது. அவளதான். ஒண்ணரைக்கண் பார்ட்டி பாக்கலியா? அதும் மாதிரி.
வெறும் உடம்பு–அழகு மட்டுமா? சிலாளுகள் இடுப்பை ஆட்டியாட்டி ஒரு நடை நடப்பாளுகளே. செத்தாண்டா எதிரி! மனசையே தாயக்கட்டையாக் குலுக்கிப் பிடுவாளுகளே. சில பொம்பளைகள் சாதாப் பேச்சே வசியம் போலருக்குது. கொஞ்சம் கண் செருகினாப்ல பாவனை வேற சேந்திச்சின்னா… அப்டிப்போடு அருவாள! (அரிவாள்!)
சிவப்புத் தோல்க்காரிகள் மாத்திரம்தான் அழகுன்றதில்லப்போவ். கருப்புல முழுக் கருப்பு. ஒரு பூசின கருப்பு உண்டு. கண் கூசும் பாக்கவே. மகா அம்சம் அது. கிட்டத்ல சிவந்த முகத்தில் நதிக்கரை வண்டலாய் பூனைமயிர் அலைவுகள். புருவம் ரெண்டு சேர்ந்த அடர்த்தின்னு அது ஒரு நேர்த்தி…
பார்க்கிற எந்தப் பெண்ணையும் இந்த ஆண்கள் அரைகுறையாப் பாக்கறதே இல்லை! இவன் இப்டி இந்தப் பக்கம் சைக்கிள்ல போயிட்டிருப்பான். பஸ்சுல ஒரு பொண்ணு – பாக்காத முகம் போகுது. சரியாக் கவனிக்கலைன்னா இவனுக்கு பெரிய லாஸ் (நஷ்டம்!) அது. போற சோலியே மறந்துருது. அப்டியே ஒரு ரவுண்டடிச்சித் திரும்பி இறங்கிப் போறாளைக் கிட்டத்ல மோப்பம்பிடிச்சி முகத்தையும் பார்த்திட்டு அப்படியே அரைவட்டத் திரும்பல் திரும்பறதுதான்!

இப்பிடியே ஊர்ல பழமொழீயே வந்திட்டது தெரியுமாவே?

பின்னாடி பார்த்தா சீதேவி - முன்னாடி பார்த்தா மூதேவி!
முன்னெப்பவோ பார்த்த ஒரு பெண்ணைத் திரும்ப வேத்தூர்ல பொது இடத்துல பார்த்திறப்படாது… மனசு பரபரப்பாயிருது. இவளை… எங்கியோ… பாத்திருக்கமே!... எங்க எங்கன்னு உள்த் தேடல் ஆட்டிரும் ஒரு ஆட்டு. லேசுல விடாது!
புதுசான முகங்கள் பார்க்கிறது தனி உற்சாகமான அம்சம்தான். பக்கத்தூர்த் திருவிழான்னு மனுச மக்கள் கூடறதில இப்படி ஒரு விசயம் இருக்கப்போவ்!
ஊர்ல திருவிழா – மார்ல சந்தனம்னு வசனம். பி.பி.பி.க்கு அது ரொம்பப் பொருத்தம். பட்டணம் போயிவந்தால் தவறாமல் பாண்டித்துரை ஆஃப்டர் ஷேவ் லோஷன், செண்ட் பாட்டில்னு வாங்காமத் திரும்பறதில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் பூபதி இப்பவே அதையெல்லாம் ஒரு வாசனை பாக்கறது, போட்டுக்கறதுன்னு ஆரம்பிச்சாச்சி. லெட்ரீன் போயிட்டு வந்தா கைகழுவிட்டு ஒரு சோப். அப்றம் செண்ட் தெளிப்பு கையில். குளிச்சிட்டு கையைத் தூக்கி ஒரு விஷ்க். பிறகு இந்தப் பக்கம். உள்ளங்கையில் தேச்சித் தேங்காயெண்ணெய் போல கன்னத்துல சப்புச்சப்புன்னு ஒரு அறை… சாமி சந்நிதில நின்னுக்கிட்டு சிலபேர் அறைஞ்சுக்குவாங்க இப்டி!
சாமிதானே கும்பிடறாங்க? பின் ஏன் தண்டனை வாங்கினாப்ல நம்மாளுங்க படார் படார்னு அறைஞ்சிக்கிர்றதும் குட்டிக்கிர்றதும் தோப்புக்கரணம் போடுறதும்?...
தெர்ல!
ஐயம்பெருமாளுக்கு வேலையே இல்லை. தினத்தந்தியில சுவாரஸ்யப் படவில்லை மனசு. இவன் இல்லாமல் பட்டணத்தில் விபத்துக்கள் குறைஞ்சிட்டாப்ல இருந்தது. வீட்டுப் பெண்கள்கிட்ட கேட்டு ராணி, ராணிமுத்து, பாக்யா எல்லாம் படிச்சி முடிச்சான். வண்டிக்குள்ள சிறு தூக்கம் போட்டான்.
ரெண்டு வேளைச் சாப்பாடு.அதற்கு வஞ்சனையில்லை. வீடு, அதன் அம்சங்கள் எல்லாம் பாத்துக்கிட்டான். வந்து போன முகங்களில் சில பேர் அவனை அடையாளம் கண்டுக்கிட்டாங்க. அதுல ஒரு சந்தோசம்.
துணி கேட்டு வாங்கி ஒரு வாளியில் தண்ணி எடுத்திட்டு வந்து சர்ஃப் போட்டு பளிச்னு காரைத் துடைத்தான். பெரிய ஓவியன்போல சற்று தள்ளி நின்னு ஒரு பார்வை. தூசி தும்பு போயிருக்கான்னு ஒரு செக்கப். அதும் வேலுச்சாமி பின்கட்டுல மாட்டைக் குளிப்பாட்டிக்கிட்டே எதிர்ப்பார்வை பார்க்கிறான்னதும் ஒரு உற்சாகம். மதியம் அவன் வந்து பால் கறந்தான். தொழுவங் கழுவினான். ஐயம் அவனோடு சிநேகம் காட்ட நினைத்தபோது ஒரு விரைப்போடுதான் அவன் தலையாட்டினான்.
எடேய், டிரைவர்னா சும்மாவாடா? அது படிச்சவன் வேலையில்லா. நெஞ்சில் பேனா குத்திய ஆளுங்க நாங்க. சட்டையே அணியாத பார்ட்டி நீ. தலைல முண்டாசு கட்டித் திர்றீங்க. உடம்பை மறைக்க வகையில்ல. இப்ப தலைமுடிய மறைச்சி என்னாவப் போவுது?
ஆனா இதுல ஒரு பின்னணித் துக்கம் இருந்தது. வேலையெல்லாம் முடிச்சி கைகழுவி வேலுச்சாமி கிளம்பியாச்சி. மாலை வெயில் டென்னிஸ் பந்தாட்டம் இங்க விழுந்திட்டு ஒரு எம்பு எம்பி அந்த சைடு எகிறியாச்சி. ஐயம் பெருமாளுக்கு கிளம்பலாம்னு ஒரு இது…
பெண்டாட்டி ருசிக்கு மனசில் ஒரு சிறு பரபரப்பு.
போகலாமா வேணாமான்னு ஒரு யோசனை. கேப்பமா வேணாமான்னு ஒரு தவிப்பு… அப்ப பார்த்து பாண்டித்துரை திரும்ப ஒரு தபா குளிக்காரு. என்னடாதுன்னு ஒரு குழப்பம். உடம்பையெல்லாம் ஒரு ஷோக் பண்ணிக்கிட்டாரு. டிரஸ் வேற மாத்திக்கிட்டாரு. ஒரு சப் சப். ஒரு விஷ்க் அங்கங்க…
சரிதான், வெளிய கிளம்புறாரப்போவ்…
திருவிழாச் சமயம் எல்லாரும்… இருக்கறதுல நல்லதா எடுத்து உடுத்திக்கிட்டு… புதுமொட்டை யெடுத்து சந்தனம் தேச்ச அல்லது புதுசா காது குத்தின குழந்தைகளோட அப்டி இப்டி வளைய வரான். அது அவனுக்கு சுதந்திர நாள். நமக்கு அப்பதான் வேலை இங்க மாட்டுது…
ச்சே, பட்டணத்துலயே இருந்திருக்கப்படாதா?...
ஒரு நல்ல நாள்னு பொண்டாட்டி பிள்ளைகூடச் செலவழிக்கத் திகையாதபடி இதொரு வேலை!...
தினசரி இப்டியே இருக்கும் போலருக்கு. பெண்டாட்டி பக்கத்துல இருந்தும் நெருங்க முடியல்ல… என்னவோ அவ வீட்டுவிலக்கு ஆனாப்ல!
இருந்த ஆத்திரத்துக்கு வண்டியை அழுத்தித் துடைத்தான்.
*
(தொடரும் - வெள்ளிக்கிழமை தோறும்)
storysankar@gmail.com
91 9789987842 /9445016842

Thursday, January 24, 2019


முத்தயுத்தம்

13

சூதிக்குப் போகிறவன் போல ஐயம் பெருமாள் சைக்கிள் சீட்-மண்டைக்குக் கர்ச்சீப் கட்டிக்கொண்டு கிளம்பினான். ஒரு பாதுகாப்புதான்.
விடியலில் சீக்கிரமே எழுந்து கொண்டதும், வெளிச்சம் வரவர கண்கள் சோர்வு நீக்கிக் கொண்டதுமான உற்சாகக் காலை. மனம் சிறகெடுத்துக் கிடந்தது. எதிர்காத்து என வரும்போது வழிமறித்த காத்து. தற்போது தள்ளு காத்து. மனசில் தாளம். பொன்மானே சங்கீதம் பாடிவா. அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா…
தூரம் தெரியவில்லை. தெரியாது. மனசெங்கும் மனைவி… நிழலாய் அவனைக் கவிந்திருந்தாள். உதடுகளில் அவளது ருசி இன்னும் ஒட்டிக் கிடந்தது. உடலெங்கும் மனசெங்கும் அவள். ரத்தநாளமெங்கும் ஙொம்மாள… அவளது முத்தநாள மேளக் கும்மாளம். ஒவ்வொரு அணுவுக்கும் அலைப்பரவல் பரவும் ‘செல்ல’ வேளை.
அந்தப் பாடல், அந்த உற்சாகம்… பெரியகுளம் நெருங்க நெருங்க திடும் திடும் என்கிற இதய அதிர்வுடன் பயம் பரத்தியது. மேற்கத்திய இசை! பாண்டித்துரையின் முதல் ‘வாய்ப்பாட்டு’ வாங்கப் போகிறான். சைக்கிள் கத்துக்கிறவன் முதலில் கீழே விழ எப்படிப் பதறுவான். குழந்தைகள் முதல்-ஊசி போட்டுக் கொள்ள எப்படிப் பதறும்… அந்த நிலை.
ஒரு நம்பிக்கையுடன் தன்னையே சிரிப்பு காட்டிக் கொள்ள முயன்றான். பாண்டி அண்ணாச்சிதான் டாக்டர். அவன் குழந்தை. பாண்டி அண்ணாச்சி ஊசி எடுக்காரு. அவன் புன்னகை செய்கிறான். அவர் எந்திரிச்சி வந்தாரு. கண்ணை மூடிக் கொள்கிறான். திறக்கிறான். அட,வலிக்கவேயில்லையே… இரப்பா, நான் இன்னும் போடவே இல்லை… நர்றுக். “ஊ”வென்று அழ ஆரம்பிக்கிறான்.
ஊ… இல்லடா. ஊ…சீ… சொல்லு? ஊசி!...
இருந்த பதட்டத்தில் பாட்டையே விட்டு விட்டான். அடுத்த வரி எங்க தேட. மொத வரியே வழில எங்கியோ விழுந்திட்டது. வண்டி எவ்வளவோ தாண்டி வந்தாச்சி.
தெரு திரும்பியதும் குபீரென நின்றிருக்கிறது பண்ணையாரின் பங்களா. புதுசாப் பள்ளிக்கூடம் போற குழந்தையாட்டம் கால் தயங்கியது. சண்டித்தனம் பண்ணும் கன்னுக்குட்டிய சர்ர்னு ரோட்டோட இழுத்துப் போவாகல்ல அதும் மாதிரி மனசைக் கயிறு கட்டி முன்னே அதும் அவனே இழுக்க வேண்டியிருந்தது. அவனிடம் இந்த பயந்தான் பிரச்சினை. எதுக்கெடுத்தாலும் பயம்… சைக்கிளில் போகும்போதே… கூட வர்ற சைக்கிளில் இருந்து யாராவது ஹச்செனத் தும்மினால் பொத்னு விழுந்துருவாப்ல…
அதைப் பாத்திட்டு அந்தாள் விழுந்து விழுந்து சிரிப்பானே அதைத்தான் தாள ஏலாது.
வாசலில் பாண்டித்துரை இல்லை. அது நல்ல சகுனமா கெட்ட சகுனமா தெரியவில்லை. சைக்கிளை எங்க நிறுத்த தெரியவில்லை. எடுத்த இடத்திலேயே விட்டுவிட்டு வந்தான். வீட்டுக்குள்தானே… பூட்டண்டாம் என்றிருந்தது. வில்வண்டியக் காணவில்லை என்றதும் ஒரு திடுக். அப்புறம் பார்த்தா பின் வளாகத்தில் அவிழ்த்துக் கிடக்கு. எலேய் எதுக்கெடுத்தாலும் பயந்து சாகாதடா முண்டம்.
நம்பிக்கையோட இரு. இது பேய் குடியிருக்க வீடா என்ன?
போய் கைகால் முகங் கழுவி… கர்ச்சீப் எங்கே? ஆமாமா, சைக்கிள் சீட்டில்… போய் அவிழ்த்து எடுத்து முகம் துடைத்துக் கொண்டான். அந்தப் பாட்டு “பொன்மானே…” என இப்ப ஞாபகம் வந்தது. சரி, இப்ப அடுத்த வரில்லாம் பாடேலாது.
உள்ளே போனால் அண்ணாச்சி. அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தார். பாசி பிடிச்சாப்ல முதுகில் விட்டு விட்டு மயிர்ச் சுருள்கள். சலூன் தரையாட்டம். அண்டிராயர்த் துணிகள் மாத்திரம் மேலிருந்து கீழ் நீளக் கோடுகள் போட்ட டிசைனிலேயே அமைகின்றன. ஏன்? தெர்ல…
மவனே இந்த ஆராய்ச்சியெல்லாம் எப்ப நீ நிறுத்தறியோ அப்பதான் உருப்படுவே.
தலை காயட்டும் என்று ஃபேனடியில் நின்றபடி உலர்த்திக் கொண்டிருந்தார். திடுமென கையை உயர்த்த அக்குள் புதர் தெரியுது. வேட்டி கட்டிட்டுத் தலைய உலர்த்தப்படாதா?... வெளிய போயி அவர் வர காத்திருப்பமா?... சத்தங் கேட்டுத் திரும்பி “ஏம்ல லேட்டு?” என்றார். இயல்பாய்க் கேட்டாப்லதான் இருந்தது.
“லேட்டாயிட்டு” என்று அறிவுபூர்வமான விளக்கந் தந்தான். இன்னும் கொஞ்சம் முன்னால வந்திருந்தா நீரு முண்டக்கட்டையால்லவே நிப்பீரு?... அப்டின்னு சொல்ல முடியுமா?
சரி, பாகீயப் பாரு…” – யாரது பாகீ? ஓ, இவரு வீட்டம்மா… “ஏதாவது வேலையிருக்கான்னு கேளு.”
ஆக இவர் சார்பில் தற்போதைக்கு வேலை எதுவும் அவசரப் படண்டாம். வாயில் பாட்டு வந்தது. சீ, வேணாம்.
உள்ளே போனான். மொதல்ல சோறு போடு பாகீ. ச்சீ, தாயி.
ஒலிகள் துவங்காத காலை. இளம் பெண்கள் தங்கக்காசுக் குடங்களை, ஆனால் சத்தங் கேட்காத அளவில் தூக்கித் திரிகிறார்கள். பெரிய நீள பெஞ்சில் தினத்தந்தி விரிந்து படபடத்துப் படமெடுக்கிறது… நல்லாத்தான் பேர் வெச்சாங்க – தினத்தந்தி. கிராமத்து ஆளுங்க பத்திரிகைல்லா? கிராமத்து ஆளுங்களுக்கே தந்தி வாரது எப்ப? எவனாச்சிம் செத்தா, சீரியசாக் கெடந்தாதான? தினத்தந்திலயும் முக்கிய நியூஸ்னா இதுதான். லாரி மோதி அழகி சாவு!... அழகிங்க சாவலாமா? ஐயோ பாவம்லா…
பெத்தம் பெரிய அறைகள் விதவிதமான வாசனைகள் சுமந்திருக்கின்றன. பெண்களின் அறைகளில் பெரிய கண்ணாடி. பெரும் கட்டிலில் அவிழ்த்துப் போட்ட உடைகள். விளையாட்டில் முதல் பரிசு, ரெண்டாம் பரிசு என்று ஏறி நிற்கிறாப் போல… சின்ன பெரிய உயர வித்தியாசத்தில் தேங்காய் எண்ணெய் பாட்டில் – பவுடர் குப்பி… என நிற்கின்றன. நெல்லு மூட்டை தாண்டி, அது வேற மாதிரி வாசனை. தொட்டாப் போலவே சமையல்.
ஆ, வீடு பழகிவிடும் என்றிருந்தது. பூபதி உறங்கிக் கொண்டிருக்கிறான். சில ஆளுங்கள் தூங்கும்போது தன்னைப்போல ஏனோ வாயைப் பொளந்துர்றாங்க. ஏன்? தெர்ல. நம்ப வீட்டம்மா பத்மினி… அதும் அப்படித்தான். ஒருமுறை அவ தூங்கும்போது அவனுக்கு முழிப்பு வந்திட்டது. ஏதோ கரப்பான் பூச்சி வெளிக் கிளம்பி அறையைப் பூரா அளைந்து கொண்டிருந்தது. அவன் மேல பறந்து வந்து உட்கார்ந்து கிறுகிறுவென்று ஓடி… அவன் தட்டி விட்டாலும் அத்தோடு தூக்கம் அவுட். சரின்னு எழுந்து விளக்கைப் போட்டான். கிர்ர் கிர்ர்ரென்று அலைகிறது பூச்சி. அப்பவே நம்ம மேல எப்ப உக்காருமோன்னு ஒரு நடுக்கம். இனி தூங்க முடியுமா தெர்ல. சரி வெளக்குமாத்தால ஒற்றைப்போடு போட்டு இதுக்கு சமாதி கட்டிற வேண்டிதான்னு திரும்பினா, இவ… வாயைப் பொளந்துக்கிட்டுத் தூங்கியாறது. பூச்சி வாய்க்குள்ள போனா?... நினைக்கவே சிலிர்த்தது.
ஒருவேளை அவ வாய்லேர்ந்துதான் வெளிய வந்திச்சோ என்ன எளவோ…
மறுநாள் காலை அவளிடம் ”நீ எப்பவும் வாயைப் பொளந்துக்கிட்டுத் தூங்கறே…” என்றான்.
”நீங்களும்” என்றாள்!
சமையல்கட்டுப் பக்கம் நுழைகையில் எதிரே கொழுக்கட்டை வந்தது. முட்டிக் கொண்டான். அவள் கிட்டே வந்து இடிக்குமுன் டிங்டாங் என மெத்தென்று எதோ மோதியது அவன்மேல். தொளதொளன்னு… கெட்டுப்போன உருளைக் கிழங்கு. இனி ஆரு வாங்குவா இதை? டாய், மனசை அலைய விடண்டாம்.
“அம்மா வணக்கம்…” என்றான் எசமானியிடம். தலையை நிமிர்த்தி சிரித்தாள் அவள். “இன்னிக்கு வேலுச்சாமி வர்ல… என்னவோ துட்டிக்குப் போறாம் போலுக்கு…”
அதைப்பத்தி என்ன… அவனே செத்தாலும் எனக்குக் கவலையில்லை…
“மாடுங்களப் பாத்துக்க. வைக்கல் பிரிச்சிப் போடு.” என்றாள் பாகீ. பாகீரென்றது. ச்சீ, பகீரென்றது. என்ன மாப்ளே? யூனிஃபார்ம் போட்டு வேலை செஞ்ச ஆளு… ம்…
பின்கட்டுக்குப் போனான். முகம் தெரியாத ஒரு பெண் குந்தி உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். பாத்திரங்களைக் கரிபோகத் தேய்க்க அவள் பிரயத்தனப்பட்டாள். ஈர வைக்கோலால் அவள் அழுத்தித் தேய்க்க அவள் உடம்பே குலுங்…கியது. உள்ளாடை போட்டா தள்ளாடுமா இப்டி? டாய்!
தலையைத் தூக்கி அவள் அவனைப் பார்த்ததும் திடுக்கென்றது. திருடனின் பயம் அது. “புதுசா?” – “ஆமா” என்றான் சிநேகமாய். (என் பார்வைக்கு நீ புதுசு. நல்லா அழுத்தித் தேயி…)
“இந்தப் பாத்திரமெல்லாம் உள்ள எடுத்திட்டுப் போ.” என்றாள் அவள். சிரிச்சிருக்கப்படாது!
வைக்கோலை உருவ மனம் அழுதது. இதெல்லாம் நம்ம வேலையாடே… டேய், நீதானடா ஊரைப் பார்க்க வேலை கேட்டே வெண்ணே…
நல்லா திரண்ட எருமைகள்… அவனைப் பார்த்ததும் மிரண்டு பெருமுழி முழித்தன. எத்தாம் பெரிய உருவம். பார்க்க நமக்கே பயந்து கெடக்கு. ஆனா அது நமக்கு பயப்படுது… என்னா சென்மம்டா இது. முட்டுமோ?... என்று கவலையாய்க் கொம்புகளைப் பார்த்தான். நடு வகிடெடுப்பான் சில ஆளுகள்… பொம்பளையாளுங்க மாதிரி… அப்படி ஓரத்துக்குப் படிந்திருந்தன கொம்புகள். அதை வெச்சி முட்டாதுன்னு முடிவு செஞ்சிறப்படாது. முட்டி ரெத்தம் வரணுன்னில்ல. சில மாடுகள் அந்தாக்ல கவட்டைக்குள்ள மண்டைய விட்டு கிட்டிப்புல்லு விளையாடிரும்.
”ஒண்ணுஞ் செய்யாது போ…” என்றாள் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள். அவ எப்டி… முட்டுவாளா தெர்ல. கிட்டே போனபோது ஒரு மாடு மிரண்டு பின்வாங்கி சங்கிலியை அறுத்துக் கொண்டு விலக முயன்றது. வைக்கோலைப் பிரித்துப் பரத்திப் போட்டான். அதற்குள் என்னா அவசரமோ மாடு சாணம் கழிந்தது. அவன் வேட்டியில் தெறித்தது. மடித்துக் கட்டிக் கொண்டுதான் வந்தான். வைக்கோல் தூக்கிப் பாதிவழி வரும்போதே அவிழ்ந்து விட்டது. மேலே சிந்திய சாணி பத்தாது என்று சந்தேகத்துக்கு மூத்திரம் வேறு அடித்தது. அதும் பத்தாது என்று மூத்திரத்திலேயே வாலை நனைத்து மயிர்க் குஞ்சலத்தால் ராஜாவுக்குக் கவரி வீசியது…
சாயந்தரம் இதைப் பால் கறக்கச் சொல்லுவாங்களோ, குளிப்பாட்டச் சொல்வாங்களோ... என்றெல்லாம் கவலை கிளம்பியது. ஈப்பட்டாளம் வேறு. மாடு நிற்கக் கொள்ளாமல் காலை அசத்தியது. என் கால்ல வெச்சிறாத எரும… சதை தாளாது…
சில வேலைக்காரர்கள் தென்பட்டார்கள். ஏற்றம் இறைத்துத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஒருத்தன். தென்னை மரத்தில் ஒருத்தன். மண்டைல இளநியப் போட்றாதய்யா… எல்லாரும் இயல்பாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
பழகி விடும் என்றிருந்தது. வேறு வழியும் இல்லை. பெரிது பெரிதான அறைகள். காற்று தாராளமாய் வளைய வருகிறது. ஃபேனே தேவையில்லை. அவர்கள் வீட்டில் யாரும் ஃபேன் போடவும் இல்லை. அதன் சடசடப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.
பூபதி எழுந்து தூக்கம் விலகாத தள்ளாட்டத்துடன் வந்தான். கக்கூசில் யாரோ ஏற்கெனவே போயிருந்தார்கள். காத்திருக்க முடியவில்லை அவனால். ரெண்டுமுறை தட்டிவிட்டு வந்தான். அவன் ஆத்திரத்துக்கு கதவை ஒடைச்சிக்கிட்டு உள்ள பாஞ்சிருவாம் போலிருந்தது. இதுல என்னா விசயம்னா, இவாளுக்கு ‘வந்த’ கவலை. உள்ள இருக்கறவாளுக்கு ‘வராத’ பிரச்னை!
பூபதி வைக்கப்படப்புக்கு அந்தாண்டை ஒதுங்கினான்… முட்டை போடும் கோழி போல.
துட்டு விசயத்தில் எவனும் இத்தனை ஜாலியாச் செலவழிக்கிறதில்லை. பைக்குள்ள கைய விட்டாலும் காசை எடுக்க மனசு வர மாட்டேங்குது. ஆனா இந்த சமாச்சாரத்தில் சர்ர்ர்னு அத்தனையும் வெளிய தள்ளினாத்தான் அவனவனுக்கு நிம்மதி.
தத்துவங்கள் வாழ்க.
உள்ளே வர, அந்தப் பெண்கள் புன்னகை செய்கிறார்கள். நிறைய முகங்கள் பழகி விட்டன இப்போது. சிறு சிட்டுக்களாய்ப் பெண்கள். தோழிகள் சோழிக் கலகலப்புடன். ரேடியோப் பெட்டி இருந்தது. சென்னைன்னா எஃப் எம் கேப்பான். தேன்கிண்ணம். சிறப்புத் தேன்கிண்ணம்னு பாடாவதி ஆளுங்களைக் கூப்பிட்டுப் பாடாவதிக் கேள்விகள் கேட்பார்கள். அவன் இதாண்டா நேரம்னு தன் சம்பந்தப்பட்ட படமாச் சொல்லி டப்பாப் பாட்டா வெச்சி அறுத்துத் தள்ளிருவான்…
யார்னு பேர்கேட்ட மாத்திரத்திலேயே அணைச்சிறலாம்னிருக்கும். “உங்க வாழ்க்கைல மறக்க முடியாத சம்பவம்?”னு ஒருகேள்வி. ஓடாத ஒரு படத்தை – அவன் எடுத்த படத்தைப் பத்தி அவக பேசுவாக பெருமையாய். ஜனங்க மறந்துவிட்ட சம்பவம் அவனுக்கு மறக்க முடியாத சம்பவம். பாவிகளா!...
வாசலில் யாரோ வந்திருந்தார்கள். பாண்டித்துரை பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் துட்டு விசயந்தான். கெழங் கட்டைங்களுக்கு வீட்ல கால் தரிக்காது. சாமி காரியம், ஊர்ப் பொதுக் காரியம்னு அலையிறது… தின்ன சோறு செமிக்கண்டாமா?
மதுரை டிவிஎஸ் கம்பெனியாளுங்க ஒண்ணாச் சேர்ந்து மியூசிக் பார்ட்டி வெச்சிருந்தாங்க. எல்லாம் ஒண்ணாப் பெரிய வேனெடுத்து வந்து இறங்குவாங்க. கச்சேரி ஆரம்பிக்கு முன்னால ஆத்தாடி அவனவன் செய்ற அமக்களம். டொய்ங் டொய்ங்னு மைக்கச் சரி பண்றதும் – க்ர்ரீச்னு காது கூசறாப்ல சப்தத்தை மைக்செட்காரன் அதிகப்படுத்தறதும், இவக அதைச் சுண்டிப் பாக்குறதும், சத்தம் ஒழுங்கா வருதான்னு சைட் ஸ்பீக்கர்லயும், தள்ளி தெருப்பக்கம் திருப்பிய குழாய் ஸ்பீக்கர்லியும் செக்கப் பண்றதுமா பயங்கர செட்டப். ஆளுக்காள் டை கட்டி, அம்சமா ஸ்டெப் கட்டிங் – அப்ப அதான் ஃபேமஸ்… வயலின் கிடார்னு சுண்டறானுங்க. சுருதி சேக்கறானுங்க. அதுக்கே ரொம்ப டைம் ஆயிட்டு. சரி பாட்டு இன்னிக்கு போட்டுக் கழட்டப் போறான்னு பாத்தா, மொதப்பாட்டு சீர்காழிப் பாட்டே சொதப்பல்… விநாயகனே வல்வினையை வேரறுக்க வந்தாய்…னு குரலைப் பிடிச்சு சும்மா ஆட்ட்ட்றாப்டி… போடா நீ எந் தாலியறுக்க வந்தாய்…னு அவனவன் கிளம்பிட்டாப்ல…
நன்கொடை ரசீதில் கையெழுத்துப் போடறாரு பாண்டித்துரை. பேனா எழுதல. வந்தாளுகள் பேனா அது. நம்ம ஐயம் பைல எப்பவும் பேனா வெச்சிருப்பாப்டி. அவன் பட்டணத்துக்காரன்லா? சட்டுனு நீட்டினான். புன்னகைத்தபடி வாங்கிக் கையெழுத்து போட்டார்… எவ்வளவு எழுதறாருன்னு பார்க்க முயன்றான். முடியவில்லை.
கிர்ர்னு பறக்கிறாப்ல இருந்தது. அப்டியாளாக்கும் நான். மாடு கழுவ விட்றாதீங்க…
வந்தது பக்கத்து கரிசலூரணி ஆட்கள். ஒருவாரத் திருவிழா போல. நைட்டு அண்ணாச்சி கிளம்பலாம். கூட நானும்… அவர் காரில்… அது தனி பந்தாதான்.
பெட்ரோல் போட, டயர் காத்தடைக்க என்று பங்க் அருகே கிடையாது. கரிசலூரணி அடிக்கடி போகவேண்டிய தேவை இருக்கும் போலிருந்தது. அப்டியே மேலப்புதூர் பக்கந்தான். நம்ம வீட்டுப் பக்கம் ஒற்ற அழுத்து அழுத்திக்கர்றதுதான்…
பொன்மானே… என்று திரும்பவும் பாடினான். காலையில் இருந்து ஈ சுத்தறாப்ல திரும்பத் திரும்ப இதே பாட்டு. சில நாள்ல அப்டி ஆயிருது. ஏன்?
தெர்ல.
ஏம் மாப்ள தெர்லன்ற பதிலுக்கு ஒரு ஆராய்ச்சியா? தேவையா?...
தெர்ல!
அம்மானை… பொன்னூஞ்சல்…
(வெள்ளிதோறும் தொடர்கிறேன்)
91 97899 87842
storysankar@gmail.com


Thursday, January 17, 2019


மூன்றாம் பகுதி
முத்தயுத்தம்

12
 த்மினி ஆளு பாக்கத்தான் அப்பிராணி. சாது. நல்ல பேச்சு சாதுர்யமும் இடக்கும் உள்ளவள்தான். நாணம் பூசிய மனசு. பேசும் போதே சற்று மேக நிழலாய் முகத்தில் நகரும் நாணம். பக்கத்தில் உட்கார்ந்து நகத்தைப் பார்த்தபடி பேசுவா. என்றாலும் தலையை மாத்திரம் ஆட்டி ஆட்டி, கேட்டுக் கொண்டிருப்பதை உணர்த்துவா. திடுக்கென்று தலை தூக்கி ஒரு வார்த்தை… ஒரு புன்னகை… அடேங்கப்பா என்றிருந்தது. பார்வையா அது? படையெடுப்பு. சொல்லா அது? சுறாவால் சுழற்சி!
வாய்ச்சொல் பாய்ச்சல்!
பாடப்பாட ராகம் என்கிறார்கள். பெண்கள் மூட மூட மோகம்.
இந்தப் பொற்கணங்களுக்குக் காத்திருக்கலாம். தப்பில்லை. எத்தனைக்குக் காத்திருக்கிறோமோ அத்தனைக்கு இந்தப் பொழுதுகள் அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் அமைகின்றன. துன்பத்தில் சிரிக்க வேண்டும் இன்பம் காத்திருக்கிறது என்பார்கள்.
இன்பம் காத்திருக்கவெல்லாம் இல்லைதான். அதுக்கு வேற வேலை யில்லையாக்கும். இவரு பெரிய கிராமத்து டவுண் பஸ்சு… காத்திருக்கிறதுக்கு… துன்பம் அகலுதலே அதை உணர்தலே அந்த விடுதலையை நுகர்தலே இன்பத்தின் உள்ளூற்றைத் திறக்க வல்லது.
ஆண்களும் பெண்களுமாய்ப் பின்னிக் கிடக்கிறது உலகு. அறிவும் உணர்வுமானதோர் தளத்தில் அறிவு சற்று உச்சப்பட்ட தளத்தில் இயங்குகிறவன் ஆண். உணர்ந்து உணர்ந்து அனுபவித்து, ஒருவகையில் சிகரெட் குடித்த வெளிமூச்சாய் சுதந்திரப்படுகிறது. பெண்மை? உள்மூச்சை விட வேகமான வெளிமூச்சு. தண்ணீர்க் குடத்தைச் சுமக்க முடியாமல் பொத்தென்று கீழே போடும் மேகமே பெண்கள்.
மூடிய கதவுக்குள் அவர்கள் தங்கள் கனவு முடிச்சுகளை அவிழ்த்து அரிதாரம் அழித்து உள்ளே ஒளித்து வைத்திருக்கும் அந்தரங்க நகைகளை சற்று பூசிய நாணத்துடன் எடுத்து எடுத்துக் காண்பித்து பெருமிதங் கொள்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் வெகு அபூர்வமாகவே அமைவது துயரமானது.
ஆண்களை அவர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். வியக்கிறார்கள். கவனிக்கிறார்கள். அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த ஆண்கள் அறிந்தாரில்லை. இதில் அறிவின்பாற்பட்டு இயங்குவதான அவர்தம் பாவனை!
பெண்மை ஆணின் இதயம் சுமந்த நிழல். மயில்பீலி!
ஆணெனும் கிருஷ்ணருக்கு துலாபாரத்தில் பெண் எனும் துளசி போதும்! வேறெதும் அதற்கு நிகராக ஒருபோதும் போதாது.
உடல்வலியும் உபாதை உபத்திரவங்களும் தணிய மருந்திட்ட பத்மினி அவனது உணர்வுப் பசிக்கு விருந்திட்டாள்.
அவர்கள் மானுடத்துச் சிறு புல். என்றாலும் பூக்களும் கனவுகளும் அவற்றுக்கும் உள்ளவைதாமே?
அவளிடமிருந்து மாதக் கணக்கில் விடைபெற்றுச் சென்ற கணவன்… அதைப் பெண்கள் சமாச்சாரமாய் வேறுவிதமாய்ச் சொல்கிறார்கள்.
கணவனிடமிருந்து செய்தியே இல்லை. பணமும் வரவில்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடிப் போனது. சிறு சிறு வேலைகள் வந்தன. சித்தாள் என துட்டுக்கு மண் சுமந்தாள்… பிரம்படி படவில்லை. (புருஷங்காரன் ஊர்லயே இல்லையில்லா!) கைக்குழந்தை தனத்தை இசக்கிக் கிழவியிடம் விட்டுவிட்டு வேலைக்கு ஓட வேண்டியிருந்தது. கனமான செங்கல்கள் கழுத்தெல்லாம் அழுத்தும். ரெண்டு மாடி உயரங்கூட அதை வைத்துக் கொண்டு கயிற்றில் கட்டிய சவுக்குக் கட்டை ஏணிகளில் ஏறணும். மேலே ஏற ஏற பாரம் கூடுமேயொழிய குறையாது. ஒவ்வொரு முறை ஏறி இறங்கும்போதும் ஐந்து விரல்களாலும் பின் கழுத்தை அழுத்திக் கொள்வாள். மனசில் தனம் அழாமல் இருக்கணுமே என்றிருக்கும். எப்படா வேலை முடியும் என்றிருக்கும்.
வீட்டுக்கு வர இருட்டிவிடும். வீட்டை நெருங்க நெருங்க நடை நடையோட்டமாகி விடும்.
“குழந்தை அழுதிச்சா பாட்டி?”
“போட்டோவக் காட்டிக் காட்டி –ம் மா… ம் மான்னு கேட்டது”
கரகரவென்று கண்ணீர் கொட்டிவிடும்.
குழந்தைகள் பெண்ணின் கனவு முட்டை பொரித்தவை அல்லவா? ஆண்களுக்கு அப்படியெல்லாம் பிரித்தறிதலே கிடையாது. கனவாவது முட்டையாவது? அவன் அசைவ ருசி கொண்டவன். கனவுகளின் முட்டைப் பொரியல் சாப்பிடுவான்!
ஒத்தடமும் வெந்நீர்க் குளியலும் முடித்து நல்ல தூக்கம் ஒண்ணு போட்டு முடித்தார் மாப்ளை. உடம்பு சுளுக்கு எடுத்தாச்சி. ஒரு விடுபட்ட சிரிப்பு. நுரை உவகை. கதவுகளைச் சாத்திக் கொண்டு மானுடம் அவரவர்க்கான உலகை ஸ்தாபித்துக் கொள்ளும்… பகிர்ந்து பிரஸ்தாபித்துக் கொள்ளும் நேரம். அது வேறுலகம். அங்கே வாய் பேசுவதில்லை. கண் பார்ப்பதில்லை. காது கேட்பதில்லை.
பார்க்கிறவர்கள் குருடனாகிறார்கள். பேசுகிறவர்கள் ஊமையாகிறார்கள். நடக்கிறவர்கள் சப்பாணி ஆகிறார்கள்.
யானைக்குக் கட்டுப்படுகின்றன அங்குசங்கள்.
பெண் வசியத்தின் முன் வார்த்தைகள் அநாவசியம்.
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின… நன்மை கண்டோம், என எழுந்து கொள்கிறான் ஐயம். அருகே மனைவி. இளம் மனைவி. அதைவிட இளம் குருத்தாய்க் குழவி. வாழ்க்கை வானவில்லாய்த் தெரிகிறது அவனுக்கு. வர்ணவீச்சு. கனவல்ல நிஜம் என்றே நம்ப இயலாத அளவு எத்தனை கஷ்டப்பட்டு விட்டான்.
மழை விட்ட பொழுதின் இறுக்கத் தளர்ச்சி போல… உடம்பு சொடக்கெடுத்து சோர்வு நீங்கி புதிய சக்தி, உற்சாகம் விளிம்பு வரை ஊறிக் கிடந்தது. அட சற்று முன்புவரை அவன் அடிமை. இப்போது அவன் இந்தக் குடும்பத் தலைவன்.
தன்னைப் பற்றிச் சொல்லாமல் அவள் அவன்பட்ட துயரங்களைக் கேட்டுக் கண்ணீர் வடிக்கிறாள். சுண்டெலி சிறுமலையாய் விசுவரூபங் கொண்டாற் போல பிரமிப்பாய் இருந்தது அவனுக்கு. பனைத் துணை நன்றி செயினும் தன்னைத் தினைத் துணையாக இந்தப் பெண்மை முன் வைத்துக் கொள்கிறதே…
ஒவ்வொரு பெண்ணும் இடுப்பில் குழந்தையும் நெஞ்சில் தாயுமாய் இருக்கிறார்கள்.
ஆண்களா? அதெதுக்கு? சரி, சொல்லிருவம்… அவங்க இடுப்பில் கத்தியும் மனசில் பயமுமாத் திர்றாங்கப்போவ்.
ரொம்பத் தெனாவட்டா சொல்லியாறது. மனைவிகள் மன்னிக்க – உலகில் ஒரேயொரு மனோன்மணின்னு.
ஆம்பளைங்க மன்னிக்க. உலகில் ஒரேயொரு எம்ஜியார்!
தாங்க முடியுதால? ஏல தூங்க முடியுதா? அப்பிடிச் சொல்லாமலேயே அவனவனுக்கு ஆயிரஞ் சந்தேகம். சாவி கெட்ட பயலுக!
ஆண்டாள் பாடினா அன்னிக்கு… தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்! எத்தனை அழகு ஆண்டாளின் உள்ளம். தன்னில் தாய்மையை உணர்கிற உள்ளாவேசம். (வை)கறைக் கனவு. வயிறு நிறைந்தவுடன் பாடிய வாழ்த்துப்பா அது.
இன்னிக்கு நம்மாளுங்க அதைச் சொன்னா அர்த்தம் வேற…
புருசன் அவளை வம்படியா அபார்ஷன் பண்ணி விட்டுட்டான்னு அர்த்தம்…
மாலையில் அது ஜரிகை மாலை. சம்பங்கி மாலை. மனை அல்ல அது. அரண்மனை. அவன் அரியணை ஏறி அமர்கிறான். அதனால் கணங்கள் அமரத்துவம் பெறுகின்றன. சிற்றறையில் சிம்மாசனம். அரண்மனை அகழியாய் தனம் விடுத்த மூத்திரக் குளம். ஒதுங்கி ஒதுங்கிப் படுக்கிறார்கள். கபடி விளையாட்டில் போல ஓடி வருகிறது நதி. தண்டவாளம் இல்லாத ரயில்!
சற்று தலை தூக்கிப் புன்னகையுடன் குழந்தையைப் பார்க்கிறான்.
“இப்டித் திரும்பி ஒண்ணுக்கடிச்சுட்டு அது அந்தப் பக்கமா உருண்டுக்கிச்சுடி” என்று சிரித்தான். குழந்தை தனத்தின் புத்திசாலித்தனம் அவனுக்கு எத்தனை உற்சாகம் தருகிறது.
“இனி இந்தப் பக்கம் ஒதுங்க இடம் இல்ல…” என்றாள் பத்மினி.
“ஒதுங்க வேணாம்னு நான் சொல்லல… குழந்தை சொல்லுது”
“அது ஒதுங்கிக்கிட்டு சொல்லுது” என்று ஒரு போடு மேலடி அடித்தாள் அவள்.
குழந்தையிடம் சற்று அசைவு தட்டுகிறது. “இப்ப முழிச்சுக்கும். இன்னுங் கொஞ்ச நேரத்தில் பசிக்கும்…” என்கிறாள். தொப்புள் கொடி உறவு அது. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலைமீது எதிரொலிக்கும் – போல அது. இது தாய்மையில்லா. சிரிக்கு முன்னாடியே கேட்கிறது எதிரொலி.
பிரித்துக் கொண்டு எழுந்துபோய் குழந்தைக்கு அமுதூட்டுகிறாள். தற்காத்து கணவனையும் காத்து குழந்தயையும் பேணும் பெண்மை.
குழந்தை பலூன் ஊத ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டிருந்தது. குலவித்தை கல்லாமல் பாகம் படும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வீடென்ற அமைப்பும் சிலிர்ப்பும் வேண்டித்தானே கெடக்கு. இல்லாட்டி வெயில்ல பாதங் கொப்பளிச்சாப்ல அவனவனுக்குக் கிறுக்குப் பிடிச்சிரும்…
வாழ்க்கை ஒவ்வொரு கணமும் தோள்ப் பிசாசாய் அழுத்திக் கொண்டிருந்தது. காலை விடிய உலகம் வேறு விஷயமாகி விடுகிறது. கொடிய விஷமாகி விடுகிறது. என்றாலும் மாஜிக் துணிபோல இரவு அவற்றைத் துடைத்தெறிந்து விடுகிறது. (அச்சுக் கோப்பவர் கவனத்துக்கு – விடுகிறதுக்கு முன் வார்த்தையில் கண்டிப்பாய் ‘த்’ போடவும்)
அவளுள்ளின் வாடிய சருகுகளை அவன் வருடிக் கொடுத்தான். வாழையின் உட்குருத்து போல பெண்ணே… நீ சிலிர்த்துத் தழைக்க. ராமர் கால்பட்டு கல் பெண்ணானால் கணவன் கை பட்டு பெண் தேவதையாகிறாள். மண்ணுலகத்து நல்லோசைகளை அவள் அவனுக்கு துப்பு துலக்கித் தருகிறாள்.
விழித்தபடியே கனவு காணும் வேளை அது. தூங்கினால் அவை தொலைந்து போய்விடும். தொலைவில் போய்விடும்.
சாதாரணமாகவே அவன் பிதற்றுவான். கட்டுக் கடங்காத சந்தோசம் தாலாட்டித் தள்ளாட்டுகிறது அவனை. நிறைய நிறையப் பேசத் தோணுகிறது. என்றாலும் உளறினால் இன்னும் சிலாக்கியம் போல மனசில் படுகிறது.
உளறல் வார்த்தைகள் புனிதமானவை. அவை அறிவின் நகல்கள் அல்ல. உணர்வின் ஒரிஜினல்கள்! உளறல் ஒன்று –
”பத்மினி இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கே…”
”நேத்திக்கு?”
”நேத்திக்கு அழகா இருந்தே. இன்னிக்கு, ரொம்ப, சேத்துக்கிட்டேனா இல்லையா?”
”நேத்திக்கு நீங்க உளர்னீங்க… சரி உடம்பசதி. தூக்கத்துல இது சகஜம்னு விட்டுட்டேன்.”
“இன்னிக்கு?”
“இன்னிக்கு நீங்க ரொம்ப உளர்றீங்க…”
“இராத்திரி ஒருத்தன் தூக்கம் முழிச்சான்னா இதும் சகஜம்தான்…”
“வேளைக்கு எண்ணெய் தேச்சிக் குளிக்காம தலையே கொட்டிப் போச்சு உங்களுக்கு” என்றாள் அவள்.
“வேளைக்கு எண்ணெய் தேச்சுக் குளிக்கலைன்னா உளறல் வருமாக்கும்னு நினைச்சேன். யார்றி இவ… கழுவிக்கவே தண்ணியக் காணம், கோவணம் பட்டுப் பீதாம்பரம்னாப்ல…”
“கோவணம் பட்டு…” அவள் வேறு மாதிரிப் பிரித்துச் சிரித்தாள். உளறுவது ஆண்களுக்கு மாத்திரம்தான் சொந்தமா என்ன?
இரவு மூத்திர ஆறு போல ஊர்ந்து கொண்டிருக்கிறது.
“கொழந்தை மெலிஞ்சு கெடக்கு…”
“ஒயரமெடுக்கச்சில அப்டி மெலியும். உடம்பு படுத்தும்… ஒண்ணும் பயப்படண்டாம்” என்று புன்னகை ஒழுக அவன் உடம்பெல்லாம் தடவித் தந்தாள்.
உளறல் இரண்டை அவன் ஆரம்பிக்கிறான்… ”நம்ம குழந்தையப் பெரிய படிப்பு படிக்க வைக்கணுண்டி…”
“எங்கய்யா பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை படிக்கிறாரு. அதும் மாதிரியா?”
”நான் எது சொன்னாலும் நீ மறுத்துப் பேசறே?”
“இல்லையே?”
“பார்த்தியா? இப்பகூட நீ மறுத்துதான் பேசறே!”
அது ஒரு உக்கிரவேளை. காலையில் கேட்டால் என்ன பேசிக் கொண்டார்கள் அவர்களுக்கே தெரியாது. பேச்சு தேவையற்ற வேளை அது. தேவதையின் வேளை. வாயில் வெற்றிலை போல அவர்கள் வார்த்தைகளை பந்தாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாய்… அவர்கள் ருசி… ஒருவருக்கொருவர் அதை உதட்டுக்கு உதடாய்ப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
அந்த உளறல்களுக்கு அர்த்தம் தேவையுமில்லை. ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷனிலும் நின்று போகிறது ரயில். அதைப்போல!
வாழ்க உளறல்கள். வாழ்க மானுடம்.
*
(வெள்ளிதோறும் தொடர்கிறேன்)
91 97899 87842 storysankar@gmail.com

Thursday, January 10, 2019


முத்தயுத்தம்

11 
புரூட்டஸ் அவரது ஆண் துணை போல. அம்சவேணி பெண்துணை போல… என்பது ஒருவகையில் சரிதான். புரூட்டசிடம் ஒரு அலட்சிய நிமிர்வு இருக்கும். யாரையும் சட்டை பண்ணாத தன்மை. வந்து ஈஷாது. செல்லங் கொஞ்சாது. சில ஆளுங்கள் வேலை ஒண்ணுமில்லாட்டி பேச எவண்டா மாட்டிவான்னு அலையவெல்லாம் மாட்டான். அவம் பாட்டுக்கு தனியா உக்காந்து ஏதாவது ஊசியோ குச்சியோ எடுத்து பல் குத்திக்கிட்டே காலாட்டிட்டிருப்பான். அவன் பல் குத்த எதும் வசமா மாட்டாட்டி மனுசன் படற பாடு… அது கெடச்சிட்டா பிறகு உலகமே மறந்து, அவாள் அனுபவிக்கிற சுகம்… புரூட்டஸ் அதும் மாதிரி ஒரு அம்சம். வேலையில்லையா, உக்காந்து நாக்கை நீட்டி ஆட்டிட்டிருக்கும். அதுக்கு நாக்கு ரொம்ப மெல்லிசா இட்லியூத்தற துணியாட்டம் இருக்கு. ஏன்? தெர்ல. இப்படி நீட்டிக்கிட்டே கெடந்தா வாய் வலிக்காதா?
அம்சவேணி தனிமையை அத்தனை சுவைக்காது. அவுத்து விட்டம்னா போயிப் புல் மேயும். வறட் வறட்னு அது புல்லை இழுக்கிற சத்தம் கேட்கும். பக்கத்துல போனா தானா வந்து முட்டி முட்டி முகத்தை உரசும். தடவிக் குடுத்தால் மூக்கை விரித்து பல்லை எப்படியெல்லாமோ கொனஷ்டை பண்ணி விநோதப் பார்வை பார்க்கும். புல்லைக் கையில் எடுத்து ஊட்டி விடுன்னு அர்த்தம்!
சினிமாக்களில் வருகிறாப் போல அது முன்காலை உயர்த்திக் கோபத்தில் சிலிர்த்து அவர் பார்த்ததேயில்லை. தண்ணி கண்டால் அம்சவேணி இறங்க யோசிக்கும். மறுக்கும். வம்பாய்ப் பிடித்து இறக்கினால் அப்படி காலை உயர்த்திச் சிலிர்த்தாப் போல கனைக்கும். அது வீரக்கனைப்பு அல்ல. மறுப்பு. சினிமாக்களில் காலுயர்த்தி வீரமாய்க் கனைச்சால்தான் அது குதிரை. சினிமாக் குதிரைகள் முன்னங்காலால் வில்லனை எத்துகின்றன. பாவி மக்கா, முன்காலுக்கு அதும் அப்டி தூக்கிய நிலையில் எப்படி அத்தனை பலம் இருக்கும்? அம்சவேணி திரும்பிக்கிட்டு பின்னங்காலால்தான் உதை விடும்.
பி.பி.பி. – புரூட்டஸ் ஒரு பக்கம் – அம்சவேணி ஒரு பக்கம் என்று ஒருபடம் இன்னும் இருக்கிறது. காலில் ரப்பர் ஷூ மாட்டியிருப்பார். முட்டிவரை ரப்பர். காட்டுப்பகுதிகளில் சாணி சகதி கெடந்தா மிதிச்சி தாண்டிப்போக சவுகரியம். இப்ப அதெல்லாம் ரோடு போடற ஆளுங்க மாட்டிக் கொள்கிறார்கள்.
மனுசாள் போலவே அம்சவேணிக்கு வயோதிகத்தில் முட்டி உபத்திரவம் வந்தது. முட்டி மாத்திரம் தனியே வீங்கி நடக்க சிரமப்பட்டது. நாட்டு வைத்தியர் என்னென்னவோ பத்தியமெல்லாம் செஞ்சி பாத்தார். பச்சிலையெல்லாம் வெச்சிக் கட்டிப் பார்த்தார். அதன் நொண்டலை மாத்தவே முடியாமல் போய் விட்டது.
நல்லானுக்கு மாம்பழலோடுகளை வண்டி பார்த்து கணக்கு பார்த்து அனுப்புகிற ஜோலி அமைந்த தினங்கள். வேட்டை மூடு இல்லாத தினங்கள். அழகான பெளர்ணமியப்பா… அனுபவிப்பம் என அவரே வேட்டையை மறந்த தினங்களில் அம்சவேணி மீதேறி அதை விரட்டாமல் காட்டில் விரும்பிய திசையில் தனியே பயணிப்பதும் உண்டு.
காடு அப்போது புன்னகையுடன் தலையாட்டி தன் இரகசிய ஏட்டின் இன்னொரு ஆச்சரியமான பக்கத்தைத் திறந்து காட்டும். அதுவரை அவர் போகாத வழி என்றால் இன்னும் விசேஷம். எங்காவது நடுப்பள்ளம் குட்டை கட்டி ஆம்பலும் தாமரையுமாய் மூடிக் கிடக்கும். சட்டென உள்ளே இறங்கத் துடிப்பாய் இருக்கும். இறங்கிறப்படாது. உள்ளே எத்தனை கொடிகள். நல்ல மழைக்கு அந்தக் குட்டையில் இன்னும் ஓராள் ரெண்டாள் உயரம் நீர்மட்டம் ஏறினாலும் கிடிகிடுன்னு தாமரைத் தண்டு வளரும். சமைஞ்ச குமரியின் வளர்ச்சி அது! பிறகு நீர் சுருங்கிட்டா டெலிபோனின் ரிசீவர் வயர்போல உள்ளே சுருள் சுருளாச் சுருண்டுக்கும். நாமபாட்டுக்கு இறங்கி அதுல சிக்கிட்டம்னா வெளிய வர நீச்சலடிக்க ஏலாது.
ஜனங்களில் பெண்கள் ஒசத்தி. தாமரை மொட்டுக்கள். ஆண்கள் தாழ்த்தி. தாமரைத் தண்டுகள்!
காட்டு மிருகங்கள் இரவுகளில் இப்படிக் குட்டைகளில் வந்து தண்ணீர் அருந்திச் செல்கின்றன.
விதவிதமான மீன்கள், ஆமைகள், முதலைகள் கூடப் பார்க்கலாம். இதுங்கல்லாம் எங்கருந்து எப்பிடி வருதோ தெர்ல. மீன் கூட்டம் மேலவந்து அழகா மேயும். பார்த்து ரசிக்கப்படாதா மனுசன்? ஒரு சிறு கல்லை எடுத்து வீசுவார். அத்தனையும் விஷ்க் என மறையும்.
அவர் முன்னால் போக பின்னால் தன்னால் தொடரும் அம்சவேணி. சேலையால் தோள்போர்த்திய கட்டுப்பெட்டியான பெண்டாட்டிபோல!
வந்து அம்சவேணியின் அருகில் நின்றார். மூக்கின் துளைகளை யெல்லாம் கன்னா பின்னா வடிவங்களாக்கி அம்சவேணி சிலிர்க்கிறது. பல்லைக் காட்டுகிறது. துப்பாக்கியை எடுத்தார். அதென்ன புது ஐட்டமோ என்கிறாப் போல அம்சவேணி அதைக் கடிக்கிறது. நல்லா உள்த் தொண்டைக்கு வசம் பார்த்தார்.
அடாடா, அவர் கடைசியா ஆடிய வேட்டை குதிரை வேட்டைன்னு ஆயிட்டதே…
அத்தோடு வேட்டையாடும் அந்த ரத்த சூடு அடங்கி விட்டது. கூடத்தில் இப்பவும் அந்தத் துப்பாக்கி பார்த்தால் பழைய கதைகள் ஆச்சரியமாய் இருக்கின்றன. வாழ்க்கையின் தடம் எங்கே எப்போது எப்படி மாறுகிறது தெரியவில்லை.
தனியான தருணங்களில் பன்னீர்ப் புகையிலை வந்து சேர்ந்து கொண்டது. சுருட்டை இப்போது தொடுகிறதேயில்லை. நல்லான் போய் இப்போது கீசகன் என்றொரு வேலைக்காரன். தூக்கப்பிரியன். வேலையில்லையானா எங்காவது ஓரமாத் துண்டு விரிச்சி அந்தாக்ல மல்லாந்து விடுகிறான். அதுக்குத் தயாரா எப்பவுமே தலைல ஒரு சேப்புத் துண்டு.
தோப்புக் கணக்கு வழக்கு பாக்க தனியே கணக்குப் பிள்ளை என்று ஏற்பாடு. வண்டிக்கார வேலுச்சாமி பாத்துக்குவான்னு நினைச்சார். அவன் கை கொஞ்சம் நீளம். கொஞ்சம் இல்லை. ரொம்பவே நீளம். தாமரைத் தண்டு.
மாட்டுக்கே சரியாத் தீவனம் வைக்க மாட்டேங்கிறான். அவன் வந்த புதுசில் வண்டிமாடுகள் ரெண்டும் நல்ல தண்டி தண்டியா ஆரோக்கியமாய் இருந்தன. அவன் ஒல்லியா இருந்தான். இப்ப பார், மாடுங்க அசந்துட்டன. அவன் கொழுத்துக் கெடக்கான்.
பருத்திப்பால், மாட்டுப் புண்ணாக்கு எல்லாம், பாவிமட்டை அவன் திங்கானோ?
அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவர் மாந்தோப்புப் பக்கம் வர்றதில்லை. கணக்குப்பிள்ளை வீட்டுக்கு வந்து போகிறார்.
அவருக்கும் குடும்பம் பெரிசாகி விட்டது. வாழ்க்கை ருசிகள் மாறி விட்டன என்பதையும் சொல்லணும். அது முக்கியம். இப்ப மனுசனுக்கு வேறொரு வேட்டையில் சுவாரஸ்யம் தட்டியாச்சு!
சும்மா அடங்குமா உடம்பு. தனி மனுசன்… இஷ்டப்படி போக்குவரத்து என்று இருந்த காலம் போய் வீடு, குடும்பம் என்று வேறொரு வட்டத்தில் வாழ்க்கை அம்சங்கள் சேர்ந்து கொண்டன. ஊர்ப் பெரிய மனுசன் அவர் இப்போது. பண விசயத்தில் கொஞ்சம் கறார் நிர்வாகம் வந்திருந்தது. கொஞ்சம் நிர்வாக போதை… அதிகாரப் பித்து என்று காற்று திசை மாறிவிட்டது.
ஊர்ஜனங்களின் மரியாதை வேண்டியிருந்தது. வெள்ளைக்கார துரைபோல பேண்ட்டு சர்ட்டு எல்லாம் விட்டு விட்டு, இப்ப வெளேரென்று வேட்டி… ஒரேயொரு கலரில் சட்டை அல்லது சில்க் ஜிப்பா, ஸ்லாக்… என்று பாணி மாறியாச்சு. வேகம் அடங்கி நடையில் ஒரு நிதானம். அலட்சிய பாவனை. பந்தா.
எப்பவுமே கூட ஓராள் நின்று கொண்டே யிருக்கிறாப்போல பார்த்துக் கொண்டார். எதுக்கு?
ஜமீந்தார்னா சில அடையாளங்கள் இருக்கில்ல… வேலையாளுக்குச் சொல்ல வேலை எதும் இல்லையானா கைல வாட்ச் கட்டியிருந்தாக் கூட மணிக் கூண்டுல போயி மணி பாத்திட்டு வரச் சொல்லி அனுப்புவாகன்னு வசனம். எந்திரிச்சி நின்னா தொப்பை மறைக்கும். “எலேய் கால்ல செருப்பு கெடக்கா பாரு”ம்பாகளாம்…
எதிரில் வார ஆள் கண்டுக்காம போனால் கோபம் வருது. அவர் சொன்ன சொல்லை மறுத்துப் பேசினால் ஆத்திரம் வருது. நம்மளைக் கூட்டத்துக்குக் கூப்பிடாமல் ஊர்ல எந்த விசேஷமும் இருக்கப்படாதுன்னு மனசுக்குள்ள ஒரு இது.
தனியா பார்வைக்கு எடுப்பா அம்சமா இருக்கட்டும்னு ஒரு வில்வண்டி கட்டச் சொல்லி வாங்கிக் கொண்டார். அருமையான காளைகள். அதற்கான பிரத்யேகக் கழுத்துச் சலங்கைகள். வேலுச்சாமி வண்டியோட்டுவதை முக்கிய வேலையா ஏத்துக்கிட்டான்.
பாண்டித்துரை கூடவே இருந்தால் அதே மரியாதை தனக்கும் கிடைக்கும்னு ஒரு கணக்கு. நல்ல சாப்பாடு. தண்ணி என்று அவன்பாடு சூப்பரா ஓடும்ல?
பெரியகுளத்தில் அவர் பங்களாதான் பெரியது. வாசப்புறம் பின்னம்புறம் என்று எடுப்பாய் இருக்கும். பெரிய காம்பவுண்டுச் சுவர். ஓரங்களில் காது மயிர்களாய் வெளியே நீட்டிக் கிடக்கும் தென்னைகள், முன்பக்கம் தானியமோ வத்தல் வகையறாக்களோ எப்பவும் ஏதாவது ஒண்ணு மாத்தி ஒண்ணு உலர்த்திக்கிட்டே கிடப்பாள் கொழுக்கட்டை. அதும் மேல காலை உரசி உரசி ஒரு உலாத்தல். டிராமாவுல ஆக்டிங் குடுக்கற ஆளுக சும்மாங்காட்டியும் இங்கருந்து அங்க அந்த மைக், அங்கருந்து இங்க இந்த மைக்னு நடப்பாங்க… அதுக்குப் பேர்தான் டைரக்சன். அதைப்போல!
இஷ்டப்படி அனுபவிக்க சொத்து. நிர்வாக சிரமம் எதுவுங் கிடையாது… ஏன்னா விசயமே தெரியாது!... ஊரும் ஒருபோகம் விளைய, ஒருபோகம் தானியம் மாறும். காலப்பயிர்கள்…
சோளம் தலையாட்டிச் சிரிக்கும். குதிரை பல்லெடுப்புச் சிரிப்பு அது. அது ஆம்பளை. பக்கத்து வயலில் வாழை. தலை தாழ்த்தி நாணிக் கிடக்கும் வாழைப்பூ. அது பொம்பளைன்னு வெச்சிக்கலாம். தூரத்தில் இருந்து பாத்தா என்னவொரு ரசமான காதல் காட்சி.
சிற்சில இடங்களில் தாய்வாழை அருகில் குட்டிவாழையும். குடும்பப் புகைப்படம்!
முந்தானையெடுத்து இடுப்புச் செருகல் செருகினாப் போல வாழையிலைகள். கவனமாப் பார்த்தால் இலைமறைவு காய்மறைவில் காதல் சோடிகள் இருக்கலாம்.
மத்த ஆம்பிளைகளோடு சமதையாய் உட்கார்ந்து சீட்டு விளையாடவும் மனசில்லை அவருக்கு. உள்ளறையில் பொழுதன்னிக்கும் ரேடியோ சிலோன் கேட்க யாராவது போட்டிருப்பார்கள். அதன் சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்… பி.ஹெச். அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி ஷண்முகம், கனக ரத்னம், கே.எஸ். ராஜா என உற்சாக ஊற்றாய்க் குரல்கள். தமிழ்நாட்டுல மதிய வெயிலில் சங்கீத சம்மேளனங்கான். பாட்டு மட்டும் விவித்பாரதில ஓட விட்டுட்டு அவனவன் படக்னு சிலோன் திருப்பறதுதான்!
வெயிலேற சாப்பாடு ஓர் எடுப்பு எடுத்தாரானால் உள்ளே தூக்கப் பம்பரம் கிர்ர்ருங்கும்.
சுத்துவட்ட கிராமத்து நிகழ்ச்சிகள், ஊர்ப் பொதுக் காரியங்கள், கோயில் வைபவங்கள் என்று அழைக்கப்பட்டார். அதுல சுவாரஸ்யம் அல்லது சாமி பக்தி… அப்டின்னுல்லாங் கிடையாது. கூப்பிடற ஆளுங்களுக்கும் அது தெரியும். என்றாலும் நன்கொடைன்னு வெய்ட்டா ஒரு அமவுண்ட் யாரு வெட்றா? மொதல்ல எவன்ட்ட இருக்கு… அதைச் சொல்லு.
“அழைப்பிதழில் முன்னிலைன்னு பேர் பெரிஸ்ஸாப் போடுங்க” என்பார். அவன்பாரு ’முண்ணிலை’ன்னு மொத்தையா தப்புத் தப்பா அச்சடிச்சித் தருவான். அது பிழைன்னு கூட கவனிக்க மாட்டாரு.
பண்ணை ஒல்லியா இருந்தா முன்னிலை. தண்டி தாட்டிகமா இருந்தா முண்ணிலை… அதுஞ் சரிதான்!
கோயில் நிலைப்படி, சந்நிதிக் கற்களில் ‘உபயம்’ என்று அவர் பேர் எழுதியிருக்கும். அவர் புத்திசாலியா? துட்டு தராமலேயே… பக்கத்தில் ஆர்ட் பைன்னு தன் பேரை எழுதிக்கிட்ட ஓவியன்… அவன் புத்திசாலியா?
இது விளம்பரக் காலம். அந்தகால சிற்பிகள் ஒரு சிற்பத்திலாவது தன் பேரைப் பொறிச்சிருக்கானாய்யா?
உள்ளூர் கோயில் திருவிழான்னா நாதசுர தவில்ப் பார்ட்டியோ, கரக கோஷ்டியோ அவர் வீட்டு வாசலில் நின்று ஒரு பாட்டு… சங்கீதம் இல்ல. தேவா மியூசிக் போட்ட சினிமாப் பாட்டு – வாசித்து முடித்துக் கடந்து போகிற ஏற்பாடுகள். மத்த நாள்ன்னா அஞ்சி காசு கடன் கேட்டு அண்ட முடியாத மனுசனிடம் இது ஒரு பந்தா.
பெரிய கலா ரசிகரா அவரு? ஒரு மண்ணுங் கொடையாது. பைக்குள் சலவைத் தாளாய்ப் புது ருவ்வா நோட்டுக்கள் வைத்திருப்பார். நாதசுரக்காரனுக்கு சட்டையில் பணங் குத்துவார். தவில் ஆளு சட்டையே போடாட்டி ஒரு திகைப்பு திகைப்பார். அட திரும்பிப் போயிருவாரோன்ற பயத்தில், தாளங் கெடக்குன்னு பாதில விட்டுவிட்டு அவன் காசை கை நீட்டி வாங்கி கண்ல ஒத்திக்குவான்.
உற்சவர் பல்லாக்கும் நிற்கும். குருக்களும் சட்டை அணிவதில்லை. அவர் டெக்னிக் வேற. கற்பூரங் காட்டி ஹோட்டல் பில்லாய்த் தட்டை நீட்ட, பூபதி, ரேவதி, அவர், பாகீஸ்வரி… என்று தனித்தனியே டிப்ஸ் போடுவார்கள். ஒருமுறை வேலுச்சாமி அதிலிருந்து துன்னீர் எடுக்கிறாப்போல ஒரு நாலணா துட்டு அள்ளிக் கொண்டான்.
புதுசா பந்தநல்லூர் கரகாட்டப் பார்ட்டி வந்திருந்தது. தர்மகர்த்தா ஏற்பாடு. டண்டக்கு டண்டக்குன்னு மேளம் சும்மா கழட்டியெடுக்கிறான். பொண்ணு புதுப்பொண்ணு. அக்காக்காரி திடீர்னு கல்யாணம் ஆகிப் போயி, பொழைப்பு திகைச்சிப் போன குடும்பம். தங்கச்சிய ரெடி பண்ணிக் கூட்டிவர திண்டாடிப் போனது. இளவட்டம். இளநீர் வட்டம். அவ ஆட ஆட, உடம்பை ஆட்ட ஆட்ட டண்டக்கு டண்டக்குன்னு தாளம் வேற. பாக்கவே தவில் குச்சியாப் போனார்.
தலையில் கும்பம் வெச்சி கீழ விழாம ஓர் ஆட்டம். தலைக் கும்பத்தை ஆரு பாத்தா?
“கல்யாணம் ஆயிட்டதால?” என்று கேட்டார் வேலுச்சாமியிடம்.
“ஆயிட்டதுங்க”
“ஏல பாத்தா தெரியலியேடா?”
வேலுச்சாமி சுதாரித்து “இவளுக்கா? இன்னும் ஆவல” என்கிறான்.
“பின்ன யாருக்குக் கல்யாணம் ஆயிட்டதுன்னே?”
“உங்களுக்கு”
“பாத்தா தெரியுதா?” என்று சிரிக்கிறார்.
தர்மகர்த்தா அம்பது ரூபாய் குத்தியிருந்தார்.
பைக்குள் இருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்தார் பண்ணையார்.
என்னா கலைச் சேவை! என்னா ரசனை!
அவரே ருவ்வா குத்தி விடட்டும் என்று நிமிர்ந்து நின்றாள். தொழில்க்காரி தானப்போவ்!
***
இரண்டாம் பகுதி முடிகிறது.
(வெள்ளி தோறும் தொடர்கிறேன்)
storysankar@gmail.com
91 97899 87842