Thursday, November 29, 2018


தொடர்கதை / எஸ்.சங்கரநாராயணன்


முத்தயுத்தம்
5
 சில முகங்களை மறக்க முடிகிறதேயில்லை. நினைவில் கனவில்...  என பாகுபாடற்று அவை நினைவு வெளிக்குள்ளே நித்ய சஞ்சாரம் செய்கின்றன. ஆட்சி செய்கின்றன. உள்ளேயே கரைந்து நிறைந்து போகின்றன.
பிரிதல் அல்லது மறத்தல் பிறகு சாத்தியமே இல்லை!
மனோன்மணி என்பவள் தேவதை. மனத் தடாகத்து மலர்த் தாமரை. மேலே நீர் முத்துகள், பனித் துளிகள் சிந்தினாலும் தாமரை நனைந்தும் நனையாமல் அந்தத் துளிகளைத் தாங்கிச் சிரிக்கின்றன…
மனோன்மணி. மாசு மருவற்றவள். மாடத்து வெண்புறா. பெண் பொம்மைகளை கொலுவில் அடுக்கினால் நடுவில் நாயகியாக அமர, ஆண்கள் மத்தியில் வேறு யோசனையே கிடையாது… வேறு தேர்வே கிடையாது.
மனைவிகள் மன்னிக்க. உலகில் ஒரேயொரு மனோன்மணி.
பெண்மணிகள் ஆயிரம். அம்மணிகள் ஆயிரம். ஒரேயொரு மனோன்மணி.
அழகி. அது ஆளை வாரியணைக்கிற அழகா? மிரட்டுகிற அழகா? இரவில் தூக்கத்தை மறந்து அவளைச் சுமக்க வைக்கிற, அல்லது மலர்த்தி மல்லாத்துகிற ஆவேசத்தைத் தூண்டுகிற அழகா? அழகில் எத்தனை தினுசுகள் இருக்கின்றன...
ஆ, விஷயம் அதுதான். எல்லாமாய் இருந்தாள் அவள்.
இது சாத்தியமா? அவளுக்கு சாத்தியம். அதுதான் மனோன்மணி. உலகில் ஒரேயொரு மனோன்மணி. மனைவிகள் தயவு செய்து மன்னிக்க.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாய்… ஒவ்வொரு இதமாய்த் தோற்றந் தந்தாள். ஆனால் எல்லாருக்குமான சிநேகக் காற்றாய் இருந்தாள். இணக்கமான மிருதுவான புன்னகை சிந்துகிற முகத்தின் அமைதிப் பொலிவு. என்னமோ ஒரு… கவர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உட்பட்ட, அதே சமயம் அப்பாற்பட்ட… மேற்பட்ட, மேம்பட்ட… அதைத் தாண்டிய பெருவெளிப் பேரொளி. சொரூபராணி.
மனோன்மணி பெண்கள் பற்றிய பாடநூல். இலக்கணநூல்.
காவியங்கள் இலக்கணத்தைத் தன்னகத்தே கொண்டவைதாமே?
வைரத்தை உரச வெளிச்சம் வரும். ஊர்க் காவியங்களின் உலாராணி. உப்பரிகைக் காரிகை. மனோன்மணி. சிரோன்மணி.
அவளது கடைக்கண் நோக்கில் வாய்ச்சொற்கள் வலுவிழந்து விடுகின்றன. சொற்களின் அழிக்கும் படை அவள் நோக்கில் உண்டு. மனைவிகள் மீண்டும் மன்னிக்க. நீங்கள் சொற்களை உருவாக்க வல்லவர்கள்.
பார்த்த கணத்தைப் பிட்டுக் கொள்ள வகையற்று காலமே அவள் காலடியில் கட்டுப்பட்டது. கட்டுண்டு கிடந்தது என்றால் மனிதர்கள் எம்மாத்திரம்.
பார்த்த விழி பிறகு வேறெதையும் பார்க்கத் திராணியற்று, வேறெதையும் பதிய பிரக்ஞையற்று… பிரமித்து, ஸ்தம்பித்து, உறைந்து போவதைப் பற்றி என்ன சொல்ல? இது குறித்து நாம் எதுவுமே செய்வதற்கில்லை. எதுவுமே.
கண் வழி உட்புகுந்து, கவனத்தை உறிஞ்சிக் கொண்டு, இதயத்தில் கையெழுத்திட்டாள். இதயம் இரத்தத்துடன் ஒவ்வொரு அணுவுக்கும் அவள் பெயரை எடுத்துச் சென்றது.
கனவுக்கும் நினைவுக்குமான பூமத்திய ரேகை.
இருளில் வெளிச்சமாயும், வெளிச்சத்தில் இதமான இருளாயும் இருந்தாள்.
கோடைகாலக் குளுமை. குளிர்காலக் கதகதப்பு. இப்படி எப்படி சாத்தியம்? அதுதான் மனோன்மணி.
ஒவ்வொரு ஆணுக்குள்ளுமான சிம்மாசன மேடை அவள்.
அடிமைப் படுத்துதல் அல்ல. அதுவோர் கனவுலக வசிய வசிகரம்.
அடிமைப் படுத்துதல் என்றால் என்ன? உன்னை வீழ்த்தி வெற்றி கொள்வதல்லவா? அது அல்ல இது. அல்லவே அல்ல.
ஆ, பெண்ணே… உன் முன்னால் நான் என்னை ஆணாக உணர்ந்தேன். நெஞ்சாற மார்பு விரிய சுவாசித்து, நில் என நிமிர்ந்தேன், என்றால் அது எப்படி அடிமை கொள்ளுதல் ஆகும். நீங்களே சொல்லுங்கள். எப்படி?
காதலில் மட்டும் புறமுதுகு இட்டவர்கள் ஜெயிக்கிறார்கள்.
பூரண நிலவு. பூ பூத்த நந்தவனம். அதில் அழைப்பு என்று தனியே… தனித்தனியே எதற்கு? தேவைதான் என்ன?
வயல் மணந்தால் மயில் வரவே செய்யும்.
சிறுகுளத்தில் குளிர்ந்த தோப்புகள் மிகுதி. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம். வாசனை தன்னைப்போல அமைந்து விடுகிறதில்லையா?
சிறு குளத்தில் மயில்களைச் சுட, வேட்டையாட அனுமதியில்லை. சுதந்திரமாய் வயல்வெளிகளில் மேய்ந்து திரிய விட்டு விடுகிறார்கள் ஜனங்கள்.
மகா ரசிகர்களாய் இருக்க வேண்டும் அவர்கள். மானுடம் அவர்களைப் போற்றுதும்!
கொண்டை சிலிர்க்க அவை நிமிர்ந்து ஜனங்களை ஓரக் கண்ணால் ஒருக்களித்துப் பார்த்துவிட்டு ஜிவ்வென்று மேலெழும்பிப் பறக்கையில்… நீல வளாகத்தில் நீச்சலடிக்கையில், ஆகா அஃதல்லவோ காட்சி. கண்டவர் கண் விண்டிலர்.
அப்போது வயல் பறி போவதை யார் அறிகிறார்கள்? அட, யார் கவலைப் படுகிறார்கள்!...
பிறவிப் பெரும்பயன் எய்துவர் எய்தார் மனோன்மணி காணாதவர்.
வயல்வெளிப் பாம்புகள் என்றால் மயில்களுக்கு உற்சாகத்துக்குக் குறைவில்லை.
ஆ, பாம்புகளைப் பற்றி பயங்கொள்ள என்ன இருக்கிறது, என்று அலட்சியமாய் வயலில் இறங்கி, அந்தப் பாம்புகளைக் கொத்தி வாரியெடுத்தபடி அவை பறக்கிறதைச் சிறுகுளத்தில் பார்க்க முடிகிறது.
ஆச்சரியம். மயில்கள் மெல்லிய உருவங்கள் அல்லவா…
அழகோவியங்கள். அவற்றின் நிமிர்ந்த பார்வை. கழுத்துச் சாய்வு… ஆ, அந்த நடை… அகமெலாம் நிறைகிற அகவல் ஓசை. எதுவுமே அழகு. எல்லாம் அழகு. அழகைத் தவிர வேறில்லை.
அவை பாம்புகளுக்குப் பயங் கொள்வதே யில்லை! ஆண்களோவெனில் பாம்பைப் பார்த்த கணம் தூக்கம் இழக்கிறார்கள். அதை வீழ்த்த நினைக்கிறார்கள். பரபரப்பாகிறார்கள். பயப்படுகிறார்கள்.
மயில்கள் மழையை முன்னறிவிக்கின்றன.
விரும்பி வரவேற்கின்றன. தோகை விரித்து எதிர் கொண்டு அழைக்கின்றன.
சிறுகுளம் மனோன்மணியின் வாசஸ்தலம். எங்குமான அவள் வாசம். ஊரிலேயே காற்றிலேயே அவள் வாசம் கலந்து கிடக்கிறதாக ஆண்கள் எல்லாருமே உணர்கிறார்களே அது எப்படி?
மண்ணை மிதித்தவர்கள், மிதித்த கணம், ஆ என உள்ளிழுக்கிறார்கள். மனோன்மணி அந்தக் கணம் அவள் உள் நிறைகிறாள். ஏற்கெனவே உள்ளே உறைந்த பனியாய் இருந்தவள். உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது.
மனோன்மணி சிறுகுளத்து மயில். உலாவும் கலாபம். சல்லாப உல்லாசம்.
நாட்டியக்காரி வம்சம். அதற்கேற்ற குழைவும் நெகிழ்வுமான தேகக்கட்டு. பளீரென்று தாக்குகிற சிவப்பு உடல். குளிர்ந்த உடல். ஒரு தென்றலாய் ஆண்களை அவளது சிறு புன்னகையே தீண்டி விடுகிறது. ஆ, குளிர்ந்த பார்வையே… ஆனால், ஆண்களோவெனில் அதில் கதகதப்பானார்கள். அதெப்படி? மகோன்னதமணி.
ஆண்களின் உள்ளே துழாவி நரம்புகளைச் சுண்டி இசையென இயங்கி, சூட்சுமங்களை உசுப்பி விட்டாள்.
மனோன்மணி என்கிற இசை இம்சை.
ஆண்கள் மழைக் கடவுள்கள். மழை உக்கிரப்பட்டால் பாம்புகள் வெளிக் கிளம்பவே செய்கின்றன.
மழையை வரவேற்று மயில்கள் தோகை விரித்து எதிர் கொண்டழைக்கின்றன.
மனோன்மணி ஆண்களை சதிர் கொண்டழைக்கிறவளாய் இருந்தாள்.
அவளது பீலிகை எத்தனை நளின நெடும்பரப்பு கொண்டது. செறிவானது. கண்சிமிட்டி அழைக்க வல்லவை அப்பீலிகைகள்.
கொடியசையக் காற்று வரும். காற்றசைக்க கொடி இசைவதும் உண்டு. எது முதல் எது பின்? ஏனிந்த ஆராய்ச்சி?
ஆராய்ச்சி செய்கிற நேரமா அது? கவிதை நேரம்.
மழை வர தோகை விரியும். தோகை விரிய மழை ஓடோடி வருகிறதும் சகஜம்தானே?
மழைமூட்டத்தின் உக்கிரம் மயிலுக்குக் கொண்டாட்டம். பீலிபெய் சாகாட, மயில் விரித்த தோகையாட்டச் சதிரில்… ஆண்களின் அச்சு இரிந்தது. முறிந்தது.
அவளது கைவளை ஒலியே காவியத்திற்குக் கால்கோள் விழா எடுத்தது.
அவளது சிலம்பொலித் தளும்பல் கேட்டவர்கள் கனவிலும் புலம்ப ஆரம்பித்தார்கள்.
ஓரப் பார்வையல்ல அது. பிரசாதப் பரிமாற்றம்.
***
ஐயம்பெருமாள் மனோன்மணியை இத்தனை கிட்டத்தில் பார்த்ததில்லை. கேள்விப் பட்டிருந்தான். தினசரி வயிற்றுப் பாட்டைக் கழுவுகிறதே பெரும்பாடு அவனுக்கு. எனினும் என்ன, நிலா வெளிச்சம் எல்லாருக்கும் பொதுவானதுதானே?
சிறுகுளம் பக்கத்தில் பெரியகோவில் கும்பாபிஷேகம் என்றோ, சிறப்பு வழிபாடுகள் என்றோ விசேஷ நாட்களில் அவளது சதிர்க் கச்சேரி இருக்கும்.
வாய்ப்பாட்டு தேசிகாச்சாரி. அவரை தேசிகாச்சரி என்பதே சரி… கையில் பஜனைகோவில் ஜால்ரா! தட்டித் தட்டித் தலையை ஆட்டி ஆட்டிப் பாடுவார். அவளது பம்பர ஆட்டத்தில் தனை மறந்து தலையாட்டுகிறாப் போல… அவளே அவர் தலையைச் தோசை மாவாட்டுக் கல்லைப் போல ஆட்டுகிற மாதிரித் தோணியது அவனுக்கு.
அவளே அவரது நட்டுவனார் ஆயிட்டாப்ல!
தத்தரிகிட தமி ததீங்கிடதோம்… அட ஏதோ ஒரு தாளம். அதைப் பத்தி என்ன? தித்திளாங்குதமி தகதிமி தகதை… அட, சரிய்யா! தாளத்தை பாட்டை ஆரு கவனிச்சா? அரங்கத்தை அவள் ஆளும் அழகு. எல்லைகளைத் தொடும் அழகு.
அரங்கம்னா எது? எலேய், மேடையெல்லாம் ஜோராப் போட்டு லைட் லைட்டா மாத்தறாங்களே அதாடா? என்ன நீ வெவரங்கெட்ட ஆளாயிருக்கியே.
மனசுய்யா! இங்க ஆடுதா யாரும். கவனமா என்னை உத்துப் பாரும். என் மனசே உடம்பே திடும் திடும்னு அதிருதே பாரும்.
அந்தாக்ல மனசோட இந்த ஓரத்துக்கு அவ வந்தா யம்மாடி-ங்குது மனசு. குனிஞ்சி நிமிந்தா யப்பாடி-ங்குது. அப்டி ஒரு துள்ளு துள்ளினா இதயம் எகிறி நுரையீரலை இடிக்குதேய்யா… இம்சை… அந்த இன்ப இம்சையைத் தாள முடியலியேய்யா.
அப்டிக் கையை குவிச்சி இந்தப் பக்கம் சாய்ஞ்சா காத்து தள்ளாட்டினாப்ல ஒரு ஒயில். நம்மாளுக்கு குடிபோதை ஆட்டறாப்ல ஒரு லகரி. அந்தாக்ல ஒரு கிளுகிளுப்பான கிறுகிறுப்பு. உலகம் சுத்துதடி ஒரு ரவுண்டு… ஒரு புலவன் பாடினானே? அதைவிடவா நான் சொல்லிறப் போறேன்…
ஒரு துள்ளலில் அவ இடது பக்கம் வந்தா… ஆத்தா, என் மனசு ஓரத்துக்கு வந்திட்டே. பாத்து, வெளியே விழுந்துறாதே…
ஆட்டம்னா அது ஆட்டம். ஆட்டமா அது? தேரோட்டம்!
பார்த்தவன் வாயைப் பொளந்தா பொளந்ததுதான். ஈ போனா என்ன? யானை போனா என்ன? –த்தூன்னு துப்பிட்டு, அவனவன் கண்ணெடுக்காம அவளையே பாக்கான்.
மனோன்மணி கச்சேரின்னா, ராத்திரி ஒரு ஒம்பது மணி பத்து மணிபோல ஆரம்பிக்கும். அதுக்கு முன்ன ஏதாவது வெட்டியாளுக கூத்து வைப்பாங்க…
அன்னிக்கு எத்தாம் பெரிய கூத்துப் பார்ட்டியா இருக்கட்டுமே… போணியாவது. டெபாசிட் காலி. அட, கூட்டமெல்லாம் இருக்கும். அரங்கம் நெறைஞ்சிதான் இருக்கும். ஆனா கதை வேற!
பைத்தாரப் பயல். கூட்டமெல்லாம் அவன் கூத்துப் பாக்கன்னு அவனுக்கு ஏக உற்சாகமா இருக்கும். எல்லாம் மனோன்மணிக்கு வந்த கூட்டம்னு அவன் கண்டானா? லேட்டா வந்தா முன்வரிசைல இடங் கிடையாது. அட பார்க்கவே இடங் கிடைக்காதுன்னு அவனவனுக்குப் பதட்டம். போயி சிநேகிதனுக்குத் துண்டு வேற விரிச்சிருப்பாங்க. அன்னிக்கு ஒருத்தன் துண்டு விரிச்சிருக்கறதைப் பாத்திட்டு, சர்த்தான் யாரோ ஒராளு, பிச்சைக்காரன்தான்னு, அதுல சில்லரை போட்டுட்டான். ரகளையாயிட்டது.
கூத்து எப்படா முடியும்னு காத்திருப்பாங்க. எத்தனை பெரிய சோக முடிவுன்னாலும் ஜனங்க சிரிச்சிட்டே பாப்பாங்களா, அவனுக்கே கன்பியூஸ் ஆயிரும். மூஞ்சி பியூஸ் போன பல்பா ஆயிரும்!
அந்தா அன்னிக்கு ஒருத்தன் தூக்குமேடையில் கிளைமேக்ஸ் வெச்ச கூத்து நடத்தினாம் பாரு. அதா வேடிக்கை…
உணர்ச்சியின் உச்சகட்டம். தூக்குக் கயித்தைக் களுத்துல மாட்டிக்கிட்டே வசனம் பேசறான். பேசிக்கிட்டே கெடக்கான். ஜனங்க கொட்டாவி விட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு சிலர் சம்பந்தா சம்பந்தம் இல்லாத எடத்துலல்லாம் கை தட்டினாங்க. அப்பவும் அவன் வசனத்தை முடிக்கறாப்ல இல்லை. ஒராள் எழுந்திரிச்சி, “சரி மாப்ள நீ கயித்தை மாட்டிக்க, முகூர்த்த நேரம் தவறிறப் போவுது”ன்றான் – என்னவோ தாலி கட்டறது தட்டு கெட்டுப் போனாப்ல!
- அவன் கதை இப்ப என்னத்துக்கு. ஆம்பளையாளுக கூட்டம்தா இப்படி டியூப்லைட்டுல பூச்சியப்பினா மாதிரி அவளைப் பாக்க அப்புதுன்னில்லப்போவ். பொம்பளைங்க பக்கமும் எள்ளுப் போட எடம் இராது. எல்லாம் வயித்தெரிச்சல் பார்ட்டிங்க.
என்ன இருக்கு இந்த பொம்பளை கிட்ட… ஆம்பளைங்க அப்டி விழுந்து வார்றாகளேன்னு பாக்கற கூட்டம். பொறாமைக் கூட்டம். வீட்டுக்கார்ருக்கு முன்ன அவங்க படையெடுப்பு நடத்தியாச்சி.
புருசனுக்கு இந்த ஆட்டமெல்லாம் வேண்டிக் கெடக்குன்னு, அவளுகளும் டங்கு டங்குனு வீட்ல ஆடறதா?
என்னத்த ஆடறது? குனிஞ்சி நிமிரவே அங்க பிடிக்குது, இங்க பிடிக்குதுன்றாளுங்க. வெறுன்ன பல்லப் பல்லக் கடிச்சா ஆச்சா? அதுல்லா தனி அம்சம்டி. எல்லாருக்கும் அமைஞ்சிருமா என்ன?
அதான் சொல்லிட்டமே. மனைவிங்க கோவிச்சிக்கிறாதீங்க… அவ கத வேற. உலகத்துல ஒரேயொரு மனோன்மணி தான்னு…
தகிட தகிட தா தை தகதைன்னு சும்மா உருட்டிட்டுக் கெடக்காம் பாரு, ராத்திரில சமையக்கட்டுல பூனை புகுந்த மாதிரி… கீழ இருக்கற அத்தனை ஆம்பளைங்களும் அவனை மாதிரிதான்…
அவரு மேடைல. இவனுங்க கீழ. அவ்ளதான் வித்தியாசம்!
அழகில் அவ ராட்சசி. பிசாசு. யட்சிணி, எனை ரட்சி நீ. கண்டமேனிக்கு வாய்ல அவளைத் திட்டிக் கெட்ட வார்த்தை வருது. மனசு பரவசமானா ஆம்பளைங்க ஏனோ கெட்ட வார்த்தைல எறங்கீருதாங்க. கெட்ட நினைப்பு வந்திருது. ஆம்பிளை சென்மமே அப்பிடித்தானா?... தெர்ல.
எலேய், அழகாடா இது? ஒங்க வீட்டு அழகில்ல, எங்க வீட்டு அழகில்ல. உலகத்துப் பொம்பளையாளுங்களின் ஒட்டுமொத்த அழகடா இது.
“அடேங் கொக்க மக்கா” என்று வாயைப் பிளந்தான் ஐயம்.
திரைச்சீலை விழுந்தது. அவன் மனமும் பொத்தென வீழ்ந்தது.
வண்டி அவர்களைக் கடந்து போனது.
***
(வெள்ளிக்கிழமைகளில் தொடர்கிறேன்)
storysankar@gmail.com / 91 9789 87842


Thursday, November 22, 2018


தொடர்கதை
 
முத்த யுத்தம்
4

காரின் வரவுக்கு வீடே அலையெடுத்துக் கொந்தளிக்கிறது. பாண்டித்துரை அண்ணாச்சியே இத்தகைய கோலாகலத்தை எதிர்பார்க்கவில்லை. கார் அவரின் பயன்பாடு, போக்குவரத்துக்கு - சொந்த உபயோகத்துக்கு என்று நினைத்திருந்தார். ஆளுக்காள் பெரும் பட்டியல் வைத்திருந்தார்கள். யோசனை கேட்க என்று அவர்கள் அண்ணாச்சி பக்கம் திரும்புகிற மாதிரியே இல்லை.
வீட்டுக்கிழவி, பண்ணையாரின் அம்மா மூட்டுவலிக்காரி. தடித்த உடம்பு. கை அல்ல அது. உலக்கை. அதிகம் நடந்தால் ஆளையே உருட்டித் தள்ளிவிடும் உடற்கட்டு. வெள்ளைச்சீலைக்குள் கொழுகொழுவென்று கொழுக்கட்டை போலிருப்பாள்.
கிழவிக்கு விட்டுப்போன பிரார்த்தனைகள் நினைவுக்கு வந்தன. அவள் வாயில் இருந்து திருப்பதி என்கிறாப்போலக் கேட்ட மாத்திரத்தில் தலை ர்ர்ர் ரென்றது ஐயத்துக்கு. சாதா ரோடே ஒம்பாடு எம்பாடாக் கெடக்கு. திருப்பதியில் எட்டெட்டாப் போட்டு மலையேறவா? சர்த்தான்… கிழவியின் சாவு என் கையாலதான் போலிருக்கிறது…
திருப்பதில சாகணும்னு ஒரு பிரார்த்தனையா…
ஒருவேளை என் சாவு கிழவி கையிலயா? தெர்ல!
கிழவியாவது ‘டிக்கெட்’ எடுக்கிறதாவது. இருக்கற ஆளுகளையெல்லாம் கரையேத்திட்டுதான் அவ வாயைப் பொளப்பா. நல்ல கிழங்கு கிழங்காக் கெடக்கு ஒடம்பு. முன்நெற்றிப் புடைப்பே உரிக்காத தேங்கா அம்சம். ரெண்டு காதிலும் தொங்கும் பாம்படம். எப்ப அறுந்து விழும் என்கிறாப்போல காதுத் துளைகள் ஏழு குட்டி போட்ட எருமையின் பால்க் காம்புகளாய்த் தொங்கின. (கிழவி ஆறுகுட்டி போட்டவள்.) கழுத்துப் பக்கம் கழலை வந்து தனித் தொங்கல். ரவிக்கை அணியாத வெண்சீலைக்குள் பெரிய பெரிய உருளைக் கிழங்குகள். வயிறா இது வீணைக் குடம்… வெள்ளைப் பரங்கி. லங்கோட்டை மீறியோடும் பின்பக்கப் பிதுங்கல்கள். நடக்கும்போது உடம்பே பாகங்களே தனித்தனியே யானை மணியாய் ஆடியது. உருகி வழிகிற மெழுகுவர்த்தி.
இந்த வம்சத்துக்கே கார் சரிப்படாது. ஆள் ஒவ்வொண்ணும் ரோடு போடுகிற தார்ப் பீப்பாய். பெரிய லாரி எடுத்து அத்தனை பேரையும் வாரிப் போட்டுக்கிட்டுப் போகலாம். என்ன, ஊர்விட்டு ஊர் எருமைகளை ஏற்றிப் போகிறாப்போல இருக்கும். அதுக்கென்ன பண்றது…
பாண்டித்துரையின் சம்சாரம் பாகீஸ்வரியம்மாள். கொள்ளிக் கட்டையைப் பாதில வெளிய இழுத்து அமத்தினாப்ல… அப்டி ஒரு நிறம். புஸ்ஸென்று அப்டியொரு மூச்சு. வெளிச்சத்திலேயே அவளைப் பாக்க ஐயம்பெருமாளுக்குப் பதறும். இருட்டில் அந்தாக்ல மூச்சே நின்னுரும். கழுத்திலும் மூக்கிலும் அவ போட்ட நகையில் வெங்கடாசலபதியாய்… நெடுமாலாய் நின்றாள். கொஞ்சம் வேகமாய் நடந்தால் அவளுக்கு மூச்சிறைக்கிறது. மூக்கில் இத்தாம் பெரிய மூக்குத்தி. காத்தை உள்ளிழுக்கத் துளை வேணாமா? மூச்சிறைக்காம என்ன செய்யும்?
ரொம்பக் கிண்டலெல்லா வேணா தம்பி. இனி இவகதான் உனக்குப் படியளக்கிற மவராசி. பண்ணையார்க் கணக்கு தனி. நேரத்துக்குச் சாப்பாடு, அவசர உதவி என்று வந்தால் 100க்கு போன் செய்யப்படாது. எசமானியைத் தனியே அணுகவும். அவ அம்மன் சன்னிதி ஜலதாரை போல இருந்தா உனக்கென்ன?
நீ சிட்டு மாதிரி சம்சாரம் வெச்சிருக்க… ஏன் பேசமாட்டே?
கழுத்தில் காதில் நகைகள் இல்லை. ஆனாலும் என்ன? பத்மினி கொள்ளை அழகுதான். அழகுன்னா என்ன? முகம் நிறைய பவுடரும் உடம்பு நிறைய நகையும் பளபளப்பான டிரஸ்சுமா? யார் சொன்னா? நாள் கிழமைகள்ல நம்மாளு… பத்மினி… எண்ணெய் தேச்சிக் குளிச்சிட்டு… ஒரு மேக்-அப் கிடையாது. ஒரு நகை கிடையாது – லேசான ஈரம். சீயக்காய் வாசனையோட வருமே, தலையில ஈரத்துண்டைச் சுத்திட்டு. அதில்லடே அழகு!
குளிச்சதுக்கும் அதுக்கும் உதடு நல்லா வெச்சி சுர்ர்ர்ருனு உள்ள இழுக்கச் சொல்லும்.
என்னாத்த இழுக்கறது? இதுக அமக்களம் எப்ப ஓய? எப்ப போயி நான் குடும்பத்தப் பாக்க?... பெருமூச்சு விட்டான்.
வயிறு பசித்தது. சரி, பண்ணையார் வீட்ல சாப்பிட்டுக்குவம்னு ஒருஇதுல அலட்சியமா வந்தாச்சி. உள்ளயிருந்து காய்கறிகள் வேகும் வாசனை… மசாலா தூக்குது. கோளி ஆடு இருக்குமா…
எவண்டாவன், சோத்துக்கே வளியக் காணம். கோளிவேற மச்சானுக்கு…
குளித்துவிட்டு வந்திருப்பாள். நான் ஊரோடு வந்த சேதியும் வேலை கிடைத்த சேதியும் அவளை எட்டியிருக்கும். அவ சிரிப்பும் அழுகையுமா மேலே சாய்ந்து கட்டிக் கொள்கிறாப்போல ஒரு காட்சி வந்தது. ஏல, நீ எப்ப கனவு காண்றியோ, உடனே ஏடாகூடமா ஏதாவது ஆயிருது… பாத்து. தலையை உதறிக் கொண்டான்.
இது உன் முதலாளி வீடு. அவங்களப் பத்தி நல்ல விதமா நாலு வார்த்தை நினைக்கண்டாமா?
இளசுகள் சிட்டுக்களாய் அலை பாய்கின்றன. பாண்டித்துரைக்கு ஒரு பொம்பளப் பிள்ளை. ஒரு பையன். பையனிடம் அம்மா ஜாடை. லீக்கோ உடம்புக்கும் அதுக்கும் சிரிச்சா டியூப் லைட் போட்டாப் போலிருந்தது. ஆளும் டியூப் லைட்டா என்னன்னு தெரில.
அவர்களையெல்லாம் ஊர்க் கோயில் திருவிழாக்களில் பாண்டித்துரையுடன் தூரப்பார்வையில் பார்த்திருக்கிறான். இத்தனை கிட்டத்தில் அறிந்து கொள்வது தனி அனுபவமாய் இருந்தது.
பத்மினிக்கும் ஆண்டாள் வாசனைப்பொடி வாங்கித் தர அப்போதே முடிவு செய்து விட்டான்.
என்ன செய்ய எதுவும் புரிபடவில்லை. இந்த மாதிரி சமயங்களில் அவனை மாதிரி டிரைவர்கள் காரில் சாய்ந்து கொண்டு சிகரெட் வலிக்கிறார்கள். அல்லது நக்கீரனோ தினத்தந்தியோ படிக்கிறார்கள். தினத்தந்திக்கு சிந்துபாத். நக்கீரனுக்கு வீரப்பன்…
ஓரத்தில் வெளியேயிருந்து வர்றாளுகள் கால் கழுவ குழாய். தண்ணீர் பாட்டிலை செக் பண்ணி நிரப்பிக் கொண்டான். நல்ல ருசியாய் இருந்தது தண்ணீர். இருந்த பசிக்குக் குளிரக் குளிரக் குடித்தான். வேற வழி?
கேட் தாண்டி உள்ப்பக்கம் நல்ல விஸ்தீரணம். திண்ணையெடுத்த உள்ப் பகுதியில் முன்னோர் படம். மீசையும் நூலாம்படையுமாய். எது மீசை, எது நூலாம்படை தெரியாத குழப்பத்தில் இருந்தது. ஓரத்தில் நெல் மூட்டைகள் ஒரு புறம். உரம், தவிடு என்று உள்ரூம்புகளிலும் நெடுக அடுக்கிக் கிடந்தன. ஒருபுறம் கோத்ரெஜ் பீரோ… பேன் கீழே ஒரு சாய்வு நாற்காலி. அங்கே பாண்டித்துரையோ, கொழுக்கட்டையோ உட்கார்வர். மனுச மக்கள் வந்தா உக்கார கூடவே சில நாற்காலிகள். ஓரத்தில் மண்பானைத் தண்ணீர். சுத்திவர நாற்புறமும் இடைவெளி விட்டு பின்கட்டுக்கு வழி. தென்னை மரங்கள் தெரு விளக்குகள் போல விட்டு விட்டு நிற்கின்றன.
உள்ளேயே நெல்லடிக்கலாமாய் இருந்தது. ஒரு ஓரத்தில் உரல்கள் இரண்டும், பக்கத்தில் யானையின் அஞ்சாம்கால் என உலக்கைகளும். (துதிக்கை சேத்தா ஆறு காலப்போவ்!)
சதா யாராவது உள்ளே வருவதும் வெளியே போவதுமாய் இருக்கிறார்கள். இருந்தாலும் எவனாவது அவனைக் கண்டுக்கிட்டாத்தானே? குருவியிரைச்சலாய்க் கிடந்தது உள்ளே. தானியங்களுக்கு குருவிகள் உத்திரத்தில் கூடு கட்டி அமர்க்களமாய்க் குடும்பம் நடத்துகின்றன. ஆ, அதுங்களுக்குப் பசிப் பிரச்னையில்லை.
குருவியிரைச்சலை மீறி வீட்டு சொந்தக்காரர்கள் சத்தம்…
நீர் வசதி, நில வசதி என்று சும்மாவா சொல்கிறார்கள்…
வீட்டு வாசலில் பார். எப்பவோ அண்ணாச்சிக்கு யாரோ போட்ட ஆளுயர மாலை சருகாகிக் கிடக்கிறது. அவரே துட்டு கொடுத்து வாங்கி, ஆளை செட்டப் பண்ணிப் போடச் சொல்லியிருப்பாரு. எப்ப? தேர்தல் சமயத்தில்… தோத்துப் போச்சு.
எப்பவும் அவர் பயணம் போகும் வண்டி எங்கே தெரியவில்லை. வெளியே போயிருக்கலாம். நல்ல கம்பீரமான மாடுகள். கிட்டபோகவே பயந்து கெடக்கும். தலை சிலிர்த்து கண் விரித்துப் பெரிய பெரிய மூச்சுகளாய் வெளியேற்றும். வண்டிகட்டுகிற வேலுச்சாமிதான் அன்னிக்கு பட்டணத்துக்கு முதலாளி கூட வந்தது.
கார் வாங்க அவரு முடிவு செஞ்ச அந்த சமயத்தில் முதலாளி அறியாமல் ஒரு முறை இவனை முறைத்தான் பார்… ஐயத்துக்கு பாத்ரூம் அவசரமாயிட்டது. நல்லவேளை அவன் ஆளைக் காணவில்லை இப்போது.
தன் உடைகளைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டான். ரியர்வியூ கண்ணாடி பார்த்து இன்னொருமுறை தலை சீவிக் கொண்டான். மணியென்ன என்று தெரிந்து கொள்ள நினைத்தான். அதற்குள் ஆ, அந்த மகத்தான கணம் நிகழ்ந்தது.
“ஏம்ப்பா சாப்ட்டியா ஏதாச்சும்?” என்று கேட்டாள் எசமானி. இல்ல, என்று அவசரமாய்த் தலையாட்டினான். சம்பிரதாயத்துக்குக் கேட்டுவிட்டு உள்ள போயிருவாளோ, என்று பயந்தான்…
அடடா, கேணப் பொடிமட்டை… இப்ப பாத்து தண்ணி குடிச்சியே…
அந்த அம்மாளின் சிரிப்பு எத்தனை இதமாய் இருந்தது அந்தக் கணத்தில், ஈர மனசுக்கரி… ஸ்பெல்லிங் மிஸ்டேக் மன்னிக்க – ஈர மனசுக்காரி.
தனியே உட்கார வைத்து தையல் இலையில் சோறு பரிமாறினாள். சிரித்த அரிசிச் சோறு. மேலே பல்லின் ஈறெடுத்தாப்போல குழம்பு. ஆவி மணக்க ஒரு வாசனை. உள்ளே குழித்துக் குளமெடுத்தான். தொட்டுக் கொள்ள வெஞ்சனம் வேறு.
”நல்லாச் சாப்பிடு” என்றாள் பாகீஸ்வரி.
மவராசியுடன் நாலு வார்த்தை பேச ஆசையாய் இருந்தது. அருகில் இன்னும் இதமாய் இருந்தாள். ”நான் பக்கத்தூருதாங்மா மேலப்புதூர்…” தலையாட்டிச் சிரித்தாள். “எம்பேரு ஐயம்பெருமாள்.” அதற்கும் புன்னகையுடன் தலையாட்டினாள்.
திடீரென்று புரையேறியது. சட்டென்று வித்தியாசம் பார்க்காமல் தலையைத் தட்டினாள். “யாரோ நினைச்சிக்கறாக” என்றாள்.
ஆ, பத்மினி!... படத்தில் என்னைக் காட்டி ‘ப்-பா’ என்னும் என் குழந்தை தனலெட்சுமி. பாவம், என்ன சாப்பிட்டாங்களோ? கண்ணீர் வந்தது.
“என்னப்பா பாதில எழுந்திட்டே?”
“போதுந் தாயி” என்று கை கழுவினான்.
***
பக்கத்து தருமன் கோவில் வரை போக ஒருவழியாய் அவர்கள் முடிவெடுக்கிறார்கள். தருமன்மலை சிறு மேடு. ரெண்டு பக்கமும் மரமெடுத்த நிழல் சாலை. குளுமை. குரங்குகளின் ஆனந்த பூமி. பெரும் மலைக்காட்டின் துவக்கம் அது.
அங்கே அவர்கள் பலமுறை போயிருந்தாலும் அது வண்டி கட்டிப் போன நாட்கள். கூட்டு வண்டியில்லா. சைடுல பாக்க முடியாது. இருந்த மரக்கூட்டத்துக்கு உள்ளயிருந்து பாக்க இன்னும் இருட்டிக் கெடக்கும். பாண்டித்துரை வம்சம் தொறந்தாப்ல வண்டி கட்டிப் போக முடியுமா?
மூடிய வண்டில தலை இடிக்க இடிக்கப் போகணும். போறவுக வாரவுக பார்க்க முடியாதபடிக்கு பின்வாச வேற திரைச்சீலைத் துணியால் மூடிக் கெடக்கும். நெல் அவிச்ச சருவத்தைச் சரிச்சாப்போல. வைக்கல் பரப்பி இடம் தோது பண்ணி, அடைகாக்கிற கோழியாட்டம் உக்கார்ந்துகிட்டே போகலாம். இறங்கு முன்னால் பின்பக்கமெல்லாம் சூடாயி புண்ணாயிரும்.
முதல் கார்ப்பயணம். இருந்த கூட்டம் பார்த்து பாண்டித்துரை ஒதுங்கிக் கொண்டார். அவனிடம் வந்து “தம்பி பாத்துக் கோளாறாக் கூட்டிட்டுப் போயி, கொண்ட்டுவிடணும்…” என்றார் புகையிலையை எடுத்துக் கொண்டே. லேசான புன்னகையுடன் தலையாட்டினான். மனுசன் எப்படியாள் தெரியவில்லை… பணக்காரனே எப்ப என்ன நிலவரத்துல இருப்பான்னு சொல்ல முடியறதில்லை…

இருக்கட்டும். நமக்கும் முட்டாப் பயக தானே வேண்டியிருக்கு. வேற யாரு நமக்கு வேலை குடுப்பா.
முதலாளியின் பையன் பெயர் பூபதி. அவந்தான் முன் இருக்கையில் அமர்ந்தபடி கூட வந்தது.
“இதுல ஸ்டீரியோ இருக்கா?”
“உங்கய்யாட்டச் சொல்லி வாங்கிப் போடு” என்றான் ஐயம்பெருமாள்.
“என்னண்ணே கொரங்கையே காணம்?”
அதான் நீ வாரியே, என்று நினைத்துக் கொண்டான்.
பூபதி என்னென்னமோ பேசிக் கொண்டே வருகிறான். இவனுக்கானால் அலுப்பு ஒரு பக்கம். இராப்பூராவும் வண்டியெடுத்து வந்திருக்கிறான். இன்னும் வீட்டைப் பார்க்கவில்லை. பத்மினியைப் பார்க்க ஏக்கமாய்க் கிடந்தது. அட, முந்திதான் அத்தனை தூரத்தில் இருந்தம். இப்ப இத்தனை கிட்டத்தில் இருந்தும் பார்க்க முடியாதது துக்கமாய் இருந்தது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை… என்பார்கள். இது கைக்கே எட்டவில்லை. பிறகுதானே வாய்க்கு எட்ட!
பின்பக்கம் முழுக்க பொம்பளையாளுகள். என்னென்னமோ கதை பேச அவர்களுக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன. பாகீஸ்வரி சின்னஞ் சிறிசுகளின் இரைச்சலைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டே வருகிறாள்.
எதிரே இன்னொரு வில் வண்டி வந்தது. ஒதுங்கி வழியொதுக்கிக் கொடுத்தான். அதைப் பார்க்க பெண்டுகள் ஆளாளுக்குச் சிரிப்பு. மூடிய திரைச்சீலை உள்ளே யார் என்று அவர்களுக்குத் தெரியும்…
அவனுக்கும் தெரியும். அது மனோன்மணியின் வண்டி. ஊரே பேர்கேட்கவே பரபரத்துச் சிலிர்த்துக் கொள்கிற மனோன்மணி. ஆண்களில் அவளை அறியாதவர் யார்? அவனாலேயே ஆசையக் கட்டுப்படுத்த முடியவில்லை. வண்டி தாண்டிச் செல்கையில் சற்றே திரைச்சீலை விலக…
ஆஹாவென்றிருந்தது அந்தக் கணம்!
*
(வெள்ளி தோறும் தொடர்கிறேன்.)
storysankar@gmail.com
97899 87842

Thursday, November 15, 2018



தொடர்கதை / எஸ்.சங்கரநாராயணன்
முத்த யுத்தம்
3
வேலை இருந்த நாளிலேயே நித்தியப்பாடுகள் சிரமந்தான். ஊர் ஞாபகமும் தனிமையும் வெயிலாக உள்ளே வாட்டும் அவனை. அன்பான, அவன்மேல் உயிரான மனைவி. சட்டென்று உணர்ச்சி காட்டிவிடும் முகம். அழும். உடனே குழந்தையாய் மலர்ந்து சிரிக்கும் முகம். சிற்றுடம்பு. கவிதை. தொட்டணைத்தால் கொடியென வளைவாள். கூச்ச சுபாவம் கடைசிவரை அவளுக்கு மாறவே இல்லை என்பதே சுவாரஸ்யமாய் இருந்தது.
கிளர்ச்சியும் பரபரப்புமாய் வந்திருந்தான் ஐயம்பெருமாள். அவளை வாசனை பிடித்து யப்பா, எத்தனை காலமாயிற்று. மனசில் அவளது பெண்மையும் உதட்டு சூடும் கற்பனை லகரியைக் கிளர்த்திப் பரத்தியிருந்தன. உடலெங்கும் ஒரு முறுக்கம், ஜிவ்வென்று ஒரு சூடு வந்திருந்தது. திருவிழாவுக்கு முன் அம்மன் கோவிலில் கொடியேத்தினாப்போல. ஊர் நெருங்கவே தன்னைப்போல பாட்டுக்குக் குறைவில்லை…
எல்லை வரும்வரை தத்துவப் பாடல்கள் – மயக்கமா தயக்கமா… மனதிலே குழப்பமா? – நிலவே என்னிடம் நெருங்காதே… ஊர் நெருங்க நெருங்க தானறியாமல் காதல் பாடல்கள். சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ? – ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை… இடையே டக்கர டக்கர என்று தாளத்தை வேறு வாயிலேயே அடித்தான்.
வீட்டுக்கு வந்தால், ஆ… பூட்டிக் கிடந்தது. சாவி பக்கத்து வீட்டுக் கிழவியிடம் தந்துவிட்டுப் போயிருந்தாள். இருந்தும், அவள் இல்லாத வீடா? அது ஒரு கேடா? (நானே என் ‘சாவி’யை வெச்சிக்கிட்டு திண்டாடறேன்.) உள்ளே நுழைந்தபோது மனசில் சோக கீதம்… நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார்… காதலுக்கு வாத்தியார். சோகம்னா சிவாஜி! “அடச்சீ!” என்று தும்மலாய்ப் பாட்டை உதறினான். உள்க்கொடியில் அவளது புடவை. ஜம்பர். உள்ளாடை. ஒரு கொடியில் இரு மலர்கள் மலர்ந்ததம்மா, மலர்ந்ததம்மா… குழந்தையின் ஜெட்டி… என்று உலர்ந்து கிடந்தன. பைத்தியக்காரன் மாதிரி உள்ளே அவன் பெண்டாட்டியைத் தேடினான்.
சாப்பாட்டுக்கு என மூணு மாசமாய்ப் பணம் அனுப்ப முடியவேயில்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தனியே அவள் எப்படிச் சமாளித்தாளோ… அழுகை வந்தது. உனக்கெல்லாம் குடும்பம் லாயக் படாது நாயே…
ரொம்ப நேரம் தங்க முடியாது. திரும்பப் பெரியகுளம் போய்விட்டு – வண்டியை ஒப்படைத்துவிட்டு, தபாலாபீஸ் போய் பத்மினிக்கு ஒரு தந்தி அடிச்சி வரச் சொல்லணும். எப்படியோ பத்தைந்நூறு தேத்திக்கொண்டு வந்திருந்தான். சாயல்குடியில் மூனாபானா கடையில் போன் இருக்கிறது. சரக்கு எப்படியோ ஆள் தன்மையான மனுசன். கூப்ட்டு விடுவாரு. அட, பரவால்லன்னு டிரங்க்கால் போட்டுப் பேசுவம்.
அட, சொன்னாப்ல இங்கருந்தே பேசலாம்ல? ஆளைப் பாக்கத்தான் முடியாது. ரெண்டு வார்த்தை ஆசையாய்ப் பேசுவம்…
மழை விழுந்த செடியாக மனசு சிலிர்த்தது… காதோடுதான் நான் பேசுவேன்!
பலசரக்குக் கடையில் இருந்து நாலாவது அஞ்சாவது வீடு மாமனார் வீடு. கால் எடுத்தான்…
”அலோ மூனா பானா…” என்று செட்டியார் பரமசிவத்தின் குரல். நெற்றியில் சிமெண்ட்டு ரோடு போட்டாப்ல செமத்தியான விபூதி குங்குமம் எப்போதும் அணிந்திருப்பார். குரலிலேயே விபூதி மணத்தது.
“அண்ணாச்சி, நான் பெருமாள். ஐயம்பெருமாள்…”
“எலேய் எங்கருந்து பட்டணத்துலேர்ந்தா?”
”இல்லண்ணே, நம்பூர்லேந்துதான்… மேலப்புதூர்.”
“மூணு நாலு மாசமா ஒன்ட்டேர்ந்து தகவலே இல்லைன்னு மவராசி இங்க வந்து கண்ணைக் கசக்கிட்டுக் கெடக்கா… என்ன நெலவரம் ஏதுன்னு எழுதறதில்லையா?”
சட்டென்று கண்ணீர் வந்தது. “எல்லாம் சரியா வந்துரும்… அண்ணாச்சி, நம்ப பாண்டித்துரை அண்ணாச்சி இல்ல? பெரியகுளம்? தேர்தல்ல நின்னு தோத்துப் போனாரே.. அவுக கார் வாங்கீர்க்காங்க. நானே டிரைவரா அவர்ட்ட சேந்தாச்சி…”
“ரொம்ப சந்தோசம். உங்க மாமனார் ஒரு ஆயிர்ரூவாக்கு மேல் கணக்கை நிப்பாட்டியிருக்கார். வந்து முடிச்சிட்டுப் போ. வெச்சிறவா…” என்றார். பகீரென்றது.
”நம்ம வீட்ல கூப்பிட முடியுங்களா?” என்று எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.
“இப்பதான் சரோஜாவோட குளிக்கப் போறதைப் பாத்தேன்…” என்றார் அவர்.
”சரிங்கண்ணாச்சி, வந்தா தகவல் சொல்லுங்க. நான் வண்டியை ஒப்படைச்சிட்டு, மறுபடியும் மேலப்புதூர் வரேன். அவளையும் குழந்தையையும் மாமாவைக் கொண்டுவந்து விடச் சொல்லுங்க” என்று போனை வைத்தான்.
இன்னிக்கு அவளைப் பார்க்க வாய்க்குமா என்றே தெரியலியேடா? இருந்த ஆத்திரத்தில் தலையை வறட் வறட்டென்று சொறிந்தான். விளக்குப் பிறை பக்கம் அவளும் அவனுமாய் எடுத்துக் கொண்ட படம். கல்யாண சமயத்தில் திருவிழாவில் எடுத்தது. கலர்ப்படம். அதென்னமோ இங்க கலர்ப்படம் எடுத்துக் கழுவினா ஒரு சாயப்பொடிக் கலர்தான் வருது. பட்டணத்துல படம் எடுத்தா அதன் அம்சமே தனிதான்…
மஞ்சள் பூசியிருந்தாள். படத்திலும் தனியே அது தெரிந்தது. முகத்துப் பவுடருக்கும் அவ உடம்புக் கருப்புக்கும் மஞ்சளுக்கும் ஒரு இளம்பச்சை, மாம்பழக்கலர். காலை வெயிலின் மினுமினுப்பு. ஹ… என்று மூச்சு விட்டான். தாபம் வாட்டியது. ரெண்டுவரி எழுதிப் போடாததுக்கு இத்தாம் பெரிய தண்டனையா? பசி பொறுக்காத பெண் அவள். கைக்குழந்தை தனம் வேறு சுமையாய். பணம் இல்லாவிட்டால் அதற்கு எப்படிப் பாடு பார்ப்பது? தனம் கைக்கு கனம், என்றாகிவிடும்.
எத்தனை கஷ்டப்பட்டாளோ? இப்பக்கூட வண்டியெடுத்தான்… நேராக் கிளம்பி வந்தாச்சி. அவளுக்கு ஒரு வளைவி (வளையல்) வாங்கி வரலாம்னு கூடத் தோணல்லியே… புத்திக்கு எட்டவேயில்லையே? குழந்தை பத்தி ஞாபகமேயில்லை!
போன கடிதத்தில் எழுதியிருந்தாள். குழந்தை நிறையப் பேசுகிறாள். முன்ன நீங்க போனப்ப அம்மாதானே பேசினாள். இப்ப அ-ப்-பா… என்று நிறுத்தி நிதானித்து வருகிறது. போட்டோவைக் காட்டி என் முகத்தைத் திருப்பித் திருப்பி “-ப் பா” என்கிறாள்.
இருந்த உற்சாகத்துக்குத் தனை மறந்து வண்டியோட்டி… வண்டி ஒன்வேயில் நுழைந்து போலிசில் மாட்டியது. இவன்ட்ட துட்டு கிடையாது. முதலாளி மவராசன் தெண்டங் கட்டினார்… “ஏண்டா, அவசரம். ஒன்வேல புகுருன்னு நான் சொன்னனா?” என்றார் கடுப்பாக. அவர் தொழிலில் நொடித்து கிரெடிட் கார்டில் ஏகப்பட்ட கடன். ஆளை போனில் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரன்கள் கிரெடிட் கார்டில் லஞ்சம் வாங்கினால்தான் என்ன?
நேரமாகி விட்டது. குளித்துக் கிளித்துக் கிளம்புவம், என்று வண்டியை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டுக் குளிக்கப் போனான். பக்கத்து வீட்டு இசக்கிக் கிழவிதான் கேட்டது. “என்னல வண்டில வந்ததுதான் வந்தே, ஒன் சம்சாரத்தையும் ஒரு எட்டு அழைச்சிக்கிட்டு வந்திருக்கலாம்ல?”
“ஐய மரமண்டைல உறைக்கலியே ஆத்தா” என்றான் ஆத்தமாட்டாமல். உண்மையில் மாமாவை அவன் எட்டிப் பார்த்திருக்க வேண்டும். தனியே இவள் சமாளிக்க முடியாமல் அங்கே இருப்பாள் என்பதை ஏன் யூகிக்க முடியவில்லை அவனால்? அட, அங்க அவ இல்லன்னாக் கூட வாற வழிதானே சாயல்குடி? அவன் கார் எடுத்து வருகிறதை மாமா பாப்பாருல்ல?
”ஏல என்னிய ஒர் ரவுண்டு கூட்டிட்டுப் போயேன்…” என்று கெஞ்சினாள் கிழவி. அதும் இவளைக் கூட்டிட்டுப் போயி ஆலமரத்து இட்லிக் கடையில் விட்டா, ஒரு இட்லி கடன் வாங்கித் தின்னும்… அதுக்கு ஓசிச் சவாரி வேற ஊர் மெச்ச…
காது கேளாத மாதிரி குளிக்கப் போனான். பம்பு செட் குளியல் என்றாலே தனி எடுப்புதான். கிணற்றில் இறங்கிக் குளிக்க பயம். எட்டிப் பார்க்கவே உதறும் அவனுக்கு. தண்ணியைக் கண்டால் பத்மினிக்கு உற்சாகம் கண்டுவிடும். சுற்றிலும் யாருமில்லை என்று பார்த்துக் கொண்டு புடவையை ஏற்றிக் கட்டிக் கொண்டு பிளவுசை அவிழ்ப்பாள். பளீரென்ற வெண்தோள்கள். மஞ்சள் மாம்பழம். “யாராவது வந்தா தாக்கல் சொல்லணும் நீங்க…” என்றபடியே கிணற்றில் ஆனந்தமாய் உள்ளே நீஞ்சுவாள். நீர்த்தேவதை. மச்சக்கன்னி.
”அத்தான் கீழ வரீகளா?” என்பாள் வாயில் நீரை ஊற்றுப்போலக் கொப்பளித்தபடியே.
”நான் கீழவந்தா ஆளுக வாரத போறத யார் பாக்கறது?” என்று சமாளிப்பான். கண்ணை எடுக்காமல் அவளையே பார்ப்பான். அக்குள் முடிகளில் பனித்துளியாய் நீர்ஜாலம். சே நீச்சல் கத்துக்கிட்டிருக்கலாம். சினிமாவில் முங்கு நீச்சலில் போய் என்னவெல்லாம் செய்கிறார்கள்.
”மாப்ளோய் என்ன வீட்டுப் பக்கம் கார் நிக்குது?” என்று உற்சாகக் குரல் கேட்டது. சிவனாண்டி. “ஆமாமா” என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
“கார் சூப்பரா இருக்கே பெருமாளு… பெரியாளாயிட்டே”
“அதெல்லா இல்ல” என்றான் அடக்கத்துடன். அவனுக்கு சிவனாண்டி மீது அன்பு பெருக்கெடுத்தோடியது.
“இத நாம அவசியம் கொண்டாடணும் மாப்ள. சாராயம் வாங்கிக் குடு” என்றான் சிவனாண்டி. கபடில கிடுக்கிப் பிடி போட்டாப்ல ஐயம்பெருமாளுக்குக் கண் இருண்டது. எந்த சாமி எந்தப் பல்லக்கில் ஏறினால் என்ன… சிவனாண்டிக்கு யாராவது சாராயம் வாங்கிக் குடுத்தாச் சரி.
அவனிடமிருந்து பிரிந்து வருவதற்குள் வம்பாடு பட வேண்டியதாப் போச்சு!
பட்டணத்தில் அசட்டு நிறத்தில் ஒரு தண்ணீர். தினப்படி ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். ரேஷன் கடை மண்ணெண்ணெய் போல. தினப்படி ஒவ்வொரு வாடை வேறு. அதும் அரை பக்கெட்டில் குளியல். ஆசை தீர, ஜெட்டிக்குள் கைவிட்டு நல்லா சோப் போட்டு நுரைக்க நுரைக்கக் குளித்தான். (ஆ அருமை பத்மினி!) இருந்த அழுக்கு உடம்பு வெளிர் வாங்கி சோப்பே கருப்பாகி விட்டது.
அலுப்பு சற்று அடங்கினாப் போலிருந்தது. கண்கள் எரிந்தன. அது பாதகமில்லை. டிரைவர் வேலையில் இராப் பூராவும் வண்டியோட்டி வர்றதுதான். பாட்டு வந்தது வாயில். எலேய் நேரமாயிட்டது…
***
மீண்டும் காரை எடுத்தபோது காருக்கடியில் இருந்து நாய் ஒன்று எழுந்து ஓடியது. அம்மணமாய்க் குழந்தைகள் வேடிக்கை பார்த்தன. “மாமா பொப்பாய்ங் அடிங்க…” நேயர் விருப்பம். புஸ்ஸென்றதே தவிர, அமுங்கி சப்பளித்து அப்படியே நின்றது. ஹாரன் ரப்பரில் கீறல்.
அதை இந்த மணி புதுசாய் மாற்றியிருக்கக் கூடாதா?
ஒரு நம்பிக்கையுடன் இப்ப சப்தம் வராதா என்று ஹாரனை அமுக்கினான். (அத்தான் லைட்டை அணைச்சிருங்க!)
பெரியகுளம் எட்டு ஒம்பது கிலோமீட்டர். முதலாளி வீட்டில் காத்திருப்பார்கள். அதிகாலை எப்படியும் வருவதாய்ச் சொல்லியிருந்தான். காலையிலேயே எதிர்பார்த்துக் காத்திருக்கலாம் அவர்கள்…
பாண்டித்துரை பெரிய மனுசன். சட்டுனு கோவம் வந்துட்டா என்ன பண்றது? மணி எப்படியும் ஒம்பது பத்து இருக்கும். பத்மினியைப் பார்க்காததில் கொஞ்சம் ஆடித்தான் போனான். சரியென்று வேகமெடுத்துப் போனான். நாய் ஒன்று புழுதி எழும்புதலைப் பார்த்துத் திட்டியபடி கூட ஓடி வந்தது. சின்ன ஊர். எசகு பிசகான வழித்தடங்கள். வண்டிப்பாதைகள். நடுவே மேடும் ரெண்டு பக்கமும் பள்ளமெடுத்த சீரற்ற சாலைகள். வண்டி ’சாமி-சப்பரமாய்’ ஆடியது.
ஆச்சி… இன்னும் ஒரு பர்லாங் எட்டினா பஸ்சுகள் நடமாட்டம் உள்ள பெரிய ரஸ்தாவை எட்டிறலாம். ஒரு மணிக்கு ஒரு பஸ் என்கிறாப்போல இப்பவும் ஊருக்குள் பஸ் வருதுதான். இந்தப் புழுதிக்காட்ல எப்படித்தான் வர்றானோ. பொறுமைசாலிதான் டிரைவர் மவராசன். கீழ இறங்கும்போது மாட்டுக்குத் தவிடு வெச்சாப்போல புழுதில குளிச்சிருப்பான்!...
அறுவடை சமயத்துக்கு வைக்கோல் பாரம் ஏற்றிய வண்டிகள். ரஸ்தாவில் நடமாட்டம் இருந்தாலும், மாடுகள் விலாத் தெரிய சோனியாய்த்தான் இருந்தன. வண்டியோட்டிகள் நல்ல சண்டியராய் கிங்கரர்களாய் இருந்தார்கள். ஒவ்வொருத்தனின் மீசை வளைவும் ஒவ்வொரு விதம். மீசையும் கிருதாவையும் சேர்த்து வளர்த்து ஒரு ரகம் வேறு இந்த லெச்சணத்தில். பேரும் ஊர்ச்சாமி பேரு… ஐயனார், சொடலைமாடன். பேராடா இதெல்லாம்?... ஐயம்பெருமாள்! சூப்பர்லா?
ஸ்டீயரிங் நடுவே ஹாரன் ஒலி அழுத்தமாய் இருந்தது. ஒதுங்கி வழிவிட்ட வண்டியிலிருந்து ஒரு குரல் “ஆரு, நம்ப பெருமாளா?” என்று கேட்டது. அவன்கூடப் படிச்ச சிகாமணியா? வெளியே எட்டிப் பார்த்தான். அவன்தான். கைகாட்டிவிட்டுப் போனான்.
சிகாமணி எட்டாங்கிளாசில் அவனைவிட நல்ல மார்க். என்ன பிரயோஜனம். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு வாங்கினான். ஆனாலும் என்ன?... நம்ம ஐயம் இப்ப சூப்பர் ஸ்டாருல்லா?
பாண்டித்துரை வீட்டில் தெரு முக்கில் கார் வரும்போதே கண்டுபிடித்து விட்டார்கள். வீட்டுக் குழந்தைகள் கும்மாளமிட்டுக் கொக்கரித்தன. பொம்பளையாளுகள் புதுசு அணிந்து தயாராய் நின்றிருந்தார்கள். அமோகமாய் வரவேற்கப்படுவதைப் பார்க்க தனி உற்சாகம் அவனுக்கு.
புது மாப்பிள்ளையாய்த் தன்னை உணர்ந்தான். ஆரத்தி எடுக்கிற அமர்க்களம் வேறு. இறங்கினான் புன்னகையுடன். நான் கேட்டனா? இதெல்லாம் எனக்குப் பிடிக்காது…
“தள்ளி நில்லு. காரை மறைச்சிக்கிட்டு நிக்கிறியே திருஷ்டி பொம்மை மாதிரி…” என்றார் பாண்டித்துரை.
பதறி ஒதுங்கி நின்றான். காருக்கு மாத்திரம் ஆரத்தி எடுத்தார்கள்!
*
(வெள்ளி தோறும் தொடர்கிறேன்.)
storysankar@gmail.com - 91 97899 87842

Thursday, November 8, 2018


எஸ்.சங்கரநாராயணன்
முத்த யுத்தம்

2

பெரியகுளம் பன்னீர்ப்புகையிலை பாண்டித்துரை ஒருமுறை அவனை நன்றாகப் பார்த்தார். அவர் பார்வையில் இருந்து, வேலை கிடைக்கும் கிடைக்காது என்று சொல்ல முடியாதிருந்தது. அவனுக்கு உள்ளூர வியர்த்தது. அவன் வாழ்க்கையே அவர் நாக்கில் வெளவால் போலத் தொங்கிக் கொண்டிருக்கிறது. பொத்தென்று கீழே விழுந்து விடுவோமோ என்று பயமாய் இருந்தது அவனுக்கு. எதற்கு இந்த சஸ்பென்ஸ், ஏன் இந்த மெளனம் புரியவில்லை. கட்டுப்பாட்டை மீறி ஓடும் கார் போல அவன் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது.
“வேணாம்” என்றார் பி.பி.பி. பொத்தென்று விழுந்தது வெளவால்.
“வேணாமா?” என்று எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.
“கார் வேணாம்” என்றார் அவர்.
அப்ப டிரைவர் மட்டுமாவது வெச்சிக்கப்படாதா!...
“அட இதைவிட்டா உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் அமையாது முதலாளி…” (அவருக்கா அவனுக்கா?) என்றான் மணி பதறி. “புத்தம் புது வண்டி. விட்டா இதுமாதிரி உங்களுக்கு…”
ஐயம் வண்டியைப் பார்த்தான். பதிவு எண்ணைப் பார்த்தாலே பாடாவதி என்று தெரிந்தது. ஆனா மாட்டு வண்டிக்கு இது எவ்வளவோ மேல்தான். (புது எடுப்பில், ஆனால் அதே வேகந்தான் போகும்.) வண்டியைப் பத்தி எதுவும் தெரியாத, வண்டியின் தேவை பத்தி எதுவும் தெரியாத… துட்டு வெச்சிட்டே என்ன பண்றதுன்னு தெரியாது அலையிற பார்ட்டி இது. புத்தியும் வாழைமட்டை. எப்பவும் இதுமாதிரி மாட்டிவிடுமா என்ன?
மெல்ல மூச்சு வந்தது ஐயத்துக்கு. அவன் மணி பேசுவதைப் பார்த்தான். புன்னகை பூத்த உற்சாக முகம். நம்பிக்கை… ஆ, அது ரொம்ப முக்கியமாச்சே! வில்லாதி வில்லனையும் வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை.
வெளவால் எழுந்து வந்து மணியின் நாக்கில் அமர்ந்து கொண்டது.
என்ன பெரிய பட்டணம். அது போட்டி பொறாமை நிறைந்தது. தெருநடுவே நிறைத்துக்கொண்டு வழியும் சாக்கடைத் தண்ணீர் போல அது டிரைவர்களால் நிரம்பி வழிகிறது. நம்மூரானால் சுத்து வட்டாரத்தில் வேறு கார் கிடையாது. கார் டிரைவர்னா ஒரு தனி எடுப்பு. தனி அந்தஸ்து. அதன் கம்பீரம் தனிதானே? வெளவாலுக்கு இதயமே படபடக்க ஆரம்பித்து விட்டது.
“அததுக்கு வேளை வரணுங்க முதலாளி. பாருங்க நல்ல சகுனம். இந்தக் காருக்கே வந்தாப்ல நீங்களும் வந்து சேந்துருக்கீங்க” என்றான் மணி.
”நானும்…” என்றான் ஐயம்பெருமாள்.
அவர் இப்போது திரும்பி ஐயத்தைப் பார்த்தார். ஐயத்தை ஐயத்துடன் பார்த்தார். திரும்ப அவரது யோசனை உள்ளே உருள ஆரம்பித்தது. உருளைக்கு அடியில் அவன். அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது.
பொதுவா யார் இப்படிப் பார்த்தாலும் அவனுக்கு ஒண்ணுக்கு நெருக்கி விடுகிறது.
மணி அவனைப் பார்த்தான். மணியின் எதிர்காலம் வெளவால் போல இப்போது ஐயம்பெருமாள் தோள் மேல். நாய்ப்பயல். ஆனா டிரைவர்.
மணியைவிட அவனுக்கு காரின் நுணுக்கம் எல்லாம் தெரியும். அதிக விவர விவகாரந் தெரியும், என இந்த நாய் பி.பி.பி. நம்புகிறாப் போலப் பட்டது. அது மணிக்குப் பிடிக்கவில்லை.
பி.பி.பி., “ச்-” என்று தலையாட்டி இரண்டு வெளவால்களையும் உதறினார், பெண்கள் தொங்கட்டான்களை உதறுகிறது போல.
“என்ன சார்?” என்றன வெளவால்கள்.
“சின்ன ஊரு. எட்டினாப்ல எல்லை. தொட்டாப்ல சுத்தி வளைச்சி கிராமம். தோட்டம் துரவு. நல்ல ரோடுகூடக் கிடையாது… அவனவன் அங்க பஸ்சு விடவே அஞ்சறான்” என்றார் பி.பி.பி.
”ஆமங்க முதலாளி” என்று மணி ஆமோதித்தான். வாட்டிஸ் திஸ்? ஐயத்துக்கு ஆச்சரியமாய் இருந்தது. “ஆனா அப்படியாப்பட்ட ஊர்ல ஒரு அமையஞ்சமயம்னா நீங்க என்ன பண்ண முடியும்? நீங்க நினைச்சாப்ல ஒரு இடம் கிளம்ப முடியுமா? பஸ்சுக்குக் காத்திருக்கணும். அது எதுக்கு? உங்க மாதிரி ஆளுங்க காத்திருக்கிறதா?” என்று மணி ஸ்டீயரிங்கைத் திருப்பினான்.
“ஆமங்க” என்று இளித்தான் ஐயம். அவர் முகத்தைப் பார்த்தால் பேரம் படியும் போல்த்தான் இருந்தது. அட, அவசரப்பட்டு இந்தாளை அறிவாளின்னு தப்பா எடை போட இருந்தேன்! “வண்டில டங்கு டங்குனு தலை இடிக்கப் போகணும். எப்ப மாட்டைப் பூட்டி எப்ப போயிச்சேர? வீட்லயே ஒரு எமர்ஜென்சி… ஆசுபத்திரின்னு கிளம்பறீங்க…”
“என்னப்பா வண்டி வாங்குமுன்னயே ஆஸ்பத்திரிங்கறே?” என்றார் பண்ணை இடக்காக. அதை வெகுவாக ரசித்துச் சிரித்தான் மணி.
“நல்லா கண்டிஷன் பண்ணி வெச்சிருக்கேன். ஒரு ரவுண்டு எடுங்க. பெருமாளு, சாரைக் கூட்டி உக்கார வெச்சிக்கிட்டு எட்டு போட்டு காமி…”
பெருமாள் எச்சிலைக் கூட்டி விழுங்கினான். அவன் கணக்கில் வீக்.
நல்லவேளை அதை அவர் சட்டை பண்ணவில்லை. “மணி, டிரைவர் எப்படி?” என்று கேட்டார். இப்போது மணி ஒரு தோரணையுடன் பார்த்தான் இவனை. பன்னாடை, குளிச்சிட்டு துன்னூரு கின்னூரு பூசி கொஞ்சம் அம்சமா வந்திருக்கப்படாதா?
மீண்டும் ஐயத்துக்கு ஒண்ணுக்கு நெருக்கியது.
”நம்ம பக்கத்து ஊர் ஆளு. சீட்டு சிகரெட்டுனு பிடிக்காத கை… தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்குங்க…” என்று அவன் வயிற்றில் பாலை வார்த்தான் மணி. டீ தரவில்லை. வெறும் வார்த்தைப் பால்!
இந்த வேலை அமைஞ்சால் துரத்தி வந்து கமிஷன் கேப்பான். குடுக்கணும். அவன் ஜாதக விசேஷம் அது. சில பேருக்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் காசு படியும். வண்டியை மோதினது நான்னு ஐயம் வந்து கமிஷன் கேக்க முடியுமா?
“என்னடா?” என்றார் பாண்டி கூட வந்த சகாவிடம். “உங்க இஷ்டங்க” என்றான் அவன் மையமாய்.
***
ஆக அவனுக்கு வேலை படிஞ்சிட்டது. நல்லநாள் பார்த்து அவனே வண்டியோட்டி பெரியகுளம் வரணும்… என்று ஏற்பாடு. அவனுக்கு வேலை கொடுத்த மகாத்மாவின் கட்டளை அது. அப்படி ஏற்பாடு செய்து விட்டவன் மணி.
முதலாளி தலை மறைந்ததும் கமிஷனைத் தா, வண்டிச் சாவியைப் பிடி, என்பான். பிசாசு அவன். சமாளிக்க வேண்டும்.
வீட்டு வாடகை தரவில்லை. மெஸ்சுல சாப்பாட்டுக் கடன். அயர்ன்காரனுக்கு மற்றும் சில்லரைக் கடன்கள் இருந்தன. யார் கண்ணிலும் படாமல் காலி செய்துவிட்டு ஓடிவிட வேண்டும்.
ஊர்வரை வண்டியெடுக்க பெட்ரோல் காசு, டிரைவர் பேட்டா என்று மணி அக்கறையாய் அவன் பாண்டியிடம் வாங்கிக் கொண்டான். சரியா பெட்ரோல் அளந்து ஊத்துவான். டிரைவர் பேட்டாவுக்கு டாட்டா… வழிச்செலவுக்கு என்று தன்பாட்டைப் பார்த்துக் கொள்ளணும். அது வேறு.
என்னடா அது வேறு, இது வேறு… மொதல்ல வேலை கெடச்சதே, அதைப் பாரு, என்றது மனசு. “அதும் கிட்டத்து ஊர்ல” என்று மறுபக்கம் இருந்து பந்தடிக்கிறான் மணி. கை நிறையத் துட்டு. அவனுக்கு உற்சாகத்துக்குக் குறைவில்லை.
நம்ம ஊர் ஆட்கள் என்கிற அடையாளம் பெரிய விசயந்தான். முதலாளி நம்பி பொறுப்பை விட்டுவிட்டுப் போயிட்டாரே…
ஒரு நல்லநாள் பார்த்து வண்டியில் அமர்ந்து சாவியைத் திருகினான். ஆண்நாயிடம் வாலை உள்ளொடுக்கி ’ர்ர்ர்ர்’ என்று பெட்டை போல உருமியது வண்டி. நல்ல சகுனம் பார்த்து, புது வண்டியில் முதல் ஆக்சிடெண்ட். எலுமிச்சம் பழத்தை அமுக்கிக் கொண்டு கிளம்பிச் சென்றான்.
பாடாவதி வண்டி அநியாயத்துக்குக் குலுங்கியது. அசல்… ஒரிஜினல் மாட்டு வண்டிபோல ஹாரனைத் தவிர எல்லாத்தில் இருந்தும் சத்தம் வந்தது. கியர் மாத்தும் போதெல்லாம் பருவப்பெண் கூச்சப்பட்டாப்போல ஒரு தளுக்கு. ஒரு குலுக்கு.
“என்னா மணி வண்டி இது?”
”ஒன் தராதரத்துக்கு இது நந்தவனத் தேருடா” என்றான் மணி. வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று.
என்ன இருந்தாலும் பட்டணத்தை அவன் குறை சொல்லீர்க்கப்படாது. அது தப்பு. அவனுக்கு வேலை தந்த அம்மையில்லா, என்று நினைத்துக் கொண்டான் ஐயம். பட்டணம் நல் மனிதர்களால் ஆனது. அங்கே ஏராளமானோர் ஏமாறக் காத்திருக்கிறார்கள். எத்தனை பேர் அவனுக்குக் கடன் கொடுத்து கை கொடுத்தார்கள். எத்தனை பேர் அவனுக்கு வேலை கொடுத்து கால் கொடுத்தார்கள்! அல்லது கால் இழந்தார்கள்…
சிலபேர் தூங்கவே மாட்டான். ஆனா சலூனுக்குப் போய் மண்டையைக் கொடுத்ததும் ஸும்மா அப்டி சொக்கும் தூக்கம். பிஸ்ஸ் பிஸ்ஸ்னு அப்பப்ப தலைல முகத்துல தண்ணி விழும் நாய் ஒண்ணுக்கு போல… விறுக் விறுக்னு கத்தரிக்கோல் குறுகுறுப்பு. மண்டையில் கரப்பான் ஊர்றாப்ல… இருந்தாலும் தூக்கம் அதும்பாட்டுக்கு அது. தர்மம் தலை காக்கும்னு தூங்கிருவாங்க. அதைப்போல ஐயத்துக்கு டிரைவர் சீட்டில், வராத தூக்கமெல்லாம் வந்தது.
அதிலும் ராப்பயணம் வேறு. சரி ஓடிப்போக ராத்திரிதான் செளகரியம். விடிஞ்சா ஊர் எல்லை மிதித்து விடலாம்… என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.
பத்மினிக்கு உற்சாகமாய் எழுதினான். ஆ அருமை பத்மினி… நமக்கு நல்லகாலம் பிறந்தாகி விட்டது. (பாண்டித்துரைக்கு கேடுகாலமா?) எனக்கு பக்கத்து ஊரிலேயே வேலை… காரை எடுத்துக் கொண்டு அதிகாலை நம்ப வீட்டை எட்டிப் பார்த்துவிட்டுத்தான் முதலாளியைப் பார்க்கப் போவேன். நம்மூர் ஆளுங்க மத்தியில் ஒரு ராஜ அறிமுகம் செய்துக்குவம்.
நீயும் தனக்குட்டியும் ஏறிக்கங்க. ஒரு ரவுண்டு அடிப்பம். என்ன சொல்றே?
ஜோரான கனவுகள்.
எல்லாம் எழுதி கடைசியில் கடிதத்தைக் கிழித்துப் போட்டான். அதான் ஐயம். திடீர்னு ஒரு காரியத்துல பாதில குழம்பி… விளைவு? ஆக்சிடெண்ட்! சஸ்பென்சாய்ப் போய் எறங்குவம். அவ அசந்துற மாட்டாளா? ஐயம் புன்னகையுடன் தன்னையே அங்கீகரித்துக் கொண்டான்…
***
பகலில் நெருப்பாய்க் கொட்டிய வெப்பத்துக்கு இராப்பயணம் சுகம். நல்லா அடங்கிய காத்து… சட்டையைக் கழற்றி பனியனை மாத்திரம் போட்டுக் கொண்டு போனான். ‘ஏ மாப்ள தூங்கிறாத’ என்று மனசை ஆயிரம் முறை வேண்டிக் கொண்டான். ஏதாவது பாடலாம் போலிருந்தது. ஐயம் கொஞ்சம் சுமாராய்ப் பாடுவான். எல்லாம் அந்தக்காலப் பாடல். நல்ல நல்ல கருத்துள்ளது… (பாட்டன் காலத்துலப் பாட்டு அது பாட்டு!) இந்தக் காலப் பாட்டெல்லாம் ஒரு பாட்டா? பாடறதே புரிய மாட்டது. புரிஞ்சாலும் ஒண்ணும் விசயம் இல்லை. என்னமோ ஓ போடுன்றான். எதுக்கு ஓ போடணும் தெர்ல… டங்டங்னு ஒரு ஆட்டம் வேற, அந்த ஆட்டத்தைப் பார்த்தாலே உடம்பு வலிக்கிறது.
சிலபேர் சிகரெட் பிடிச்சான்னா ஒண்ணோட நிறுத்த மாட்டான். ஒண்ணு தீர அடுத்ததைப் பொருத்திக்குவான். கைல சிவப்புக் கல் மோதிரம் போல சிகரெட். சாம்பல் பூத்துப் பூத்து ஆயுசைக் குறைக்கும். அதன் தலையை அப்டியொரு சுண்டு சுண்டிட்டு ஒரு ஸ்டைலில் குலுக்கினா ஒரு தோரணை. திரும்ப வாய்ல வெச்சி இழுத்தா டிராபிக் சிக்னல்ல சிவப்பு விழுந்தாப்ல கங்கு எரியும். சிவப்பு மாற அடுத்த சிகரெட்… அதைப்போல ராப்பயணத்துக்கும் அதுக்கும் பயமில்லாம வெக்கமில்லாம பாட்டு மாத்திப் பாட்டு கிளம்பியது.
மனசில் என்னென்னமோ யோசனை. அடிக்கடி பத்மினியப் பத்தி. பத்மினியின் முத்தம் பத்தி. உடம்பு வாசனை பத்தி… அவ சிரிப்பு. தளுக்கு… பார்த்தே எத்தன்னாள் ஆச்சி, ஏ அப்பாவ்! மெலிந்த கீரைத்தண்டு கால்கள். அந்தக் கால்களை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். தனியா இருக்கும்போது எடுத்து மடியில வெச்சிக்குவான். காலுக்கு மஞ்சள் பூசிக் குளிப்பாள். என்ன வழுவழு. முடியே இராது. மேலே ஏற ஏற சூரியன் பார்க்காத ஒரு பளீர். அப்படியே தடவிக் கொடுக்கக் கொடுக்க வெட்கப்பட்டு நெளிவாளே தவிர அவளுக்கும் பிடித்தமான விசயந்தான் அது. ஒரு கொலுசு வாங்கிப் போடலாம். வசதி வேணுமே?...
மாப்ள தூங்கிறாதே, என்று குரல் கொடுத்துக் கொண்டான். நல்ல சாலை. போக்குவரத்து மட்டாய் இருந்தது. விளக்குகள் சீராய் ஊரெல்லை தொடத்தொட எரிந்தவண்ணமிருந்தன. ஊர் எல்லைகளில் டீக்கடையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு தான் மாத்திரம் விழித்திருக்கிறதை பலமாய் ஆட்சேபித்து தஸ்புஸ் என்று டிக்‌ஷனரி அறியாத பாஷையில் சீறியது. வெள்ளைவெளேர் மாண்டில். ஆண்குழந்தையின் விதைக்கொட்டை.
மூணுமாசம் திண்டாடிட்டதே என்றிருந்தது. தினம் ஒருவேளை நல்ல சாப்பாடுன்னாக்கூடப் பரவால்ல. மீதிப் பொழுதைச் சமாளிச்சிக்கிறலாம். அதுக்கே திகைப்பாய்ப் போச்சு. ஏறியிறங்காத கம்பெனி இல்லை. கம்பெனி வேலைன்னா கறாரா பகல்வேலை. எட்டு மணிநேர வேலை. கொஞ்சம் அதிகமானாலும் காம்பன்சேஷன் உண்டு. பேட்டா என்றோ, ஓவர்டைம் என்றோ கிடைக்கும். மறுநா தாமதித்து வேலைக்கு வரலாம்.
வீட்டோட டிரைவர்னா அது ஒரு மாதிரி. நச்சு பிடிச்ச வேலை. அந்தம்மா காய்கறி வாங்கப் போகும். பசங்கள ஸ்கூல்ல விடச் சொல்லுவாங்க. புருசம் பொண்டாட்டி சண்டையின்னா உடனே “டிரைவர் வண்டியெடு!” ம்பாங்க. ஆனா கிளம்பி வர மாட்டாங்க. குழப்பமா இருக்கும். அவங்க சண்டையை வாயைப் பொளந்துக்கிட்டே வேடிக்கை பார்த்து நிற்பான். நம்ப என்ன செய்யணும்னே தெரியாது. திடீர்னு கைல கெடச்சதெல்லாம் பறக்கலாம். படிச்சவங்கதானா இதுங்கன்றாப்ல வார்த்தைங்கல்லாம் வரலாம். செருப்படி வெளக்குமாத்து அடிகூட விழும். சிரிச்சிறப்படாது. அப்பறமா அவங்க ரெண்டு பேரும் சமாதானமான பிறகு... நம்மள வீட்டுக்கு அனுப்ச்சிருவாஹ!...
சரி சண்டை இப்ப முடிஞ்சிரும்னு பாத்தா, அது இடைவேளையா இருக்கும்… பெரும்பாலான சண்டைங்க ஆம்பளைங்க விட்டுக் கொடுக்கறாப்லயே முடிஞ்சிருது, ஏன்? தெர்ல…
தெருவில் வெளிச்சம் ஆங்காங்கே தலையணை போலவும் இருட்டு பாய்போலவும் கிடந்தது. அவனுக்கு அந்த நினைப்பே தூக்கம் வந்தது. உடம்பு ஒரே மாதிரி கிடந்ததில் அயர்ச்சியாய் இருந்தது. தெருவோரம் நிறுத்திவிட்டு வெளியே வந்தான். நல்லா தண்டி தண்டியாய் மரங்கள். இருட்டை பாட்டிலில் போட்டு வைத்தாப்போல. கார் முன்பக்கத்தைத் திறக்க நல்ல ஆவி பறந்தது. இட்லிக் கொப்பரையைத் திறந்தாப்போல. போய் தரை நுரைக்க நுரைக்க ஒண்ணுக்கிருந்தான். பரமானந்தம். தூக்கக் கலக்கம் வேறு. ஒரு ஆட்டு ஆட்டியது. ஆவனும் ‘ஐட்டத்தை’ ஒரு ஆட்டு ஆட்டி சிலிர்த்துக் கொண்டான். பொம்பளையாளுகளுக்கு இப்படி சிலிர்க்குமா தெரியல.
உடம்பை நெளித்து முறுக்கிச் சொடக்கு எடுத்தான். உள்ளே பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்தான். குடிக்கக் குடிக்க உள்க்குடலில் குளிர். வாயைக் கொப்பளித்தான். கிளம்பலாம்…
இனி எங்கேயும் தங்கிவிடக் கூடாது. நேரா நம்மூர்தான்…
திடுதிப்பென்று பத்மினிமுன் போய் நிற்கப் போகிறேன். மஞ்சப் பூசும் பத்மினி. உற்சாகமாய் இருந்தது. வண்டி தன்னைப்போல வேகமெடுத்தது. மணி என்ன தெரியவில்லை. அடகில் இருந்தது வாட்ச். பட்டணத்தில். அட, இப்ப மணி பாத்து என்ன செய்யப்போற நாயே…
ஊரைத் தொடவும் மாட்டு வண்டிகள் நடமாட்டம் இருந்தது ரஸ்தாவில். பெரிய பெரிய வைக்கோல் கட்டுகள். சாய்பாபா! இந்த பாரம் தாளுமா வண்டி? குடைசாய்-பாபா ஆயிறப்போவுது.
பயண உற்சாகத்துக்குக் குறைவில்லை. நம்ம ஊர். நம்ம சாதிசனங்களைப் பார்க்கப் போகிறேன். பத்மினி… இதோ வருகிறேன். உன் சிறிய உதடுகள்… ஆ! பல் தேய்த்திருந்தால் நல்லது.
ஊர்! அவனது ஊர்! உற்சாகமாய் இருந்தது. அவனது தெரு. அவன் வீடு… ஆனால் பூட்டியிருந்தது.
பத்மினி குழந்தையுடன் அவள் அப்பா வீட்டுக்குப் போயிருப்பதாய்ச் சொன்னார்கள்…
“என்னல கார்… ஏது?” என்றார்கள்.
”நம்மதுதான்!” என்றான் உற்சாகமாய்த் திரும்பி.
”நம்மதுதான்னா? ஒன்ட்ட ஏதுல அவ்ள துட்டு? எலேய், அரவமில்லாம எவனிதையாவது தள்ளிட்டு வண்ட்டியா?” என்றவனை முறைத்தான்.
என் முகராசிக்கு இப்படித்தான் கேள்வி அமையும் போலும்…
(வெள்ளிதோறும் தொடர்கிறேன்)
storysankar@gmail.com
mob 91 97899 87842