தொடர்கதை
முத்த யுத்தம்
19
பாலிருக்கும்...
பழமிருக்கும்... பசியிருக்காது-ன்னு அந்தக் காலத்துல சிவாஜி பாட்டு. அதும் மாதிரி, சில
கூட்டங்களில் மேடையிருக்கும். மைக் இருக்கும்... கூட்டம் வராது.
மேடைல அப்பப்ப
ஒருத்தன் வந்து "கூட்டம் துவங்க இருப்பதால் ஆங்காங்கே இருக்கும் அன்பர்கள்
முன்வரிசைக்கு வந்தமருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்"-னு கெஞ்சுவான்.
சில பேர் ஒரு ஒழுங்கு மரியாதைன்னு வந்து தயங்கி நிப்பாங்க. அப்பக்கூட கூட்டம்
சேராது... உடனே திரும்பவும் ரயில் கிளம்ப ரெண்டாவது மணி அடிச்சாப்ல, தாழ்மையுடன்
கேட்டுக்கிட்டவன்,
இப்ப மிகத்
தாழ்மையுடன் கேட்டுக்குவான்.
கூட்டம் கேக்க
வந்த ரெண்டாளும் மெல்ல நகர ஆரம்பிச்சிரும்.
நம்ம
மனோன்மணிக்கு அப்பிடியா?
அவ வரு
முன்னாடியிருந்தே,
வெளியூர்லேந்தெல்லாம்
ஆளுக வந்திருக்காங்க. சன்ன சனமா?
சனமான சனம்.
எள்ளு போட இடங் கிடையாது. சந்தேகமிருந்தா போட்டுப் பாக்கவும்.
கார் அங்க
நுழையுங் குள்ளாறையே 'வந்தாச்சி
வந்தாச்சி...'ன்னு கலகலப்பு.
எல்லாப் பயலுவளும் அப்படியே எபவ் டேர்ன். காரைத் தேடுறாங்க...
நிகழ்ச்சி
சுருக்க நேரத்தில் ஆரம்பித்து விட்டது. அவளுக்காக எல்லாரும் காத்திருக்கலாம். அவள்
யாருக்காகக் காத்திருக்க வேண்டும்?
அரங்கத்தில்
இருள் சூழ்ந்தது.
கீழே கூட
முன்வரிசை இரு வரிசையளவில் விளக்குகள் இல்லை. அதைத் தாண்டி விளக்குகள் இருந்தும்
அத்தனை பெரிய கூட்டமும் மெளனமாகி விட்டதே. இத்தனை நேரமும் - அவள் வரும் வரை...
என்ன இரைச்சல்... என்ன பரபரப்பு. வாத்தியார் கண்ட மாணவர்கள் போல சட்டென்று
வளாகத்தில் ஓர் அமைதி. சத்தம் பதுங்கிட்டது.
ஜனங்களை ஒரு
மெளனம் வந்து அவ்க்கென்று கவ்வியது. நாய் குட்டிகளைக் கவ்வும் செல்லக் கவ்வல்.
மைக் தயாராய்
இருக்கிற லஜ்ஜையில்லாமல் இந்த 'நொட்டுவனார்' பீரங்கி தரையோடு
இழுபடுகிற அளவில் க்ஹ்ர்ரும்,
என்று சத்தம்
கொடுக்காரு. இசைக் கச்சேரி பாடுகிறவர்களே கூட இப்படி ஒலி நாராசங்களை
வெளிப்படுத்துவது ரொம்ப அநாகரிகமான விசயம். சில பேர் மைக் கிட்டத்ல குளிஞ்சு
கார்ச்சீஃபால மூக்கை மூடிக்குவான் - மிமிக்ரி பண்ணப் போறான்னு பாத்தா... கர்ர்னு
மூக்குச் சிந்துவான். எடேய் நீ முக்குச் சிந்துறதைக் கேட்கத்தான் இத்தினி சனங்க
வந்திருக்கிறதா நெனைப்பா உனக்கு?
நாய் லொள்னு
மேல விழுந்து பிடுங்கினாப்ல இருக்கு.
அதுக்கும்
மேற்படியா... இவாள் பாட ஆரம்பிக்கு மட்டும் கம்னு பல்குத்திக்கிட்டு
உட்கார்ந்திருக்கிற மைக்செட் மகராசன். பார்ட்டி பாட ஆரம்பிப்பான் அப்பதான்... கீல்னு மைக் அலற
சவுண்டு அட்ஜெஸ்ட் பண்ணுவான்.
இசைன்னா அத்தனை
அலட்சியம். பொறுப்பு கிடையாது. மேடைல பிரமுகர் அப்பதான் பேச்செடுப்பார். உடனே
பாஞ்சி அவரை நகர்த்திட்டு மைக்ல எட்டிப் பார்த்து "அண்ணன் அவர்களுக்கு
பதினேழாவது சைபர் - அதாவது வட்டம் - சார்பில் பொன்னாடை" -ம்பான் பன்னாடை
நிகழ்ச்சியில் பாதில போறவன் பேதில போவான்!
முதல் பாடல்
சாமி பாட்டு. அதும் வேத்து பாஷைல சமஸ்க்ருதமா தெலுங்கா தெர்ல. கர்நாடக சங்கீதத்ல,
அது பாடற ஆளுங்களுக்கே குழப்படி. வார்த்தைகளை சந்தைக்கடை நாய் எலும்பு
கடிக்கிறாப்போல ஒரு குதறல். அந்தக் காலத்துல படிப்பறிவு இல்லாத ஓவியன்ட்ட ஓட்டல்
போர்டு எழுதி வெச்சிருப்பாங்களா. "பிராமணர் கள் சாப்பிடும் இடம்."
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு(ம்) இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
அதான் ஏற்கனவே
வெச்சிருக்கியேம்மா. இன்னும் என்னாத்தத் தர்றது. பாடறே, பாடல் எழுதறே, அபிநய
சிரோன்மணி, இசை அமைக்கறே.
பிள்ளையார் சுவடிய
எடுத்து செக்ல கையெழுத்துப் போட்டாப்ல எழுதிக் குடுத்திட்டானே... இருக்கதைக்
குடுத்திட்டாப்ல. இதுக்கு மேலன்னா அவன் எங்க போவான்? எங்காவது கடன்
வாங்கித்தான் தரணும்...
இந்த
கலோகத்தின் துவக்கில் ஊதுவத்திப் புகையாகப் புல்லாங்குழல் இழையுது... மிருதங்கம் -
எடேய் தட்டிறாத... தட்டிறாத... குடியானவன் குடிக்கற கஞ்சில மண்ணு விழுந்தாப்ல
ஆயிரும். இல்லை அவன் தட்டவில்லை. கையால் பிள்ளையாரை அவ வரைந்தாள். தொந்தி
வரைந்தாள். சரி ஒரு பொம்பளையை அபிநயம் பிடிக்கிறான்னு பார்த்தா... பிள்ளையார்!
நடனம் சூடு
பிடித்தது.
'எமைக் கலைத்தே
வதை செய்யும்
கலைத் தேவதை...'
சொந்தப் புனைவு.
கற்பனை வளம். சொல்வளம். நீர் விழ்ச்சி. நீர் எழுச்சி... என இயங்கும் குரல்.
தொண்டையும் கால் தண்டையுமாக அது மாயா ஜால மகோன்னத உலகம். காட்சிக் கனவு!
'மால் அழகன்
பள்ளிகொண்ட
பாற்கடல்
நான்!...'
அவள் உலகம்
தனி. அது விமரிசன வளாகத்தில் இயங்காதது. கட்டுப்படாதது. இலக்கியத்தில் அவள் பாணி
தனி. வீச்சு தனி. மூச்சு தனி. கல்பனா விஸ்வரூபம் தனி. எடுப்பு தனி. அது அவளது
மேடை. தனிப்பாடல்களை அவள் எடுத்தால் அதன்
அழகும் மெருகும் ஊனினை உருக்கி உள்ளெலாம் பெருகி விடுகிறது. 'ஆசைமுகம்
மறந்து போச்சே...'
என ஆரம்பித்து
தோழியிடம் பாரதியாருக்கு. பதில் முறையிட்டாள் 'மறக்கலாமோ?' என முக இருள்
காட்டினால் ஜன மொத்த்ம் வாடி விடுகிறது...
ஆண்டாள்
நாச்சியார் மேல் அவளுக்கிருந்த ப்ரேமை.
'கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசிந்த மாதவன்தன் வாய்ச்சுவையும்
நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி
வெண்சங்கே.'
என்ற
நாச்சியார் முதல் - திருமொழிக்கு அருமையாய் அபிநயம் பிடிப்பாள்.
பாரி மகளிரின்
ஏக்கம் 'அற்றைத்
திங்கள் அவ்வெண்ணிலவில்...'
இதையெல்லாம்
மனோன்மணி அன்றி யார் மேடையேற்றி இசைக்க முடியும். சோகம், சிருங்காரம்.
அட. குறும்புக்கும் குறைச்சல் இல்லை.
எல்லாத்
தரப்பினருக்குமான நிகழ்ச்சியாய் அமைத்துக் கொண்டாள் மனோன்மணி.
அடாடா
குழந்தைகளைக் கூட அவள் கவனம் வைத்திருந்தாள். அதாங்க அவகிட்ட சிறப்பு.
'இப்புறமும்
அப்புறமும்
ஆடிவரும்
சப்பரம்'-
கேட்கும்போதே
மனசில் சாமி புறப்பாடும், மல்லாரி என ஆடும் பல்லக்கு எடுப்பும். ஊர்ப்பயலுகள் பிறகு
மறுநாப் பூராவும்... வாய்ல ஜவ்வு மிட்டாய் போல இதையே சவைச்சித் திரிகிறார்கள்.
கர்ணன்
திரைப்படப் பாடல். 'என்னுயிர்த்
தோழி கேளடி சேதி... இதுதானோ உங்கள் மன்னவன் நீதி...' ஜனங்கள் தனை
மறந்து கை தட்டினார்கள். உடனே சொந்த சாகித்யம்-
'கனவானே
நான் உந்தன் கனவானேன்!...'
·
“நானோ
கடியெரும்பு
நியோ அடிக் கரும்பு"
என சிருங்கார
ரீங்காரம்.
சட்டெனப் பறவை
உயர்ந்தெழுந்தாற் போல...
'சிற்றில்
கூட்டி
சிறுவிரல்
நீட்டி
பாரென
அருகழைத்த பாலகன்....'
எனக்
குழந்தையாய் மணல் வீடு கட்டும் பாவனைகள்...
மனசில்
கலையூற்று கொப்பளித்து வெளியெலாம் பொங்கி வழியும் படியான ஓர் உள்-ஆவேசம் அவளை
மேடையில் இயக்கியது.
கம்பராமாயணப்
பாடல்.
தண்டரை மயில்களாடத் தாமரை விளக்கம் தாங்க.
கொண்டல்கள்
முழவினோங்க குவளை கண் விழித்துநோக்க
தெண்டிரை எழினிகாட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது
பாட மருத(ம்) வீற் றிருக்கு(ம்) மாதோ.
(மயில்களின்
ஆடல் அரங்கேற்றம். தாமரை விளக்குகள் எரிகின்றன. மேகமேளம். குவளைப் பூக்கள்
பார்வையாளர்கள். நீர்த்தடாகம் கண்ணாடியென ஒளி காட்டியது. வண்டுகளே
பாடகர்களாய் மருத நிலம்!) அப்டிப் போட்டுத் தாக்கு!
உடனே மனசின்
சிலிர்ப்புடன் அடுத்த பாடல் தன்னைப் போல உருண்டோடி வந்தது. தொண்டரடிப் பொடி
ஆழ்வார் பாகரம்.
பச்சைமா
மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர(ர்) ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெரிதும் வேண்டேன் அரங்கமா நக(ர்) உளானே.
கூட்டத்தை
மறந்து அவள் மனசில் பூத்ததையெல்லாம் வெளியே வாரி வாரி இரைத்தாள். இன்னொரு
கம்பராமாயணப் புனைவு. அனுமன் சீதையைக் கண்டுவந்து ராமனிடம் சேதி பகர்தல்...
கண்டனன்
கற்பினுக்(கு) அணியைக் கண்களால்
தெண்டிரை
அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர்நாயக
இனித்துரத்தி ஐயமும் பண்டுள
துயரும்
என்றனுமன் பன்னு வன்...
தமிழ்ப்
பேராசிரியர்கள் ஒவ்வொரு பட்டிமன்றக் கூட்டத்திலும் கண்டேன் சீதையை என்று...
முதலில் கண்டேன் என அனுமன் துவங்குவதைச் சொல்கிறார்கள். மனோன்மணி அவர்கள் நட்பை
மையப்படுத்தி பாவனை செய்தது விஷேம். 'பண்டு'
(வெகுகாலமாக) உள துயரும்... என அங்கே ஒரு பிடி பிடித்தாள். அடேய் ராமா வெகு
காலமா உன் முகத்தைப் பார்க்க சகிக்கிலியேய்யா!... என்கிறானாம் அனுமன்.
வெறும்
நாட்டியக்காரியா அவ?
கலா மண்டபம்.
பாடல் பாடல் என்று போய்க்கொண்டே தாவிக்கொண்டே போகிற மனோவேகம். அசுவமேத யாகம்.
பார்க்கிறவர்களுக்கு கண் செய்தயோகம்.
அவனவன்
ஒண்ணுக்கு வந்தாக் கூட அடக்கிட்டு உக்காந்திருக்கான்யா.
சில சமயம்
நிகழ்ச்சி முடிஞ்சி பாத்தாதான் தெரிது. பார்வையாளர் அரங்கத்தில் அங்கங்கே அதுவும்
நடந்திருக்கு.
மண் தரைல்லா...
அது ஒரு சவுரியம். மண்ணில் அங்கங்கே ரணகளம். புளிச்சென்ற வெற்றிலைத் துப்பல். பீடீ
சிகரெட் அமுக்கிக் கிடக்கும். மூக்குச் சிந்தல், மூத்திர
வீச்சம். நல்லவேளை - நாய் மாதிரி அங்கேயே நம்பர் ரெண்டு போகாம.
'ஆறிரு
தடந்தோள் வாழ்க'-
எப்போதுமான
அவளது இறுதிப்பாடல்.
நேரம் போவதே
தெரியாதபடி ஜனங்கள் கட்டுண்டு கிடந்தார்கள். நிகழ்ச்சி முடிந்த கணம் எல்லாருக்கும்
மழை பெருகி அடித்து நொறுக்கி ஓய்ந்தாற் போல ஒரு இன்ப ஆயாசம். ஆசுவாசம்.
கலவி முடித்த
களைப்பு போல!
மேடையில்
வெளிச்சம் வர. விறுவிறுவென்று நாறகாலியிகள் பாய்ந்து வந்து இடம் பிடித்தன. கூட்டம்
எழுந்து கொண்டதே தவிர நகரவில்லை.
இனி அடுத்த
திருவிழா வரை ஞாபகம் இருக்காப்ல அப்படி ஒரு அரசாட்சி, அரசியாட்சி
செஞ்சிட்டாளேய்யா...
ஆமாமா.
பொம்பளையாட்கள் பகைச்சிக்கப் படாது... ஒற்றேயொரு மனோன்மணி தானடியம்மோவ்!
அப்டி கோவம்
வர்றாளுங்க இடுப்பு டயரை மாத்த முயற்சி பண்ணிட்டு அப்ளிகேஷன் போடவும். ஆண்கள்
கூட்டம் போட்டு விவாதித்து ஒரு முடிவு செய்யிறோம்.
நம்ப
அண்ணாச்சி... அவரும் லேசுப்பட்ட ஆளில்லை. உள்ள நிறைய விஷயம் வெச்சிருக்காரு. அதான, எத்தனையோ
கூட்டத்ல பேசிருப்பாரே மனுசன். அசந்து விட்டான் ஐயம் பெருமாள்.
அழகா
சுருக்கமாப் பேசினாப்டி. நா நலம் சிறந்த பெண்ணே. நாநிலம் போற்ற வாழ்க-ன்னாரு. விட்டா
கவிதையே எழுதிருவாரு போல.
நிகழ்ச்சி
நடக்கிற போதே என்ன பேசன்னு யோசனை பண்ணிக்கிடுவாரோ என்னமோ?
நீரும்
ப்ல்லாண்டு வாழ்ந்து,
எனக்கு
ஒழுங்காச் சம்பளத் துட்டு தருக!
நினைவுப்
பரிசினைப் பெற்றுக் கொள்ள பாதி அழித்த அரிதாரத்துடன் - ஏன் அப்டி? அது ஒரு
ஸ்டைலப்போவ் - சால்வை ஒன்றைப் போர்த்தியபடி வந்தாள் மனோன்மணி. பெரிய ஆர்ட்டிஸ்ட்
எல்லாரும் அப்டிதான்... அது நாடகக் கம்பெனியோ, டான்ஸ்
பார்ட்டியோ? அடுத்து மேடைப்
பாராட்டு இருக்கும்னு தெரியும். இருந்தாலும் அவக இதெல்லாம் அத்தனை பெரிசா
எடுத்துக்கலன்னு ஒரு பாவனை... என்ன?
நம்ம வீட்டுப்
பொம்பளைங்களையே எடுத்துக்கங்க. குளிச்சிட்டு வெறும் முதுகா தாண்டிப் போகும். சரி, கொஞ்சம்
மோப்பம் பிடிக்கலாம் - 'வாடி'ன்னு கூப்ட்டா, உடனே 'நிறைய வேலைய
கெடக்கு'ம்பாளுக. இந்த
ஒரு நிமிசத்ல் அந்தாக்ல சமையலை முடிச்சி இறக்கிர்றா மாதிரி ஒரு அலட்டல்...
மனோன்மணி
திரும்ப மேடையில் தோன்றி கூட்டத்தை வணங்கினாள். கரகோஷமும் விசில் கோஷமும் வானைப்
பிளந்தது.
நம்ம ஐயம்
பெருமாளும் தனை மறந்து கைதட்டினான். கம்மாவா பின்ன? அவனது ஹைஸ்கூல்
தமிழ் வாத்தியார் ராமானுஜம் – மனுச ஜெம் அவர் - இது ஆங்கில் ஜெம். முத்து!...
மண்டைல ஏத்திய தமிழுக்கு சுதியேத்தி விட்டுட்டாளேய்யா.
தலை
கிறுகிறுத்துக் கிடந்தது. என் தலைவன் காளமேகம் இருந்தான்னா இந்நேரம் மேடையேறி
உனக்கு ஒரு முத்தம் அடிச்சிருப்பான்.
என்னால
முடியுமா?!
நீ
மிதிச்சிட்டுப் போறியே... அந்தக் காலடி ரோஜாப்பூ நான்!
•
வெள்ளிதோறும் தொடர்கிறது
storysankar@gmail.com
9789987842 / 9445016842

No comments:
Post a Comment