நகைச்சுவைத் தொடர்கதை / எஸ்.சங்கரநாராயணன்
முத்த யுத்தம்
16
வெடிச்சுச்
சிதறிய மாதுளைப் பரல்களாய் வானம். பால்பற்கள் என குழந்தையாய்ச் சிரித்துக்
கிடந்தது. நிலா இல்லை. தூய நல்லமைதி. இரவுப் பயணம். கனவுப் பயணம் அல்லவா அது? தனலெட்சுமி
அம்மா மடியில் ஆனந்தத் துயில் கொள்கிறாள். உட்சிறகுகள் கட்டவிழ்த்துக் கொள்கின்றன, மொட்டவிழ்த்துக்
கொள்கின்றன.
வானக்கடலின்
நீல நீரிலும் கரையாத உப்புக் கற்களாய் நட்சித்திரங்கள்.
இரவின்
தண்மைக்கு சிறு கதகதப்பாய் அவன் தோளில் அவள், களைத்த மனைவி.
எங்கு போனாலும் அவள் தனலெட்சுமியைச் சுமந்து திரிகிறாள். பத்து மாத உட்சுமை.
கனவின் வளர்ச்சி. பிறகு அவள் தோளோடும் மார்போடும் அம்மாவின் உடல்சூடே பாதுகாப்பாக
உணரும் சிறு குழந்தை... வாழ்வில் பெண்மைதான் எத்தனை அற்புத அனுபவம். ஆணாதிக்க
நிலையில் அதைப் பேணுவது பெரும் பாவம்...
பத்மினியின்
கனவுகள் எளியவை. அவை எத்தனை எளிமையானவையோ அத்தனைக்கு மானுடத்தின் முக்கியத்
திறவுகோல்களை உள்ளடக்கியவை அல்லவா?
பெண்ணின்
கனவுகள் மிக்கவாறும் பிறரின் நலன் கருதியே அமைகின்றன. கருணைச் சுடரேற்றிக் குடும்ப
விளக்கமாய் அமைகிறார்கள் பெண்கள்.
எனக்கொரு ஆசை
மாமா... நாம மூணு பேரும் கார்ல போகணும்...
உலகின்
எல்லைகளைக் கடப்போம் பெண்ணே.
பெண்மைக்கு
வணக்கம்.
பெண்ணின்
பெருந்தக்க யாவுள?
ஏதேனும் உள? ஒன்றுமே
யில்லை. அதில் சந்தேகமே யில்லை.
சற்றும்
அவசரமின்றி நிதானமாகவே போனான். நிறையப் பேசிக் கொண்டேவர அவள் நினைத்திருக்கலாம்.
இரவில் விழிக்க விரும்பியும் தானாகவே தூக்க சாகரத்தில் அமிழ்ந்து மிதந்து விட்டாள்.
ஒரு குழந்தை போல... இருக்கட்டும். அவளுக்கு ஒய்வு தேவை. குழந்தை உறங்குகையில் அவள்
உறங்கி, அது விழித்துக்
கொள்கையில் அவளும் விழித்துக் கொள்ள வேண்டும்.
உழைப்பின்
களைப்பு அது. கனவுகள் அவள் கண்ணுள் கையெழுத்திடுகின்றன. கனவோடு அவள் உடன்படிக்கை
செய்து கொண்டிருக்கிறாள். அவைகளைக் கலைத்துவிட வேண்டாம்.
வலித்துக்
கிடந்த அவள் தோள்களைத் தடவித் தரவும் சித்தப்படவில்லை. அவளைக் கலைத்துவிட மனம்
ஒப்பவில்லை. அவள் உறங்குவதே சிறிதே நேரம். குழந்தைகள் சிறிது நேரமே உறங்குகின்றன
அல்லவா? அதனால் தான்
அயர்ந்து உறங்குவதே கூட அவர்களுக்கு அத்தனை அழகாய் உணர்கிறான் அவன்... பசித்து
உண்கிறவனைப் பார்ப்பதே அழகு.
வேடிக்கை.
அந்தக் குழந்தை... என் குழந்தை... தனலெட்சுமி அம்மாவின் உடல் சூட்டைப் பாதுகாப்பாக
உணர்கிறாள். ஆ பத்மினி என் தோளின் கிளி. என்னைத் தன் கதகதப்பாய் உணர்கிறாள். நான்
முல்லைக்குத் தோள் கொடுத்த பாரிவள்ளல்!
நான்... அவள்
தோளில் ஆறுதல் பெறுகிறேன். அமைதியுறுகிறேன்.
ஒரு பக்கம் சவால்களும்
மிரட்டல்களுமாய்க் கொந்தளிக்கிற உலகம், இந்த ஆண் பெண் அண்மையில் சட்டென்று மழையின் குளிராக எப்படி
முகம் மாறி அமைதி கொண்டாடி விடுகிறது, வாழ்க்கையில் பாதிப் பகல். பாதி இரவு...
இரவென்பது
இயற்கையின் சீதனம். மானுடனே பெற்றுக் கொள்க. வாழ்க வளமாய். நலம். நலமறிய அவா.
சிந்தனைகள் உள்ளே கற்கண்டுக் கட்டிகளாய்த் தித்தித்துப் பரவுகின்றன அவனுள். இதன்
கவிதைச் சொட்டுகளின் முன் வாய்ச் சொற்கள் என்ன பயனும் உள? ம்கூம். இல.
பகலின்
இரைச்சலின் எண்ணங்கள்,
கலைத்துப்
போட்ட ஜவுளிச் சேலைகளாய். இரவு பொறுமையாய் அவைகளை அடுக்கி
மனசில் வரிசைப்படுத்தி வைக்கிறது.
சில குழந்தைகள்
கூப்பிட்டால் கிட்ட வராது. விலுக்கென உள்ளோடி கதவுக்கு அப்பாலிருந்து எட்டிப்
பார்க்கும். அதுகளைத் தொடுவதை அவை விரும்புவதில்லை. தொட முயற்சி செய்யக் கூடாது.
பிடிவாதமாய்ப் போய்த் தூக்கி இறுக்கி யணைத்துக் கொள்ளக் கூடாது. பொறுமையுடன்
புன்னைகையுடன் காத்திருந்து பிரியமுடன் பேச்சுக் கொடுக்க... மெல்ல அவை பேசத்
தலைப்படுகின்றன். தாமே விரும்பி அருகே வந்து மடிமேல் அமர்ந்து விடுகின்றன.
பகலில்
கட்டுகளில் சிக்காத பொழுதுகள் இரவில் வந்து மடிமேல் அமர்ந்து கொள்கின்றன்.
சமர்த்துக் குழந்தைகள்.
பொங்கலுக்குப்
போல... திருவிழாவுக்குப் போல... வீட்டைப் புதுப்பித்துக் கொள்வது மாதிரி...
மானுடம் இரவுகளில் மனசைப் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.
பகல் சரிதான், ஆனால் பகலில்
வானம் வெண்திரையாக,
வெள்ளைத்
திரையாக அல்லவா கிடைக்கிறது. இரவில் அறிக வானத்தை. இப்பெரும் வானத்தை மனதில்
நிறைத்துக் கொள்கிறேன். வானம் எனக்கொரு போதிமரம். நாளும்
எனக்கது சேதி தரும் என்றான் ஒரு கவிஞன். வானம் அல்ல அது - ஞானம். இந்த இரவை
அமைதியை மூச்சென நிறைத்துக் கொள்கிறேன்.
ஆ, பகலில்...
அறிவின் ஆதிக்கப் பிடியில் பலமாக அல்ல... பயமாக அல்லவா உணர நேர்ந்து விடுகிறது.
திகட்டாத ஞானத் தெளிவு எங்கே அங்கே வாய்க்கிறது? இரவில்
விதையிலைத் தளிர் விரிந்து கொடுப்பதைப் போல அறிவு தன் ஆமை ஒட்டிலிருந்து
வெளிப்பட்டு உலா வருகிறது. அறிவுக் குழந்தை இயற்கையின் மடியில் உட்கார்ந்து
கொள்வதில் பரவசப்பட்டு முன்வருகிறது.
அந்தரங்க
ஜலதரங்கம்!
ஓர்
ஆர்ப்பாட்டம் போல அவன் பகல்களில் - காரில் மாமனார் முன் போய் நிற்கப்
பிரியப்பட்டான். பகலில் ஆவேசங்கள்,
ஆசைகள்...
அறிவின்பாற் பட்டவை என நினைப்பினும் அவை எளியவையே. இரவின் கனவுத் தோய்வுடன் மனம்
மேலதிக கனமாக சிந்தனைகளை ஆராய வல்லதாக அல்லவா உருமாறி விடுகிறது.
வலிமையில்
மென்மை, மென்மையில்
வலிமை என உயிரின் அமைப்பே துருவ அம்சங்களை உள்ளடக்கிய விசித்திர ஜோடனை கொண்டது.
மெல்லத் துயில்
கலைந்து அவள் சயனத்தில் சலனம். கண் விழித்துப் பார்த்தாள். "அடடா தூங்கிட்டனா
மாமா" என எழுந்து கொள்ள முயற்சிக்கிறவளைக் கையமர்த்தினான்.
"தூங்கேன், அதனாலென்ன?" என்று புன்னகை
செய்கிறான். வண்டியை எப்போது நிறுத்தினான் அவனுக்கே தெரியாது. நிலா இல்லாத
இரவுதான். அதனாலென்ன?
அருகில் அவள். அவளே
நிலவு.
குழந்தையை
மெல்ல உறக்கம் கலையாமல் கிடத்தி விட்டு வெளியே வந்தாள்.
மேலே வானம்.
கீழே பூமி. இடையே கனவுப் புல்லாய் அவர்கள். மழைக்கு நாவை நீட்டித் தவமிருக்கும்
புற்கள்! அவன் அவளை அணைத்துக் கொள்கிறான். பொழுது அழகாய் இருக்கிறது. இரவு அழகாய்
இருக்கிறது. வாழ்க்கை அழகாய் இருக்கிறது.
அழகில்லாத ஒரு
விஷயம் இந்த உலகில் இல்லை. அவளே அவனது கன்னத்தைப் பற்றி முத்தமிடுகிறாள். நாடகப்
பின்பாட்டுக் காரன் போல மரம் ஒன்று சிறிதே தலையாட்டி 'ஓஹோ' என்கிறது.
·
திருவிழா
என்றால் இரவுக் கொண்டாட்டம். பகலில் வளாகங்கள் சோம்பிக் கிடக்கும். ரங்க ராட்டினம்
கழல்வதை நிறுத்திக் கிடக்கும். பெரும் பெரும் சாக்குகளில் கடலை, பொரி, சேவு ஜட்டங்கள்
மூடி. நட்ட பலகைகளில் யாவாரிகள் படுத்துக் கிடக்கிறார்கள், டீக்கடை
வளாகத்தில் சொறிந்து கொண்டும் தந்தி வாசித்துக் கொண்டும் சிலர்.
காலையிலேயே
மாமனார் வீட்டில் குளித்து திருநீறு பூசிக் கிளம்பினான். எளிமையான காலை. ஒளிமுற்றாத கிரணங்கள்.
மனம் சளப் சளப்பென அலை மோதாமல் கிடக்க நல்ல பயணம். திருவிழா வளாகத்தைத்
தாண்டுகையில் வண்டியை நிறுத்தி விட்டு அம்மன் சன்னிதிக்கு இறங்கிப் போனான்.
சன்னிதி பூட்டிக் கிடக்கிறது. யாரோ கொட்டிவிட்டுப் போன குங்குமம் எடுத்து சின்னதாக
வைத்துக் கொண்டான்.
சந்தோஷமாய்
உணரவும் வாழவும் பெரிய அறிவு ஒன்றும் தேவையில்லைதான்!
அறிவை ஆயுதமாக
உணராதவர்கள் பாக்கியசாலிகள். வங்கிகளில் சலான்களை நிரப்பித்தர வேண்டிக் கொள்ளும்
எளிய சனங்க்ள், பஸ் எண்
தெரியமால், போகும் இடம்
சொல்லி சரியான பஸ்ஸில் ஏற்றிவிடச் சொல்லும் மனிதர்கள்... கூட ஒரு சிரிப்புடன்
விண்ணப்பத்தை நீட்டுகிறார்கள். அவர்கள் முகம்தான் எத்த்னை அழகாய் நடிப்பற்றுப்
பொலிகிறது.
பாண்டித்துரை
காத்திருந்தார். தாமதமாகி விட்டதோ என்றிருந்தது. அவர் ஒன்றும் சொல்லவில்லை. "வா"
எனப் புன்னகை செய்தார். உற்சாகமாய் இருந்தது.
·
இரையெடுத்து
அலுத்துக் கிடந்த பாம்பாய்க் காலையில் கிடந்த வளாகம். மாலை பொழுதுவிழ பசித்துச்
சுறுசுறுத்தது. குழல்விளக்குகளின் தடியடிப் பிரயோகத்தில் இரவு காணாமல் ஆனது.
ஒருநாள்
பட்டிமன்றம்... என்று தமிழ்ப் பேராசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க மோதினார்கள்.
விநோதமான தலைப்புகள் - குடும்பத்தின் தலைவலிக்குக் பெரிதும் காரணம் கணவனே மனைவியே
- (அவன் தீர்ப்பு - சரியா வெளிக்குப் போகாததே!) கணவனே என்ற தலைப்பில் அத்தனை
பேரும் ஆண்கள். மனைவியே என்ற தலைப்பில் பேச அனைத்தும் பெண்கள்... என விநோத ஜோடனை
முடிச்சுகள்.
விடிய விடிய
நிகழ்ச்சிகள். கூத்து மாதிரி இல்லாமல் கொஞ்சம் பெரிய நாடக கம்பெனிகளும் ஒருநாள்
ஏற்பாடு. அவர்களிலும் பாதியில் வசன சர்ச்சைகள் வருவது உண்டு. கதையை அப்படியே
நிறுத்தி விட்டு கட்சி கட்டிப் பேசுவார்கள் நாயகனும் நாயகியும்...
சக்தி பெரிதா
சிவன் பெரிதா, என விவாதங்கள்.
இன்னும்
பொம்மலாட்டம் ஒருநாள். மேலேயிருந்து நூலை ஆட்டி ஆட்டி வசனம் பேசி இத்தனை
உற்சாகத்தைக் கிளப்ப முடிவது ஆச்சரியந்தான். வாலிவதம், வள்ளி திருமணம், நளதமயந்தி, பாஞ்சாலி சபதம், பவளக்கொடி என
நாடகத்தின் சகல அம்சங்களையும் பொம்மலாட்டத்தில் காண்பது தனி ருசி.
பட்டிமன்றம், கவியரங்கம், வழக்காடு
மன்றம் என்று ஏற்பாடு செய்தால் உள்ளுர் ஆட்கள் ஒருவராவது அதைச் சாக்கிட்டு
மேடையில் தலைகாட்டத் தவித்தார்கள். ராவும் பகலுமாக விழாக்குழுவிடம் விழுந்து சான்ஸ்
பிடிச்சதுல ஒண்ணுங் கொறைச்சல் இல்ல... என்றாலும் மேடையேறி "அறிஞர்கள்
வீற்றிருக்கும் இந்த சபையில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்ததற்கு
நன்றி" என்று கூனிக் குறுகி வாய்ப்புத் தந்தவர்களைக் கேவலப்படுத்தி...
அவர் பேசி
முடிக்கையில் முன்வரிசையில் இருந்து அவர் சம்சாரமும் குழந்தைகளும், சில டியூஷன்
மாணவர்களும் கை தட்டினார்கள்.
பேச ஆசைப்பட்ட
பார்ட்டிகளைப் போலவே நாடகம் போட ஆவேசப்பட்டுத் திரிகிற பார்ட்டிகளும் கிராமத்தில்
உண்டு. பிரபல நடிகன் ஒருவன் படத்துக்குப் படம் கிராப்பை மாற்ற மாற்ற, ஸ்டைலை மாற்ற
மாற்ற இவர்களும் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் நடையிலும் பேச்சிலும் கலைக்கென்றே
அர்ப்பணித்துக் கொண்டவராய்த் தெரிந்தார்கள்.
பாதிப்பேர்
அப்பன் ஆத்தாளை மீறிக்கிட்டு,
ரசிகர் மன்றம்
வெச்சி ஒரு மாதிரி கண்சிவந்து திரிந்தார்கள். தங்கள் பேரையே மாத்தி வெச்சிக்கிட்டு, கைல நடிகன்
பேரைப் பச்சை குத்திக்கிட்டு முகமெல்லாம் ஒரு அசட்டுக்களையுடன் வளைய வந்தார்கள்.
அவர்கள் வீட்டு வாசலில் உடல் மண்ணுக்கு. உயிர் அந்த நடிகனுக்கு... என்று போர்டு
வேறு. ஏன் உடலையும் பார்சல் பண்ணிற வேண்டிதானல?
ரெண்டையும்
இப்படி வாரிக் கொடுத்திட்டியேல...
அப்ப
பெத்தவுகளுக்கு?
வாய்ல மண்ணு
பெத்தவகளுக்கு - அதையும் போர்டுல எழுதிப் போடுங்கல.
அந்த நடிகன்
படம் பட்டணத்தில் ரிலீசாகற நாள் இவகளுக்கு இருக்கற பரபரப்பு. பக்கத்துப் பெரிய
ஊர்ல, மாவட்டத்
தலைநகர்ல அதே படத்தை வெளியிட்டாங்கன்னா போயி ஒரே அமக்களம். மொதநாள் மொத
காட்சி காங்கலையின்னா இவாளுக்குத் தூக்கம் வராது.
அப்பன் பாவம்
எத்தனி சிரமப்பட்டு பணத்தை ஒளிச்சி வெச்சாலும் நவட்டிக்கிட்டு ஓடிருவான்.
அல்லது அம்மைய வசியம் பண்ணி வாங்கிட்டு கிளி பறந்துரும். வெளிய கடன் வாங்கியாவது
கிளம்ப வேண்டிதான். அதும் சும்மா இல்ல - சைக்கிள்ல நடிகன் படம் ஒட்டிய தட்டி
கட்டிக்கிட்ட்டு பத்து பனிரெண்டு சைக்கிள்ல ஊர்வலம் மாதிரி கிளம்பறது. படம்
பார்க்க வர்றவங்களுக்கெல்லாம் சாக்லேட் விநியோகம். மொத மொதல்ல அந்தப் படத்துல ஹீரோ
வாற சீன்ல பூ வாரியிறைப்பு. தலீவா...னு உணர்ச்சி பொங்க ஒரு கத்து.
திருளாச்
சமயத்துல இவாள் நாடகம் ஒரு ராத்திரி. எவனுமே வர மாட்டான்
பார்க்க. கதை திரைக்கதை வசனம் துட்டுச்செலவு டைரக்சன்... எல்லாமே இவாளே.
கிளைமாக்ஸ்ல இவாள் - உயிரைக் குடுத்து நடிக்கானாம்ல - செத்தூர்றாப்ல உருக்கமான
முடிவு. சாகறதுல என்னாடா நடிப்பு... பேசாமப் படுத்து கிடக்க வேண்டிதானே?
எண்டா பாவி
உயிர் அந்த நடிகனுக்குன்னியே?
அந்த நாடகம்
அரங்கேர்ற்துலயும் ஆயிரம் கோளாறுகள். செத்தவன் நாடகத் திரை இறங்குமுன் லைட்தான்
அணைச்சிருக்கேன்னு எழுந்து போறதும்,
கைதவறி லைட்
மாத்தற பார்ட்டி லைட்டை எரிய விட்டுர்றது, தொபுக்கடீர்னு
உடனே அவாள் திரும்பப் படுத்துக்கிட்டு "லைட்ட அணைங்கப்பா"ன்னு கத்த, அது மைக்ல
எல்லார்த்துக்கும் கேக்கும்! சீரியஸ் டிராமா காமெடியாயிரும்!
இந்த மாதிரி
டிராமாக்களில் சீரியஸ் வசனம் வரும் போது ஜனங்கள் சிரித்தார்கள். காமெடின்னு
வர்றபோது உம்மென்றிருந்தது கூட்டம்...
எல்லாக்
கூட்டத்திலும் அண்ணாச்சி முன்னிலை - அது முக்கியமாச்சே!
நம்மக்கிட்ட
எத்தைனையோ திறமை இருக்கு. அதை நாம வளர்க்கணும்... என்கிற ரீதியா - வருஷா வருஷம்
அண்ணாச்சி இதையேதான் பேசுவார். அதென்னாமோ தாடிய வளக்கற மாதிரி அவருக்கு நினைப்பு.
பேசி கலைஞர்களை அறிமுகப்படுத்தி மாலை அணிவிப்பார். உடனே அவாள் அண்ணன் அவர்களுக்கு
ஒரு மலர் மாலையை மாணிக்க மாலையா அணிவிக்கிறது... அதென்ன மாணிக்க மாலை? ஏல என்ன வெலை
தெரியுமால? அது எப்பிடி
இருக்கும்னாவது நீ கண்டிருக்கியா?
இந்த மாதிரி
கலை(த்துப் போட்ட) வாழ்க்கை வாழற ஆசாமிகளோட நடிக்க கதாநாயகி? கிராமத்தில்
தெரிஞ்ச பெண்கள் யாரும் முன்வர மாட்டாங்க. கூத்து நடிகைகளையே பரவால்லன்னு
இவங்களும் செய்துக்கிட வேண்டிதான். அவுக கூத்து முடிஞ்ச நாலாவது நாள் இவுக
டிராமான்னு ஏற்பாடு. அந்த இடைவேளைல ரிஹர்சல்... தினசரி ராத்திரி ராத்திரி
பாண்டித்துரை விசிட... அது இல்லாமயாவே?!
அதுங்க
நோட்டிஸ் இப்டி அடி அப்டி அடின்னு படுத்தற பாடு... சினிமாப் புகழ்னு போடுங்க...
என்ன சினிமாவோ, என்ன புகழோ?... ஐந்நூறு நாடகங்களுக்கு
மேல் நடித்த... அப்டி இப்டின்னு நோட்டிஸ். மேடைல அவக நடிப்பைப் பார்த்தா - ஐந்நூறு
நாடகங்களுக்கு மேல் கெடுத்த...னு போடலாம் போலருக்கும்.
ஹா! ஹா!
ஐந்நூறு நாடகம்னா... ஊர்ப் பண்ணையோட ஐந்நூறு ரவுண்டு வந்துருப்பாளுக போலுக்கடா!
கதை முடிவில்
கதாநாயகன் செத்தாலும் சரி,
நாயகன் நாயகி
கல்யாணம் பண்ணிக் கிட்டாலும் சரி... ஆரெஸ் மனோகர் டிராமா எஃபெக்ட் மாதிரி -
அப்டியொரு மயக்கந்தான் - மேலேருந்து பூ விழ ஏற்பாடு. எண்கோண வடிவத்தில் பத்துப் பன்னெண்டு
சிகரெட் டப்பா சேத்து ஒரு பெட்டி பண்ணி நூல்கட்டி ஸ்பெசல் தயாரிப்புகள் தலைல
பூவா... கல்லைத் தூக்கிப் போடலாம் போலருக்கும்.
இந்த எழவு
டிராமாவுக்கெல்லாம் அண்ணாச்சி வரமாட்டேன்னு சில சமயம் மறுத்துருவாரு. அவரை அசத்தறா
மாதிரி, அவரைப்
பாராட்டி "நம்ம எசமான்"னு முன்வரிசைல அவரைக் கைகாட்டி
"ஊருக்கெல்லாம் நல்லது செய்யிற மகராசன்" அப்டி இப்டின்னு வசனம்
சேத்துக்குவாங்க. அல்லது அவரையே சிறு பாத்திரமாக்கி மேடையேத்தி, "நம்ம சரவணன்
கலலுரிக் கலைவிழாவில் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு"ன்னு சீன் செட் அப்
பண்ணி, அதை பாண்டி அண்ணாச்சி
வழங்கறா மாதிரி கதையை அமைச்சிக்குவாங்க. அதுல நம்மாளுக்கு ஒரு குளிர்ச்சி.
இளையராஜாவை
சினிமாவுல பாட வெச்சதே இப்பிடி ஒரு ஐஸ் வெச்ச செட்டப் தான். எல இவ்ள மோசமா படம்
எடுக்கறிங்க. இதுல நாம் பாடித்தான் அது கெட்டுப் போச்சான்னு அவரும் பாட
ஆரம்பிச்சிடடாரு.
திருவிழான்ற
பேரில் சாமி சந்நிதியையே மறைச்சி பந்தல் போட்டு இத்தனை அமக்களம்...
கொண்டாட்ட
களியாட்டங்கள் முடிய,
சாமிக்கு
தீபாராதனை நைவேத்தியம்னு ஆவும். விழாவுக்கு வந்த அத்தனை கூட்டமும்... கேட்ட அத்தனை
கெட்ட வார்த்தையும் மறந்து பரவசப்பட்டு சாமி கும்பிடும்.
பாண்டியத்துரைக்கு
சாமிக்குப் போட்ட பெரிய மாலையை எடுத்து அணிவித்து தனி மரியாதை. (கற்பூரத் தட்டுல
அதுக்கு தனித்துட்டு.) அவர் அதைக் கொண்டாந்து வண்டி முன்பாகத்தில் மாட்டுவாரு!
ஒருவாரம்
பத்துநாள்த் திருவிழாவில் சில ஒப்பேத்தல் நிகழ்ச்சிகள் இருக்கும். சரிதான்... ஆனா சில
உருப்படியான நிகழ்ச்சிகளும் உண்டு.
சீர்காழி, டியெம்மெஸ்
கச்சேரி.
நல்ல கர்நாடக
சங்கீதம், பரத நாட்டியக்
கச்சேரி... என்கிற எடுப்பான விசயங்களும் ஒண்ணு ரெண்டு சிக்கும். நிஜ சினிமாப்புகழ்
தேங்காச் சீனிவாசன் டிராமா. ஐசரிவேலன், லட்சிய நடிகர் எஸ்ஸெஸ்ஸார் ட்ரூப்...
அதுக்கான
வரவேற்பு பாக்கணுமே.. பெருங் கூட்டம் கூடும். எள்ளுப்போட இடம் இராதய்யா...
ஐயம் பெருமாள்
நோட்டீசே பார்க்கவில்லை. அவன் அண்ணாச்சியிடம் கேட்டான். "இந்தத் திருவிழாவின்
பெரிய பார்ட்டி யாருங்க சார்?"
அடேங்கப்பா, என்று
அசந்துட்டான் ஐயம்.
"மனோன்மணி"
என்றார் அவர்.
சிறுகுளம்
மனோன்மணியா? சதிராட்ட
சுந்தரி மனோன்மணியா?
தருமன் மலையில்
அவன் சரியாப் பார்க்க முடியலியேன்னு ஏங்கிய மனோன்மணியா?
அப்பத்திலயிருந்தே...
கேட்ட கணத்துலிருந்தே மனசுல தடதடன்னு ரயில் அதிர்வு!
மனசு நிறைய
நிறையக் கெட்ட வார்த்தை வருது!
"கார்ல நீதாம் போயி
பிக் - அப் பண்ணிட்டு வரணும்டா" என்றார் அண்ணாச்சி.
•
(வெள்ளிதோறும் தொடர்கிறேன்)
91 9789987842 / 91 9445016842
storysankar@gmail.com

No comments:
Post a Comment